பொன்மகள் வந்தாள்,Ponmagal Vandhal

பொன்மகள் வந்தாள் - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன்
தயாரிப்பு - 2டி என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - பிரட்ரிக்
இசை - கோவிந்த் வசந்தா
வெளியான தேதி - 29 மே 2020 (அமேசான் பிரைம்)
நேரம் - 2 மணி நேரம் 3 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

தமிழ்த் திரையுலகில் முதல் முறையாக ஒரு முன்னணி நடிகை நடித்துள்ள படம் தியேட்டர்களில் வெளிவராமல், ஓடிடி தளமான அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த புதிய முறைக்கு வரவேற்பு எப்படி இருக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும். கொரானோ ஊரடங்கால் தான் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டிய சூழ்நிலை என படம் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஆனாலும், தியேட்டர்களில் பெரிய திரைகளில் படம் பார்க்கும் ஒரு அனுபவம், வீட்டில் டிவியில் பார்க்கும் போது நிச்சயம் கிடைக்க வாய்ப்பில்லை என்பது இந்தப் படத்தைப் பார்க்கும் போது நாம் அறிந்து கொண்ட உண்மை. பெரிய திரை, அதிர வைக்கும் ஒலி, தியேட்டருக்குள் கூட்டமான ரசிகர்கள், அவர்களின் ஆரவாரம் ஆகியவை வீட்டுக்குள் நாம் தனியாகவோ, குடும்பத்தாருடனோ பார்க்கும் போது கிடைக்காது.

இருந்தாலும் நேற்றே நள்ளிரவுக்கு முன்பாகவே வெளியான படத்தைப் பார்த்த போது, தியேட்டரில் பார்த்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற யோசனையுடன் பார்க்க வேண்டியதாயிற்று.

நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், ஏன் வயதானவர்களுக்கும் கூட பாலியல் தொல்லைகள் நடப்பதாக அடிக்கடி பத்திரிகைகளில் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவற்றிற்கெல்லாம் ஒரு விடிவுகாலம் கிடைக்காதா என பலர் கேள்வி எழுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பாலியல் தொல்லைகளுக்குப் பின்னால் எவ்வளவு துயரம் இருக்கிறது என்பதை இந்த பொன்மகள் உணர்வுபூர்வமாய் உருக்கமாய் சொல்கிறார்.

அறிமுக இயக்குனர் பிரட்ரிக் எடுத்துக் கொண்ட கதை மட்டும் ஓகே. அதன்பின் ஓரிரு காட்சிகளில் மட்டுமே இயக்குனரின் முத்திரை இருக்கிறது. அதோடு கிளைமாக்சில் மட்டும் எதிர்பாராத ஒரு திருப்புமுனையை வைத்து ஆச்சரியப்படுத்துகிறார்.

ஊட்டியில் சிறிய சிறிய பிரச்சினைகளுக்கெல்லாம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பெட்டிஷன் பெத்துராஜ் எனப் பெயரெடுத்தவர் பாக்யராஜ். 2004ம் ஆண்டு பல சிறுமிகளைக் கடத்திக் கொன்றதாகவும், இரண்டு இளைஞர்களை சுட்டுக் கொன்றதாகவும், ஒரு வட இந்தியப் பெண் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு வழக்கை பாக்யராஜ் மகளான வழக்கறிஞர் ஜோதிகா தன் முதல் வழக்காக மீண்டும் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு கொண்டு வருகிறார். தங்கள் குழந்தைகளைப் பறி கொடுத்த மக்கள் ஒரு கொலைக் குற்றவாளிக்கு ஆதரவளிப்பதா என ஜோதிகாவுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள். ஆனால், ஜோதிகா அந்த வட இந்தியப் பெண் மகள் தான் தான் என நீதிமன்றத்தில் சொல்லி ஊர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி தொடர்ந்து வழக்காடுகிறார். உண்மைக் குற்றவாளி யார் என்பதை எப்படி இந்த உலகத்திற்குக் காட்டுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.

திருமணத்திற்குப் பின்பு நடிக்க வந்த ஜோதிகா சமூகப் பிரச்சினைகள் சார்ந்த கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அப்படிப்பட்ட ஒரு முக்கியமான பிரச்சினையை எதிர்கொள்ளும் வெண்பா என்ற வழக்கறிஞராக நடிப்பில் வெளுத்து வாங்கி இருக்கிறார். எதிரில் அனுபவம் வாய்ந்த வக்கீல், கொலைகளுக்குப் பின்னணியில் உள்ள மிகப் பெரும் புள்ளி என இருந்தாலும் தன் வாதத்தை எடுத்து வைக்கும் விதத்தில் அவர் நடிப்பு மிரட்டலாக உள்ளது. அதிலும் கிளைமாக்சில் அவர் யாருக்காக நீதிமன்றத்தில் போராடினார் என்பதைத் தெரிந்து கொள்ளும் போது அந்தக் கதாபாத்திரத்தின் மீது ஒரு மதிப்பு வந்துவிடுகிறது. சொந்தக்குரலில் பேசும் போது சில வார்த்தைகளின் உச்சரிப்பை மட்டும் ஜோதிகா சரி செய்து கொள்ள வேண்டும்.

ஜோதிகாவைச் சுற்றியும், ஒரே ஒரு நீதிமன்றத்தைச் சுற்றியுமே மொத்த படமும் நகர்கிறது. சென்னையிலிருந்து ஊட்டிக்கு வந்து பெரும் புள்ளியான தியாகராஜனுக்கு ஆஜராகும் வக்கீலாக பார்த்திபன்தான் அடிக்கடி கலகலப்பூட்டுகிறார். ஆனாலும், நீதிபதி சொல்வதை நான் அனுமதிக்க மாட்டேன் என்று வாதிடுவதெல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்கும்.

அமைதியாக, சாந்தமாக வந்து போகும் வில்லனாக தியாகராஜன். நீதிமன்றத்தில் அவருக்கும் ஜோதிகாவுக்கும் நடக்கும் வாதம்தான் படத்தில் அனல் பறக்கும் ஒரே காட்சி. இருவருமே அந்தக் காட்சியில் முகம் துடிக்க நடித்திருக்கிறார்கள். இதே தியேட்டராக இருந்தால் அந்தக் காட்சிக்கு கைத்தட்டல் அதிகம் ஒலித்திருக்கும்.

ஜோதிகாவின் அப்பாவாக பாக்யராஜ். மக்களுக்கு நல்லதை செய்ய நினைக்கும் ஒரு சமூக ஆர்வலர். எவ்வளவு தேவையோ அவ்வளவு நடித்திருக்கிறார். பாண்டியராஜன் ஓரிரு காட்சிகளில் மட்டும் வருகிறார். பிரதாப்போத்தன் நீதிபதியாக நடித்திருக்கிறார்.

கோவிந்த் வசந்தா உணர்வுபூர்மான 96 படத்திற்கு இசையமைத்ததைப் போல இந்தப் படத்திற்கும் இசையமைப்பார் என்று எதிர்பார்த்திருப்பார்கள் போலிருக்கிறது. ஆனால், அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை போலும். உயிரோட்டமான காட்சிகளுக்குக் கூட தன் பின்னணி இசையயில் உயிர் தர முடியாமல் தடுமாறி இருக்கிறார். ஊட்டியில் நடக்கும் கதை என்றாலும் நீதிமன்றத்திற்குள்தான் பெரும்பாலான காட்சிகள் இருக்கிறது. ராம்ஜி ஒளிப்பதிவு என டைட்டிலில் வருகிறது.

தாமதமாகக் கிடைக்கும் நீதியும் அநீதிதான் என்பதைச் சொல்ல வரும் படம். கூடவே, பெண் குழந்தைகளை மட்டும் சொல்லிச் சொல்லி வளர்க்காதீர்கள், ஆண் குழந்தைகளையும் சொல்லிச் சொல்லி வளருங்கள் என்கிறார்கள். நல்ல கருத்து, நல்ல கதை அதை சினிமாவாக்கும் முயற்சில் முழு வெற்றி பெறவில்லை இயக்குனர் பிரட்ரிக். இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் வெளிவந்த நீதிமன்றம் சம்பந்தப்பட்ட படங்களைப் பார்த்தாவது ஒரு விறுவிறுப்பான படத்தை எப்படி கொடுக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளலாம்.

பொன்மகள் வந்தாள் - பொன்மகள் ஆனால் 18 கேரட்....

 

பட குழுவினர்

பொன்மகள் வந்தாள்

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓