கண்ணை நம்பாதே
விமர்சனம்
தயாரிப்பு - லிபி சினி கிராப்ட்ஸ்
இயக்கம் - மாறன்
இசை - சித்துகுமார்
நடிப்பு - உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா, பிரசன்னா, ஸ்ரீகாந்த்
வெளியான தேதி - 17மார்ச் 2023
நேரம் - 2 மணி நேரம் 13 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய மாறன் ஒரு இடைவெளிக்குப் பிறகு தனது அடுத்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படமும் ஒரு த்ரில்லர் படம்தான். ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு பரபரப்புடன் திரைக்கதை நகர்வதால் படத்தை ரசிக்க முடிகிறது.
உதயநிதி ஸ்டாலின் ஒரு பேச்சுலர். பிரசன்னா தங்கியிருக்கும் வீட்டில் இவரும் இணைந்து தங்குகிறார். அன்று இரவு அவர்கள் வெளியில் சென்ற போது காரை ஓட்ட முடியாமல் தவிக்கிறார் பூமிகா. அவருக்கு உதயநிதி உதவி செய்து அவரை வீட்டிற்குக் கொண்டு போய்விடுகிறார். பூமிகாவின் வற்புறுத்தலால் அந்த காரிலேயே திரும்பவும் தனது வீட்டிற்குத் திரும்புகிறார். மறுநாள் எழுந்து காரை பூமிகா வீட்டில் விடலாம் என உதயநிதி கிளம்புகிறார். கார் டிக்கியை அவர் திறந்து பார்க்க அதில் பூமிகா பிணமாகக் கிடக்கிறார். இரவில் வீட்டில் விட்டவர், இப்போது எப்படி காரில் பிணமாக இருக்கிறார் என தவிக்கிறார் உதயநிதி. பிரசன்னாவிடம் என்ன செய்யலாம் என ஆலோசிக்கிறார். இதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.
ஒரு மர்ம நாவல் படிப்பது போல அடுத்தடுத்த திருப்பங்களுடன் படம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத விதத்தில் திரைக்கதை அமைந்திருக்கிறது. கிளைமாக்சில் நாம் எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். 'கண்ணால் காண்பது பொய்' என்பதுதான் 'கண்ணை நம்பாதே'.
உதயநிதி படம் முழுவதும் ஒரு இறுக்கமான முகத்துடனேயே இருக்கிறார். தன் மீது எந்த ஒரு கொலைப்பழியும் வந்துவிடக் கூடாதென்ற பதட்டம்தான் அதற்குக் காரணம். பிரசன்னா என்ன சொல்கிறாரோ அதன்படியே நடந்து தொடர்ந்து சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். ஒரு கொலையிலிருந்து தப்பிக்க நினைத்தால் அடுத்தடுத்து வெவ்வோறு விதமான பிரச்சினைகளில் இருவரும் சிக்கிக் கொள்கிறார்கள். ஆரம்பம் முதல் ஒரு சராசரி இளைஞனாக இருப்பவர் கிளைமாக்சில் திடீரென ஆக்ஷன் ஹீரோவாக மாறுவதைத்தான் நம்ப முடியவில்லை.
உதயநிதியின் காதலியாக ஆத்மிகா. கதையில் ஒரு கதாநாயகி இருக்க வேண்டுமென வைத்திருக்கிறார்கள். ஒரு குட்டி பிளாஷ்பேக்கில் அவர்கள் காதல் கதை முடிந்துவிடுகிறது.
உதயநிதி கூடவே படம் முழுவதும் வருகிறார் பிரசன்னா. அவரது கதாபாத்திரத்தின் திருப்பம் நாம் சற்றும் எதிர்பாராதது. கூடவே இருப்பவர்களையும் நம்பக் கூடாது என்பதற்கு இந்தக் கதாபாத்திரம் சிறந்த உதாரணம். படத்தின் வில்லனாக ஸ்ரீகாந்த். ஆனால், அவரது கதாபாத்தரம் படத்தில் நீண்ட நேரம் கழித்தே வருகிறது. உதயநிதியின் நண்பனாக சதீஷ். ஆரம்பத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். அதன்பின் படத்தில் காணாமல் போய்விடுகிறார். பூமிகாவின் கதாபாத்திரமும் ஒரு முக்கியமான கதாபாத்திரம். சுபிக்ஷா, வசுந்தரா, மாரிமுத்து, சென்ராயன் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள்.
சித்துகுமார் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. படத்தில் இரவு நேரக் காட்சிகள் அதிகம். அதில் ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவு குறிப்பிடும்விதத்தில் அமைந்திருக்கிறது.
இந்தக் காலத்தில் சென்னையின் பல இடங்களில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டுள்ளது. பூமிகாவின் காரிலேயே சென்னையின் பல இடங்களில் உதயநிதியும், பிரசன்னாவும் சுற்றுகிறார்கள். எந்த ஒரு இடத்திலும் அவர்கள் மாட்டாமல் சுற்றுவது லாஜிக் மீறலாக உள்ளது. ஒரு கார்பார்க்கிங்கில் துப்பாக்கி சூடெல்லாம் நடக்கிறது. அங்கெல்லாம் கூட சிசிடிவி கண்டிப்பாக இருக்கும். தனது மகன் விபத்தில் இறக்கவில்லை என சந்தேகப்படும் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து அதன்பின் அதற்கான விசாரணையில் ஈடுபட்டதாகவே தெரியவில்லை. இப்படி சில பல கேள்விகள் படத்தில் உண்டு. ஒரு த்ரில்லர் படங்களில் அப்படியான கேள்விகள் எழவே கூடாது.
கண்ணை நம்பாதே - ஏமாற்றவில்லை…
கண்ணை நம்பாதே தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
கண்ணை நம்பாதே
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்
உதயநிதி ஸ்டாலின்
திமுக தலைவர் கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் எனும் அடையாளத்தோடு ஒரு தயாரிப்பாளராக சினிமாவில் அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். குருவி, ஆதவன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த உதயநிதி, ராஜேஷ்.எம் இயக்கிய, ''ஒரு கல் ஒரு கண்ணாடி'' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அப்படம் வெற்றி பெறவே தொடர்ந்து இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா படங்களில் நடித்தார். தயாரிப்பாளர், நடிகர், விநியோகஸ்தர் எனும் மூன்று அடையாளங்களோடு தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.