நெஞ்சுக்கு நீதி,Nenjuku Needhi

நெஞ்சுக்கு நீதி - சினி விழா ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஜி ஸ்டுடியோஸ், பே வியு புராஜக்ட்ஸ், ரோமியோ பிக்சர்ஸ்
இயக்கம் - அருண்ராஜா காமராஜ்
இசை - திபு நினன் தாமஸ்
நடிப்பு - உதயநிதி ஸ்டாலின், தன்யா, ஷிவானி
வெளியான தேதி - 20 மே 2022
நேரம் - 2 மணி நேரம் 20 நிமிடம்
ரேட்டிங் - 3/5

ஹிந்தியில் 2019ம் ஆண்டு வெளிவந்து விமர்சகர்களிடம் வரவேற்பைப் பெற்ற 'ஆர்டிகிள் 15' படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த 'நெஞ்சுக்கு நீதி'.
“ஒரு இந்தியக் குடிமகனுக்கு சாதி, மதம், இனம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படக் கூடாது,” என்பதுதான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இடம் பெற்றுள்ள 'ஆர்டிகிள் 15'.

நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்கள் ஆன பிறகும் உள்ள சாதிய ஏற்றத் தாழ்வுகளை இந்த 'நெஞ்சுக்கு நீதி' படம் சொல்லியிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பால் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பொள்ளாச்சி பாலியல் வழக்கு. அந்தக் காரணத்தால் இந்தப் படத்தின் கதைக் களமாக பொள்ளாச்சியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

பொள்ளாச்சி வட்டத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தில் தலித் சிறுமிகள் மூவர் காணாமல் போகிறார்கள். அதில் இரண்டு சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தொங்கவிடப்பட்டு இருக்கிறது. ஒரு சிறுமி என்ன ஆனார் என்பது தெரியவில்லை. கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்கும் உதயநிதி ஸ்டாலின் அந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார். அவரை அந்த வழக்கை விசாரிக்க விடாமல் மேலதிகாரியான காவல் துறை கண்காணிப்பாளரும், கீழதிகாரியான சர்க்கிள் இன்ஸ்பெக்டரும் அழுத்தம் கொடுக்கிறார்கள். மூன்று சிறுமிகளின் விவகாரத்தில் அமைச்சரின் அக்கா மகன் சம்பந்தப்பட்டிருப்பார் என்ற சந்தேகத்தில் விசாரிக்க ஆரம்பிக்கிறார் உதயநிதி. குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடித்தாரா, காணாமல் போன சிறுமியை கண்டுபிடித்தாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு த்ரில்லர் படமாகக் கொடுக்க வேண்டிய கதையை சாதிய பாகுபாடுகள் இங்கு எப்படி இருக்கிறது என்பதைக் காட்டும் படமாகக் கொடுக்க நிறையவே மெனக் கெட்டிருக்கிறார்கள். அந்த சிறுமிகளின் வழக்கு விசாரணையையும் மீறி சாதிய பிரச்சினைகளைத்தான் திரைக்கதை, வசனத்தில் அதிகம் சேர்த்திருக்கிறார்கள். ஒரு ரீமேக் படமாகப் பார்க்க முடியாத அளவிற்கு நம் ஊர் படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த கதைக்களம், கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் அவருக்கு கூடுதல் தாக்கத்தைக் கொடுத்திருக்கிறது.

உதயநிதி ஸ்டாலினின் அரசியல் இமேஜை எந்த அளவிற்கு உயர்த்த முடியுமோ அந்த அளவிற்கு வசனங்கள் மூலம் அவருடைய கதாபாத்திரத்தை உயர்த்தி வைக்க முயற்சித்திருக்கிறார்கள் இயக்குனரும் வசனகர்த்தாவும். இதற்கு முந்தைய திரைப்படங்களில் கலகலப்பாகவே பார்த்த உதயநிதியை இந்தப் படத்தில் சீரியசான கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு புதிதாக இருக்கிறது. ஐபிஎஸ் முடித்து முதல் பணியிடத்தை விட்டு மாற்றலாகி இரண்டாவது பணியிடமாக பொள்ளாச்சிக்கு வருகிறார். வெளிநாட்டிலேயே படித்து வளர்ந்தவருக்கு, இந்த ஊரின் சாதிய அமைப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அதைப் புரிந்து கொண்டு சட்டம் தன் கடமையைச் செய்யும் என சட்டத்திற்காகக் பாடுபடும் நேர்மையான அதிகாரியாக நடித்திருக்கிறார் உதயநிதி. அவர் பேசும் வசனங்கள் மூலமே அவருடைய ஹீரோயிசத்திற்கு நிறைய பில்டப் கொடுத்திருக்கிறார்கள். அது யதார்த்தத்தை மீறி போய்விடுவதுதான் இந்தப் படத்திற்கான ஒரு நெகட்டிவ்வாக அமைகிறது என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். முழு படத்திலும் உதயநிதிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

உதயநிதியின் மனைவியாக தன்யா ரவிச்சந்திரன். கணவன், மனைவி இருவரும் போனில் உரையாடும் காட்சிகள்தான் படத்தில் இருக்கிறது. கிளைமாக்சில் மட்டும் நேரில் வருகிறார் தன்யா. காணாமல் போன தன் தங்கைக்காகப் போராடும் கதாபாத்திரத்தில் ஷிவானி ராஜசேகர். அக்கதாபாத்திரத்தில் யதார்த்த தோற்றத்தில் முத்திரை பதிக்கிறார். சில காட்சிகளில் வந்தாலும் ஆரி அர்ஜுனன் அவரது கதாபாத்திரத்தைப் பேச வைக்கிறார்.

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி. தவறு செய்பவர்களுக்கு துணையாக இருக்கும் ஒரு கதாபாத்திரம். கடைசியில் அவருடைய கதாபாத்திரத்தில் வரும் ஒரு திருப்புமுனை நாம் சிறிதும் எதிர்பாராத ஒன்று. சப்--இன்ஸ்பெக்டராக இளவரசு. உதயநிதிக்குப் பிறகு படத்தில் அதிகம் வரும் கதாபாத்திரங்கள். படத்தின் முக்கிய வில்லனாக அரசியல்வாதியாக படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ராகுல்.

திபு நினன் தாமஸ் இசையில் கதையுடன் ஒட்டிய இரண்டு பாடல்கள். பின்னணி இசையில் தனி கவனம் செலுத்தியிருக்கிறார். சினிமாவில் அழகான பொள்ளாச்சியை மட்டுமே பார்த்த நமக்கு பொள்ளாச்சியின் மற்றொரு பக்கத்தைக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். படம் கொஞ்சம் மெதுவாக நகர்வதை எடிட்டர் கவனித்திருக்கலாம்.

இது வழக்கமான ஒரு மசாலா திரைப்படமல்ல. தலித் மக்களின் பிரச்சினைகளையும், அவர்களைச் சுற்றிய அரசியலைப் பற்றியும் பேசும் ஒரு படம். ஒரு பக்கம் தலித் மக்கள் படித்து முன்னேறியிருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறார்கள், மற்றொரு பக்கம் அவர்கள் இன்னமும் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறார்கள். எந்த ஒரு சாதியையும் விமர்சிக்கக் கூடாது என சொல்லும் படத்தில் மேல் சாதி என்று குறிப்பிடப்படுபவர்களையும் விமர்சிப்பது சரியா என்ற கேள்வியும் எழுகிறது. எதை நோக்கி படத்தைக் கொண்டு செல்வதில் ஒரு குழப்பம் தெரிகிறது. ஒரே ஒரு மையப்புள்ளியை மட்டும் நோக்கி திரைக்கதை நகர்ந்திருந்தால் இந்தப் படம் நெஞ்சுக்குள் இடம் பெறும் படமாக அமைந்திருக்கும்.

நெஞ்சுக்கு நீதி - கொஞ்சம் குறையுடன் நிறையும்…

 

நெஞ்சுக்கு நீதி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

நெஞ்சுக்கு நீதி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

உதயநிதி ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் எனும் அடையாளத்தோடு ஒரு தயாரிப்பாளராக சினிமாவில் அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். குருவி, ஆதவன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த உதயநிதி, ராஜேஷ்.எம் இயக்கிய, ''ஒரு கல் ஒரு கண்ணாடி'' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அப்படம் வெற்றி பெறவே தொடர்ந்து இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா படங்களில் நடித்தார். தயாரிப்பாளர், நடிகர், விநியோகஸ்தர் எனும் மூன்று அடையாளங்களோடு தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

மேலும் விமர்சனம் ↓