நட்சத்திரம் நகர்கிறது,Natchathiram nagargirathu

நட்சத்திரம் நகர்கிறது - சினி விழா ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - யாழி பிலிம்ஸ்
இயக்கம் - பா ரஞ்சித்
இசை - தென்மா
நடிப்பு - காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையசரன்
வெளியான தேதி - 31 ஆகஸ்ட் 2022
நேரம் - 2 மணி 52 நிமிடம்
ரேட்டிங் - 3/5

ரசிகர்களுக்கான சினிமாவைக் கொடுக்கும் இயக்குனர்களும் இருக்கிறார்கள், தங்களது எண்ணங்களை பிரதிபலிக்கும் சினிமாவைக் கொடுக்கும் இயக்குனர்களும் இருக்கிறார்கள். ஒட்டு மொத்தமான ரசிகர்களைக் கவரும் ஒரு சினிமா தான் பெருவாரியாகப் பேசப்படும். இந்தப் படத்தைத் தனது எண்ணங்களுக்கான ஒரு சினிமாவாக மட்டுமே பதிவு செய்திருக்கிறார் பா ரஞ்சித்.

தமிழ் சினிமாவில் சாதிய அரசியல் படங்களைக் கொடுத்து கவனிக்கப்பட்டவர் பா ரஞ்சித். அவரது இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த 'சார்பட்டா பரம்பரை' படம் ஆங்காங்கே மறைமுகமாக சாதிய அரசியலைப் பேசியது. அதனால், எந்தவிதமான சாதிய அரசியலாக அந்தப் படத்தைப் பார்க்காமல் ஒரு படைப்பாக மட்டுமே அனைத்து ரசிகர்களும் பார்த்தார்கள். ஆனால், இந்த 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியை மீண்டும் தாக்கி அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே எடுத்த படமாகத் தோன்றுகிறது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தின், பலவித சந்தர்ப்பங்களில் புறக்கணிக்கப்பட்ட அந்த சமூகத்துப் பெண்ணின் வலிகளை கதாநாயகியின் கதாபாத்திரம் வாயிலாகப் பதிவு செய்யவும் பா ரஞ்சித் தவறவில்லை. முந்தைய படங்களில் குறியீடுகளாக வைத்தவர் இந்தப் படத்தில் நேரடியாகவே குற்றம் சாட்டுகிறார்.

புதுச்சேரியில் உள்ள ஒரு நாடகக் குழு தங்களது புதிய நாடகத்தை மேடையேற்றுவதற்காகத் தயாராகிறது. அதற்காக பல பகுதிகளிலிருந்தும் கலைஞர்கள் வருகிறார்கள். அவர்களில் விதவிதமான காதல் ஜோடிகளும் இருக்கிறார்கள். நெருக்கமாகக் காதலித்து பிரிந்த காதல் ஜோடி, ஆண் - திருநங்கை காதல் ஜோடி, ஆண் - ஆண் காதல் ஜோடி, பெண் - பெண் காதல் ஜோடி, திடீரென முறைக்கும் காதல் ஜோடி அவர்களோடு மற்ற கலைஞர்களின் காதல் அனுபவம் என இப்படியான ஜோடிகளை வைத்து ஒரு காதல் கதையை நாடகமாக அரங்கேற்ற பயிற்சி எடுக்கிறார்கள். அவர்களுக்குள் நடக்கும் காதலும், காதல் நாடகமும் தான் இந்த 'நட்சத்திரம் நகர்கிறது'.

பல விதமான குணாதிசயம் கொண்டவர்களை, எண்ணங்கள் கொண்டவர்களை ஒரே படத்தில் இப்படி விதவிதமான நட்சத்திரங்களுடன் பார்ப்பது புதிய அனுபவம். கதாபாத்திர வடிவமைப்பிலும், அதற்கான நட்சத்திரங்களின் தேர்விலும் தன்னை தேர்ந்த இயக்குனராக பதிவு செய்கிறார் ரஞ்சித். ஒவ்வொருவரின் நடிப்பும் இயல்பான நடிப்பாக வெளிப்பட்டிருக்கிறது. அந்த நாடகக் குழுவுக்குள் நாமும் ஒருவராகக் கலந்துவிட்ட ஒரு உணர்வு ஏற்படுகிறது.

அதே சமயம் ஒரே இடத்திலேயே மொத்த கதையும் நகர்வது ஒரு நாடகத்தைப் பார்க்கும் உணர்வையும் ஏற்படுத்துகிறது. அந்தந்த கதாபாத்திரங்கள் வாயிலாக பல அரசியல், சாதிய, வர்க்க பேதங்களைக் காட்சிப்படுத்தி இருக்கிறார் ரஞ்சித். அதில் சில இடங்களில் ஒரு சில குறிப்பிட்ட சாதியினர் மீதான வெறுப்பும் அதிகமாக உமிழப்படுகிறது. அதைக் கிண்டலாகவும் பதிவு செய்திருக்கிறார். அதற்காக கடந்த சில பல வருடங்களில் நிகழ்ந்த கொலைச் சம்பவங்களை உதாரணமாய் எடுத்து கையாண்டிருக்கிறார்.

காதலித்துப் பிரிந்த காதல் ஜோடிகளாக காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன். இருவரது நடிப்பிலும் அவ்வளவு யதார்த்தம், ஏட்டிக்குப் போட்டியாக நடித்து ஆச்சரியப்பட வைக்கிறார்கள். துஷாரா கதாபாத்திரம் மற்ற கதாபாத்திரங்களைக் காட்டிலும் மிகவும் வெளிப்படையாக அமைக்கப்பட்டிருக்கிறது. தன் சாதி மீதான அளவுக்கதிகமான பாசம் கொண்டவராகக் கலையரசன். இடைவேளையில் இவரது நடிப்பிற்கு தியேட்டரே அதிர்கிறது.

நாடகக் குழு மாஸ்டராக ரெஜின் ரோஸ், வெளிநாட்டுப் பெண்ணைக் காதலிப்பவராக வினோத், யஸ்வந்திரவாக ஹரிகிருஷ்ணன், கற்பகம் அக்காவாக சுபத்ரா ராபர்ட், அய்யாதுரை ஆக ஞானபிரசாத், கலையரசன் விரும்பும் பெண்ணாக வின்சு ரேச்சல் சாம் ஆகியோர் மற்ற கதாபாத்திரங்களில் குறிப்பிட வேண்டியவர்கள்.

தென்மா இசையில் பாடல்களைத் தனியாகக் கேட்டால் இனிமையாக இருக்கும் போலிருக்கிறது. படத்துடன் ஒன்றவில்லை. பின்னணி இசையிலும் தனி கவனம் செலுத்தியிருக்கிறார்கள். இளையராஜாவின் இனிமையான சில பாடல்கள் ஆங்காங்கே ஒலிக்கிறது. படம் முழுவதும் இளையராஜாவைக் கொண்டாடும் வசனங்களும் உண்டு.

ஆர்ட் படங்களைப் பார்த்து ரசிக்கும் ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கலாம். 'ஏ' சென்டர்களைத் தவிர்த்து சாமானிய ரசிகர்களைச் சென்று சேருமா என்பது சந்தேகம்தான்.

நட்சத்திரம் நகர்கிறது - காதல் நாடகம்

 

நட்சத்திரம் நகர்கிறது தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

நட்சத்திரம் நகர்கிறது

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓