
திருவின் குரல்
விமர்சனம்
தயாரிப்பு - லைக்கா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ஹரிஷ் பிரபு
இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - அருள்நிதி, பாரதிராஜா, ஆத்மிகா
வெளியான தேதி - 14 ஏப்ரல் 2023
நேரம் - 2 மணி நேரம்
ரேட்டிங் - 2.75/5
ஒரே மாதிரியான 'மெடிக்கல் மாபியா' படங்கள் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வந்துள்ளன. மனித உறுப்புகள் திருட்டு, மருத்துவமனைகளில் நடக்கும் குற்றங்கள், அவற்றைச் செய்யும் டாக்டர்கள் பற்றியவைதான் அந்தப் படங்களின் கதையாக இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் அரசு மருத்துவமனையில் கடைநிலை ஊழியர்களாக வேலை பார்க்கும் சிலரை வில்லன்களாகச் சித்தரித்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஹரிஷ் பிரபு.
அரசு மருத்துவமனைகளில் அப்படிப்பட்ட ஊழியர்கள் அதிகபட்சமாக 50 ரூ, 100 ரூ என 'டிப்ஸ்' வாங்குபவர்களாக இருப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் அவர்களை கொலைகாரர்களாக, காமவெறி பிடித்தவர்களாக, கொள்ளையடிப்பவர்களாகக் காட்டி பயமுறுத்துகிறார் இயக்குனர். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அரசு மருத்துவமனைகளுக்குச் செல்பவர்கள் கொஞ்சம் பயத்துடனேயேதான் செல்வார்கள்.
சிவில் இஞ்சினியரிங் முடித்தவர் அருள்நிதி, வாய் பேச முடியாதவர், அருகில் பேசுவது மட்டும் கேட்கும். காண்டிராக்டரான அப்பா பாரதிராஜாவுக்கு உதவியாக இருக்கிறார். ஒரு நாள் கட்டிட வேலையில் சிமெண்ட் மூட்டை விழுந்து பாராதிராஜாவுக்கு தலையில் அடிபட அரசு மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அங்கு லிப்ட் ஊழியராக வேலை பார்க்கும் அஷ்ரப் உடன் அருள்நிதிக்கு மோதல் ஏற்படுகிறது. லிப்ட் ஊழியர் அஷ்ரப், வார்டு பாய் ஜீவா, செக்யூரிட்டி ஹரிஷ் சோமசுந்தரம், மார்ச்சுவரி ஊழியர் மகேந்திரன் ஆகியோர் பகலில் மருத்துவமனையில் வேலை செய்துவிட்டு, இரவில் கொலை, கொள்ளை போன்ற குற்றங்களைச் செய்யும் கொடூரமானவர்கள். நால்வருமே அருள்நிதியால் அதிகம் பாதிக்கப்பட அவரது அப்பா பாரதிராஜாவுக்கு விஷ ஊசி ஒன்றைப் போடுகிறார்கள். கடும் அவதிக்குள்ளாகிறார் பாரதிராஜா. இது பற்றி அருள்நிதிக்கு தெரிய வந்ததா ? அப்பாவைக் கொல்லத் துடிக்கும் அவர்களைப் பழி வாங்கினாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
சென்டிமென்ட் என்றால் கூட அதை ஓரளவிற்கு நம்மால் தாங்க முடியும். இந்தப் படத்தில் அதீதமான சென்டிமென்ட் காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர். அது மட்டுமல்ல அந்த நால்வர் கூட்டணி செய்யும் விஷயங்கள் ஒவ்வொன்றும் நமக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் அளவில் காட்சியை அமைத்திருக்கிறார்.
மாற்றுத் திறனாளி கதாபாத்திரத்தில் முகபாவங்களில் தனது நடிப்பை நிறைவாய் வெளிப்படுத்தி இருக்கிறார் அருள்நிதி. அதிகப்படியான கோபம் ஏற்படக் கூடிய ஒரு கதாபாத்திரம். வில்லன்களை, அவர்கள் அனுப்பும் ஆட்களை அவர் அடிக்கும் காட்சிகள் மிரட்டலாக உள்ளன. ஆக்ஷன் இயக்குனருக்கு அதற்கு பாராட்டுக்களைச் சொல்ல வேண்டும். ஒரு பக்கம் அப்பா மீதான சென்டிமென்ட், மறு பக்கம் தங்களது குடும்பத்தைத் துன்புறுத்தும் அந்த வில்லன்களுடன் ஆக்ஷன் என இரண்டிலும் அருள்நிதி தான் மொத்த படத்தையும் தாங்குகிறார்.
பாரதிராஜாவை படம் முழுவதும் பரிதாபப்படும் அளவிற்கு படுத்த படுக்கையாக்கி இருக்கிறார் இயக்குனர். அவர் வலியால் துடிக்கும் போது அந்த வயதில் அப்பா உடையவர்களுக்கும் மனதில் ஒரு வலி வந்து போகும். அருள்நிதியின் அத்தைப் பெண்ணாக ஆத்மிகா, ஒரே ஒரு டூயட்டுடனும், ஆரம்பத்தில ஒரு சில காதல் காட்சிகளுடனும் அவருக்கான வேலை முடிந்து போகிறது. அதன்பின் அவ்வப்போது வந்து போகிறார்.
வில்லன்களில் லிப்ட் ஊழியராக நடிக்கும் அஷ்ரப் தான் மெயின் வில்லன். வயதான தோற்றத்தில் ஒரு காமவெறியன். அவரைப் பார்த்தாலே நமக்கும் எரிச்சல் வரும் அளவிற்கு நடித்திருக்கிறார். அவருக்குக் கூட்டணியாக ஜீவா, ஹரிஷ், மகேந்திரன் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் அவர்கள் மீது கோபம் வரும் அளவிற்கு நடித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஊழியர்கள் எல்லாம் மருத்துவமனையில் நிஜமாகவே இருந்தால் என்ன ஆவது ?.
அரசு மருத்துவமனையைச் சுற்றித்தான் அதிகமான காட்சிகள் இருக்கிறது. நிஜமான அரசு மருத்துவமனை எப்படி இருக்குமோ அந்த ஒரு காட்சியமைப்பை படத்தில் கொடுத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் சின்டோ பொடுதாஸ் குளோசப் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். சாம் சிஎஸ் பின்னணி இசையின் தரம் படத்திற்குப் படம் உயர்ந்து கொண்டே போகிறது.
படத்தின் ஆரம்பக் காட்சிகள் ஒரு யதார்த்தமான படத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற உணர்வைத் தருகிறது. போகப் போக அது கமர்ஷியல் பாதைக்கு மாறிவிடுகிறது. ஆங்காங்கே லாஜிக் காணாமல் போகிறது. படத்தில் பெயருக்கு போலீஸ் வந்து போகிறது, கிளைமாக்சில் கூட வரவில்லை. திடீரென வில்லன்கள் இடத்திற்கே வந்து படத்தை முடித்து வைக்கிறார் அருள்நிதி. அங்கு எப்படி வந்தார் என்றெல்லாம் இயக்குனர் சொல்லவேயில்லை. இயல்பான சென்டிமென்ட் படமாகக் கொடுப்பதா, கமர்ஷியல் ஆக்ஷன் படமாகக் கொடுப்பதா என இயக்குனர் கொஞ்சம் குழம்பிப் போயிருக்கிறார். அந்தக் குழப்பம் இல்லாமல் இருந்திருந்தால் 'திருவின் குரல்' இன்னும் சத்தமாய் கேட்டிருக்கும்.
திருவின் குரல் - பாசக் குரல்
திருவின் குரல் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
திருவின் குரல்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்