ரசவாதி
விமர்சனம்
தயாரிப்பு - டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி, சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ்
இயக்கம் - சாந்தகுமார்
இசை - தமன்
நடிப்பு - அர்ஜுன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன், சுஜித் சங்கர்
வெளியான தேதி - 10 மே 2024
நேரம் - 2 மணி நேரம் 28 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
ஒரு நாயகன், ஒரு நாயகி, ஒரு வில்லன், ஒரு பிளாஷ்பேக் அவ்வளவுதான் இந்தப் படத்தின் கதை. ஒவ்வொருவருக்கும் தனித்துவமான கதாபாத்திர அமைப்பு. பிளாஷ்பேக்கில் நாயகனுக்கும் வில்லனுக்குமான தொடர்பு என எளிமையான திரைக்கதையுடன் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சாந்தகுமார்.
கொடைக்கானலில் சித்த மருத்துவராக இருப்பவர் அர்ஜுன் தாஸ். பெங்களூருவிலிருந்து அந்த ஊருக்கு ஹோட்டல் வேலைக்கு வருபவர் தன்யா ரவிச்சந்திரன். இருவரது சந்திப்பும், போகப் போக காதலாக மாறுகிறது. கொடைக்கானலுக்கு இன்ஸ்பெக்டராக மாற்றலாகி வருகிறார் சுஜித் சங்கர். கையில் அர்ஜுன் தாஸ் போட்டோவை வைத்துக் கொண்டு அவரை பழி வாங்கத் துடிக்கிறார் சுஜித். இருவருக்குமான தொடர்பு என்ன, பகை என்ன என்பதை விளக்குகிறது மீதிப் படம்.
படத்தின் ஆரம்பத்தில் சப் இன்ஸ்பெக்டர் சுஜித் சங்கரை அவரது இன்ஸ்பெக்டர் மிரட்டுகிறார். தன்னையே மிரட்டும் இன்ஸ்பெக்டரைக் கொலை செய்கிறார் சப் இன்ஸ்பெக்டர் சுஜித். கொடைக்கானலில் மலைப்பாதையில் யாரோ குடித்து விட்டு போட்டுச் சென்ற மது பாட்டில்களை சேகரிப்பதோடு, அப்படியெல்லாம் போடக்கூடாது என அட்வைஸ் செய்யும் நல்லவராக அர்ஜுன் தாஸ். இப்படி வில்லன் யார், கதாநாயகன் யார் என்பதை ஆரம்பத்திலேயே அவர்களது குணாதிசயங்களுடன் காட்டிவிட்டு பின்னர் அவர்களை மோதவிடுகிறார் இயக்குனர்.
சித்தமருத்துவர் சதாசிவபாண்டியன் ஆக அர்ஜுன் தாஸ். வளைந்த கால்கள், நடக்கக் கொஞ்சம் சிரமம், தலையில் மங்கி குல்லா, தாடி என வழக்கத்திற்கு மாறான தோற்றத்தில் காட்டப்படும் ஒரு நல்லவர். இப்படிப்பட்ட ஒரு நல்லவரை இன்ஸ்பெக்டர் சுஜித் சங்கர் ஏன் எதிர்க்கிறார் எனத் தெரிய வரும் போது கொஞ்சம் அதிர்ச்சிதான். அந்த சஸ்பென்ஸ் என்ன என்பதுதான் படத்தின் சுவாரசியம். அர்ஜுன் தாஸ் இந்தப் படத்தில் அடக்கியே வாசித்திருக்கிறார். எந்த இடத்திலும் இயல்பை மீறாத ஒரு நடிப்பு.
பெங்களூருவில் நேர்ந்த மோசமான அனுபவத்தால் கொடைக்கானல் ரிசார்ட்டில் மேனேஜர் ஆக வந்து சேர்கிறார் தன்யா ரவிச்சந்திரன். அர்ஜுன் தாஸை பார்த்த பின் சீக்கிரத்திலேயே காதலில் விழுந்துவிடுகிறார். ஆனாலும், இவரை கஞ்சா குடிப்பவராகக் காட்டியிருப்பதன் காரணம் என்னவோ ?. இயக்குனர்தான் சொல்ல வேண்டும்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் பார்த்த சைக்கோ வில்லனாக சுஜித் சங்கர். அவருடைய முழியும் பார்வையும் மிரட்டலாய் அமைந்துள்ளது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு அர்ஜுன் தாஸைத் தேடி வந்து பழி வாங்குவதன் காரணம் தெளிவாக சொல்லப்படவில்லை.
மற்றொரு கதாநாயகியாக ரேஷ்மா வெங்கடேஷ். துறுதுறுப்பாகவும், அழகாகவும் இருக்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் பதியும் ஒரு கதாபாத்திரம்.
க்ரைம் திரில்லர் கதை போல வந்தாலும் ஒளிப்பதிவில் அதிக மிரட்டல்கள் இல்லாமல் கதையின் பாதையில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சரவணன் இளவரசு. தமனின் பின்னணி இசை படத்தில் பல இடங்களில் ரசிக்க வைக்கிறது. அந்த மான்டேஜ் இசை, அற்புதம்.
படம் மிக மெதுவாக நகர்வது ஒரு குறை. அர்ஜுன் தாஸ், சுஜித் சங்கர் இடையிலான பகை வேறு ஏதோ ரூபத்தில் வரப் போகிறது என்று எதிர்பார்த்தால் அது வழக்கமான காதல் பிளாஷ்பேக்கில் முடிகிறது. ஒரு சைக்கோ இன்ஸ்பெக்டர் பற்றி டிபார்ட்மென்ட்டுக்குத் தெரியாமலா இருக்கும். இப்படியாக சில கேள்விகள் ஆங்காங்கே வந்து போகிறது.
ரசவாதி - காதல்வாதி…