2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், சத்யன்
தயாரிப்பு - டிரீம் வாரியர் பிக்சர்ஸ்
இயக்கம் - கௌதம் ராஜ்
இசை - சான் ரோல்டன்
வெளியான தேதி - 5 ஜுலை 2019
நேரம் - 2 மணி நேரம் 14 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ் சினிமாவில் அரசியல்வாதிகளை விமர்சித்து தான் அதிகமான படங்கள் வந்திருக்கின்றன. அவர்களை விட்டால் கம்பெனி முதலாளிகள், பணக்காரர்கள் அடுத்த இடங்களில் இருப்பார்கள்.

அரசு ஊழியர்களைப் பற்றி விமர்சித்து எடுக்கும் படங்கள் என்றால் அதில் பெரும்பாலும் போலீசார்தான் சிக்குவார்கள். அவர்ளைத்தான் தமிழ் சினிமாவில் அதிகம் தாக்கியிருக்கிறார்கள். அதற்கடுத்து சில அரசுத் துறை அதிகாரிகளை விமர்சிப்பார்கள். ஆசிரியர்களை விமர்சித்து அதிகப் படங்கள் வந்ததில்லை.

இப்படத்தின் இயக்குனர் கௌதம் ராஜுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது அப்படி என்ன கோபமோ தெரியவில்லை. ஒருவேளை அவரை பள்ளியில் பெயில் ஆக்கிவிட்டார்களா அல்லது அவருக்கு சரியாகப் பாடம் சொல்லிக் கொடுக்கவில்லையா ?.

சமுத்திரக்கனி நடித்து 2012ம் ஆண்டு வெளிவந்த சாட்டை படத்தின் மற்றொரு வடிவம்தான் இந்த ராட்சசி. இப்படத்தின் பெண் சமுத்திரக்கனியாகத்தான் ஜோதிகா நடித்திருக்கிறார். மற்றபடி இரண்டு படங்களின் கதைகளும் ஒரே கதைதான். ராட்சசி படத்தின் இயக்குனர் கௌதம் ராஜ் சாட்டை படத்தைப் பார்த்திருந்தால் இந்தப் படத்தை எடுத்திருக்க மாட்டார். ஜோதிகாவும் அந்தப் படத்தைப் பார்த்திருந்தால் இந்தப் படத்தில் நடித்திருக்க மாட்டார்.

ஆர். புதூர் என்ற ஊரில் உள்ள அரசுப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக வருகிறார் ஜோதிகா. ஒரு பள்ளி போலவே இல்லாமல் இருக்கும் அந்தப் பள்ளியை தன் அதிரடியால் முற்றிலும் மாற்றுகிறார். ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரையும் திருத்துகிறார். 9ம் வகுப்பு பெயில் ஆன மாணவர்களுக்கும் பாஸ் போட்டு 10ம் வகுப்பு தேர்வு எழுத வைக்கிறார். அது பிடிக்காத அதே ஊரில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் ஜோதிகாவைக் கைது செய்ய வைக்கும் அளவிற்கு செல்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

திருமணத்திற்குப் பிறகு நடிக்க வந்ததும் தனக்குப் பொருத்தமான கதைகள், கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பதில் மிகக் கவனமாக இருக்கிறார் ஜோதிகா. இந்தப் படத்தில் கீதாராணி என்ற தலைமை ஆசிரியையாக கம்பீரமாக நடித்திருக்கிறார். வழக்கமான அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை தோற்றத்தில் இல்லாமல் காலர் வைத்த ஜாக்கெட், காட்டன் புடவை என தோற்றத்தில் மாற்றத்தை எற்படுத்தியிருக்கிறார். அவரது தோற்றம் யதார்த்தமாக இல்லாமல் இருக்கிறதே என்று யோசித்தால் எதிர்பார்க்காத ஒரு பிளாஷ்பேக்கைச் சொல்கிறார்கள். ஆசிரியையாக இருந்தாலும் ஆக்ஷனும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் போலிருக்கிறது. பள்ளிக்கு வரும் அரசியல் அடியாட்களை அடித்துத் துவைத்து திருப்பி அனுப்பும் காட்சியில் கைத்தட்டல் வாங்குகிறார். தன் வேலையில் நேர்மையாக இருக்கிறார், அதற்காக எதற்கு ராட்சசி எனப் பெயர் வைக்க வேண்டும் என்று தெரியவில்லை.

படம் முழுவதும் ஜோதிகதான் நிறைந்திருக்கிறார். அவர் இல்லாமல் இருக்கும் காட்சிகள் மிக மிகக் குறைவு. தனியார் பள்ளியின் நிர்வாகியாக ஹரிஷ் பெரடி. மலையாளத் தமிழில் பேசி வில்லத்தனம் செய்கிறார். அரசுப் பள்ளி ஆண்டு விழாவுக்கு பூங்கொத்தில் வெடிகுண்டு வைத்து அனுப்பியிருப்பாரோ என பதைபதைக்க வைத்து, தான் அப்படிச் செய்யும் ஆளில்லை என்று அவர் சொல்லும் போது அப்பாடா என்றிருக்கிறது.

உதவி தலைமை ஆசிரியராக கவிதா பாரதி. ஜோதிகாவை எப்படியாவது பள்ளியை விட்டு ஓட வைக்க வேண்டும் என வில்லத்தனம் செய்கிறார். லோக்கல் அரசியல்வாதியாக அருள்தாஸ். பள்ளியின் பிடி மாஸ்டராக சத்யன். மொக்கையான காமெடிகளுக்குச் சொந்தக்காரர். பூர்ணிமா பாக்யராஜை ஒரே ஒரு காட்சியில் மட்டுமே பேச வைத்தது அநியாயம். ஜோதிகாவைத் திருமணம் செய்து கொள்ளக் கேட்கும் அந்த இரண்டாம் வகுப்பு கதிர் மனதைக் கவருகிறார்.

சான் ரோல்டன் இசையில் பள்ளியின் பெருமையைப் பற்றியோ, ஏழை மாணவர்களின் படிப்புத் திறனைப் பற்றியோ அருமையான பாடல்கள் இடம் பெற்றிருக்கலாம். பின்னணி இசையில் மட்டும் கொஞ்சம் முயற்சித்திருக்கிறார்.

அவ்வளவு பெரிய அரசுப் பள்ளியில் ஜோதிகாவைத் தவிர நேர்மையான ஆசிரியர்கள் யாரும் இல்லை என்று காட்டுவது நம்பும்படியாக இல்லை. பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட நான்கைந்து ஆசிரியர்கள் இருப்பதாக ஒரு வசனத்தில் மட்டும் வருகிறது. அவர்கள் செய்யும் நல்ல விஷயங்களைக் காட்ட இயக்குனர் யோசிக்கவில்லை. தவறுகளைச் செய்யும் ஆசிரியர்களை மட்டுமே காட்ட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டிருப்பார் போலிருக்கிறது. தனியார் பள்ளி நிர்வாகியாக இருக்கும் ஹரிஷ் பெரடியைக் காட்டும் போதெல்லாம் அவரை ஒரு கம்பெனி முதலாளி போலவே காட்டுகிறார்கள். மருந்துக்குக் கூட அவரது பள்ளியுடன் ஒரு காட்சியைக் கூட வைக்கவில்லை. அதனால், அவர் பள்ளியை நடத்துகிறாரா கம்பெனியை நடத்துகிறாரா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களைக் குறை சொல்வது மட்டுமே இயக்குனரின் எண்ணமாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் இல்லாத அடிப்படை வசதிகளைப் பற்றியெல்லாம் அவர் காட்டத் தயாராக இல்லை. லட்சங்களை வாங்கும் தனியார் பள்ளிகள் எப்படி செயல்படுகின்றன என அவற்றின் அவல நிலையையும் ஒரு காட்சியிலாவது காட்டியிருக்கலாம். அப்போதுதான் அரசுப் பள்ளிகள் எவ்வளவோ பரவாயில்லை என நினைக்க வைத்திருக்கும். பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ற ஆசிரியர்கள் இல்லை, கழிப்பறை வசதிகள் இல்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை, என பல இல்லைகள் உள்ளன. அதையெல்லாம் சேர்த்துக் காட்டியிருந்தால் இயக்குனரின் நியாயம் வெளிப்பட்டிருக்கும். ஆனால், அவர் ஒரு சார்பு நிலையிலேயே கதையை நகர்த்தியிருக்கிறார்.

ராட்சசி - சாட்டை 2

 

ராட்சசி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ராட்சசி

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓