போர்,Por

போர் - சினி விழா ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - டி சீரிஸ், ரூக்ஸ் மீடியா
இயக்கம் - பிஜாய் நம்பியார்
இசை - ஹரிஷ் வெங்கட், சச்சிதானந்த் சங்கரநாராயணன், கௌரவ் காட்கிண்டி
நடிப்பு - அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், சஞ்சனா நடராஜன், டிஜே பானு
வெளியான தேதி - 1 மார்ச் 2024
நேரம் - 2 மணி நேரம் 34 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

ஒரு பல்கலைக்கழகத்தில் சீனியர் மாணவர் ஒருவருக்கும், ஜுனியர் மாணவர் ஒருவருக்கும் இடையே நடக்கும் 'ஈகோ' மோதல்தான் படத்தின் மையக் கதை. கூடவே, வாரிசு அரசியல், சாதி, காதல், நட்பு என கலந்துகட்டி அடித்திருக்கிறார் இயக்குனர் பிஜாய் நம்பியார்.

புதுச்சேரியில் இருக்கும் செயின்ட் மார்ட்டின் பல்கலைக்கழகத்தின் சீனியர் மாணவர் அர்ஜுன்தாஸ். அந்த பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டில் வந்து சேர்கிறார் காளிதாஸ் ஜெயராம். இருவரும் சிறு வயதில் ஒரு போர்டிங் பள்ளியில் படிக்கும் போது நண்பர்களாக இருக்கிறார்கள். அப்போது காளிதாஸுக்கு சீனியர் மாணவர்களால் வெறுப்பான ஒரு சம்பவம் நடக்கிறது. அதை மறக்காத காளிதாஸ், பல்கலைக்கழகத்தில் அர்ஜுன்தாஸை பழி வாங்க நினைக்கிறார். இருவருக்குமிடையே நடக்கும் சிறு சிறு சண்டைகள் பின்னர் எப்படி 'போர்' ஆக மாறுகிறது என்பதுதான் மீதிக் கதை.

அந்த புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் படிப்பதை மட்டும் படத்தில் காட்டவில்லை. அவர்கள் போதைப் பொருள் விற்பது, அதைப் பயன்படுத்துவது, சீனியர், ஜுனியர் சண்டை போட்டுக் கொள்வது என மற்ற விஷயங்களைத்தான் அதிகம் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். வெறும் கல்லூரி மட்டும் இருந்தால் சரியாக வருமா என்ற சந்தேகத்தில் ஒரு அரசியல்வாதி, கல்லூரி தேர்தலில் நிற்கும் அவரது மகள், அந்த மகளுக்கு எதிராக களமிறக்கப்படும் ஒடுக்கப்பட்ட மாணவி என கூடுதல் இணைப்பாக சேர்த்திருக்கிறார்கள். புதுச்சேரி பக்கத்து மாநிலமாக இருந்தாலும் வேறு ஏதோ ஒரு கிரகத்தில் இருக்கும் கல்லூரி போலவே படம் முழுவதும் தெரிகிறது. இப்படி ஒரு கல்லூரியில் படித்தால் மாணவர்களின் எதிர்காலம் ஆஹா, ஓஹோதான்.

அர்ஜுன் தாஸ் இறுதியாண்டு படிக்கும் மாணவர் என்கிறார்கள். அவரை மாணவர் கதாபாத்திரத்தில் ஏற்றுக் கொள்ள கொஞ்ச நேரம் ஆகிறது. சீனியர் என்ற கெத்துடன் சுற்றி வருகிறார். அவருக்குப் பின்னால் ஒரு கூட்டமே திரள்கிறது. என்னவோ செய்யப் போகிறார் என்று பார்த்தால் கடைசியில் ஜுனியர் மாணவர்களுடன் போய் கைகலப்பில் ஈடுபடுகிறார். ஒரு நிறைவில்லாத கதாபாத்திரமாக இவரது கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். காளிதாஸ் கதாபாத்திரத்துடன் ஒப்பிடும் போது இவரது முக்கியத்துவம் படத்தில் சற்றே குறைந்து போய் இருக்கிறது.

காளிதாஸ் ஜெயராம் கதாபாத்திரத்தை அழுத்தமாகவும், நிறைவாகவும் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். அதில் காளிதாஸ் பொருத்தமாக நடித்திருக்கிறார். அவரைக் கல்லூரி மாணவர் என முதல் காட்சியிலேயே ஏற்றுக் கொள்ள முடிகிறது. சிறு வயதில் அர்ஜுனால் தனக்கு ஏற்பட்ட அந்த வெறுப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர். அந்த கோபத்துடனேயே படம் முழுவதும் இருக்கிறார். அர்ஜுனைச் சுற்றியிருப்பவர்களை தன் வசப்படுத்த முயன்று வெற்றியும் பெறுகிறார். சீனியராக இருந்தாலும் சஞ்சனா நடராஜனை தன் காதல் வலையில் வீழ்த்துகிறார்.

போதைப் பொருளை கல்லூரி மாணவர்களுக்கு விற்கும் டாக்டர் மாணவியாக சஞ்சனா நடராஜன். அடிக்கடி ஊசி போடுகிறார், அதனால் டாக்டராகத்தான் இருக்க வேண்டும். ஜுனியராக இருந்தாலும் காளிதாஸைப் பிடித்துப் போய் அவருடன் ஊர் சுற்றி படுக்கையறை வரை போகிறார். மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு இவரது கதாபாத்திரம் பகீரென இருக்கும். பல்கலைக்கழகம் என்றால் தேர்தல், அரசியல் இல்லாமலா. மாணவ, மாணவிகளுக்காக குரல் கொடுப்பவராக டிஜே பானு. முன்னாள் மாணவி, இந்நாள் போராளியாக வலம் வருகிறார்.

ஹரிஷ் வெங்கட், சச்சிதானந்த் சங்கரநாராயணன், கௌரவ் காட்கிண்டி ஆகியோரது பின்னணி இசை பரவாயில்லை. சில இடங்களில் பொருத்தமாகவும், சில இடங்களில் துருத்திக் கொண்டும் நிற்கிறது. இரவு நேரக் காட்சிகளில் ஒளிப்பதிவாளர்கள் ஜிம்ஷி காலித், பிரிஸ்லி ஆஸ்கர் டிசௌசா ஆகியோருக்கு அதிக வேலை. கூடவே, எடிட்டர் பிரியங் பிரேம் குமாரை இயக்குனர் பிழிந்தெடுத்திருப்பார் எனத் தெரிகிறது.

படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள், என்ன படிப்பு படிக்கிறார்கள் என்பதை தெளிவாகவே காட்டவில்லை. நாமாக அவர்களை டாக்டருக்குப் படிக்கிறார், இஞ்சினியரிங் படிக்கிறார் என யூகித்துக் கொள்ள வேண்டும். மணிரத்னத்தின் முன்னாள் உதவியாளர் பிஜாய் நம்பியார். தனது குரு மணிரத்னம் இயக்கத்தில் வந்த 'அக்னி நட்சத்திரம்' அவருக்குப் பிடித்த படம் போலிருக்கிறது. அந்த பிரபு, கார்த்திக் கதாபாத்திரங்களை உல்டா செய்து அர்ஜுன் தாஸ், காளிதாஸ் கதாபாத்திரங்களாக மாற்றி, கதைக்களத்தை பல்கலைக்கழகமாக வைத்துக் கொண்டுள்ளார்.

எங்கெங்கோ சுற்றி என்னென்னமோ சொல்லி இரண்டரை மணி நேரத்தை ஓட்டுகிறார்கள். பொறுமை மிக அவசியம். கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்ததும் இதற்கா இவ்வளவு பில்டப் என கேட்க வைக்கிறது.

போர் - சின்னப் பசங்க சண்டை…

 

பட குழுவினர்

போர்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓