மாயோன்
விமர்சனம்
தயாரிப்பு - டபுள் மீனிங் புரொடக்ஷன்
இயக்கம் - கிஷோர்
இசை - இளையராஜா
நடிப்பு - சிபிராஜ், தான்யா ரவிச்சந்திரன்
வெளியான தேதி - 24 ஜுன் 2022
நேரம் - 2 மணி நேரம் 13 நிமிடம்
ரேட்டிங் - 3/5
தொல்லியல் துறை, கோயில் பின்னணி, புதையல் என தமிழ் சினிமாவில் இதுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும். புதிய கதைக்களத்தில் ஒரு பரபரப்பான படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கிஷோர்.
மாயோன் மலை என்ற பகுதியில் உள்ள பழங்கால கிருஷ்ணர் கோயிலை இந்திய தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்து ஆய்வு செய்கிறது. அந்த ஆய்வுக்கு தொல்லியல் துறை அதிகாரியான கேஎஸ் ரவிக்குமார் தலைமை வகிக்கிறார். ஆனால், அவரது கீழ் வேலை பார்க்கும் ஹரிஷ் பெரடி, சிபிராஜ் இருவரும் சேர்ந்து அந்தக் கோயிலில் இருக்கும் ரகசிய அறையில் உள்ள புதையலை எடுத்து வெளிநாட்டிற்குக் கடத்த நினைக்கிறார்கள். அந்த புதையல் அறை எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் முயற்சி செய்கிறார்கள். திட்டமிட்டபடி அவர்களால் அதைச் செய்ய முடிந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் கதைக்களம் அந்த மாயோன் மலை, கிருஷ்ணர் கோயில் ஆகிய இடங்களை மட்டுமே சுற்றி நகர்கிறது. இருப்பினும் அதற்குள்ளாகவே எந்த அளவிற்கு விறுவிறுப்பைக் கொடுக்க முடியுமா அதைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். கோயிலும் அதைச் சுற்றிய இடங்களுமே ஒரு மிரட்சியைக் கொடுக்கிறது. எது நிஜ கோயில், எது செட் எனத் தெரியாதபடி கலை இயக்குனரும் உழைத்திருக்கிறார்.
தொல்லியல் துறையில் ஆராய்ச்சியாளராக சிபிராஜ். எந்த ஒரு பழங்காலப் பொருளையும் அதைப் பார்த்ததுமே அது பற்றிய விவரங்களை சொல்லும் திறமை படைத்தவர். அப்படிப்பட்டவர் கோயில் புதையலைக் கண்டுபிடிப்பதும், அதைக் கடத்துவதுமான செயலில் ஈடுபடுகிறார் என்பதை நம்ப முடியவில்லை. கடைசியில் அவரது கதாபாத்திரத்தில் இயக்குனர் வைத்துள்ள ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று. தன் கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நடித்திருக்கிறார் சிபிராஜ்.
சிபிராஜுக்கு ஜோடி என்பதால் படத்தின் கதாநாயகி என தான்யா ரவிச்சந்திரனைச் சொல்லலாம். கதாநாயகிக்கென தனி முக்கியத்துவம் எதுவும் இல்லை. முக்கிய வில்லனாக ஹரிஷ் பெரடி. இதற்கு முந்தைய படங்களில் என்ன செய்தாரோ அதையே இந்தப் படத்திலும் செய்திருக்கிறார். தொல்லியல் துறை அதிகாரியாக கேஎஸ் ரவிக்குமார், ஊர் பெரிய மனிதராக ராதாரவி, சக ஆராய்ச்சியாளராக பகவதி பெருமாள் ஆகியோரது கதாபாத்திரங்களும் குறிப்பிடும்படி உள்ளன.
இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலம். அவரது இசையில் 'மாயோனே மணிவண்ணா' பாடல் ரஞ்சனி, காயத்ரி குரலில் தெய்வீக கானமாய் ஒலிக்கிறது. கோயிலை பல வித கோணங்களில் எடுத்து மிரள வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத்.
மேக்கிங்கில் இன்னும் பிரம்மாண்டத்தையும், கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் காட்சிகளில் கூடுதல் தரத்தையும் காட்டியிருந்தால் படத்தின் மீதான மதிப்பை அதிகப்படுத்தியிருக்கும். அதில் படக்குழு இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
மாயோன் - மாய உலகம்