சார்பட்டா பரம்பரை
விமர்சனம்
நடிப்பு - ஆர்யா, பசுபதி, கலையரசன், துஷாரா விஜயன்
தயாரிப்பு - கே 9 ஸ்டுடியோஸ், நீலம் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - பா.ரஞ்சித்
இசை - சந்தோஷ் நாராயணன்
வெளியான தேதி - 22 ஜுலை 2021 (ஓடிடி)
நீளம் - 2 மணி 53 நிமிடம்
ரேட்டிங் - 3.5/5
எவ்வளவோ திரைப்படங்களைப் பார்க்கிறோம். அவற்றில் சில படங்கள் மட்டுமே மனதில் பதியும்படியான படங்களாக அமைகின்றன. மக்களின் கலாச்சாரம், வாழ்வியல், வரலாறு, ஒரு இடத்தின் கதைக்களம் அவற்றில் ஏதாவது ஒன்றை சரியாகக் கையாளும் போது அந்தப் படம் ஏதோ ஒரு விதத்தில் நம்மிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விடும். அப்படியான ஒரு படம் தான் இந்த சார்பட்டா பரம்பரை.
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் அறிமுகமான இயக்குனர்களில் தனது படங்களைப் பற்றி பரபரப்பாகவும், சர்ச்சையாகவும் பேச வைத்தவர்களில் பா.ரஞ்சித்தும் முக்கியமானவர். மெட்ராஸ் படம் அவரது இயக்கத்தின் ஆளுமையை தனித்து புரிய வைத்தது. அதன்பின் அவர் இயக்கிய கபாலி, காலா இரண்டு படங்களும் ரஜினிகாந்த் என்ற நடிகரின் பிம்பத்தை முன்னிறுத்தியதால் அந்தப் படங்களில் பா.ரஞ்சித்தின் ஆளுமை தனித்து அதிகமாகப் பேசப்படவில்லை என்பதும் உண்மை. ஆனால், இந்த சார்பட்டா பரம்பரை படத்தில் மெட்ராஸ் படத்திற்குப் பிறகு மீண்டும் தன்னுடைய ஆளுமையை பேச வைத்திருக்கிறார்.
1975ம் ஆண்டில் கொடுமையான மிசா சட்ட கால கட்டங்களில் நடக்கும் ஒரு கதை. அந்த காலத்திய கதைக் களத்தை, கதாபாத்திரங்களை, மற்ற விஷயங்களை சரியாகக் காட்ட வேண்டும் என்ற அவருடைய மெனக்கெடல் ஒவ்வொரு பிரேமிலும் வெளிப்படுகிறது. அந்த ஒரு வரலாற்றுப் பதிவை திரையில் படைத்ததற்காகவே அவரைப் பாராட்டலாம். பொதுவாக சினிமாவில் அரசியல் கட்சி, கொடி ஆகியவற்றைப் பற்றிக் காட்டும் போது புனைவாக நிஜத்தில் இல்லாத கட்சி, கொடிகளைத்தான் காட்டுவார்கள். ஆனால், இந்தப் படத்தில் அந்தக் காலத்தில் இருந்த, நடந்தவற்றை உள்ளது, உள்ளபடி அப்படியே நேரடியாகக் காட்டியிருக்கிறார்கள். படம் வெளிவரும் போது, அதற்கு எந்தவிதமான எதிர்ப்பும் வந்துவிடாதபடி மிகவும் கவனமாக செயல்படுத்தியுள்ளார் பா.ரஞ்சித்.
சென்னை, வட சென்னை, துறைமுகத்தைச் சுற்றிய பாரிமுனை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, மண்ணடி ஆகியவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அந்தக் காலகட்டங்களில் ரோசமான ஆங்கிலேயே குத்துச்சண்டை போட்டி நடப்பது வழக்கம். சாதிய பெருமை பேசும், தங்கள் குடும்பத்து பெருமை பேசும் பெயர்களை அணிகளுக்குப் பெயராக வைத்துக் கொண்டு போட்டிகளை நடத்துகிறார்கள். அதில், சார்பட்டா பரம்பரை அணிக்கும், இடியப்ப பரம்பரை அணிக்கும் இடையே பல காலமாக கடும் மோதல் இருக்கிறது. இடியப்ப பரம்பரையைச் சேர்ந்த வேம்புலி என்ற குத்துச்சண்டை வீரரை யாராலும் வீழ்த்த முடியாத நிலை இருக்கிறது. அந்த வேம்புலியை வீழ்த்திக் காட்டுகிறேன் பார் என சார்பட்டா பரம்பரையின் வாத்தியார் ரங்கன் சவால் விடுகிறார். குத்துச்சண்டை போட்டியில் களமிறங்க வேண்டும் என்று அதன் மீது அதீத ஆர்வம் இருந்தாலும் அம்மாவின் கோபத்தால் சார்பட்டா பரம்பரை மீது தீவிர ரசிகராகவே இருக்கிறார் கபிலன். ஒரு சந்தர்ப்பத்தில் கபிலனையே வேம்புலிக்கு எதிராக களமிறக்குகிறார் வாத்தியார் ரங்கன். வேம்புலியை கபிலன் வீழ்த்தினாரா, சார்பட்டா பரம்பரை வாத்தியார் ரங்கன் தன் சவாலில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் நடிகர்களைப் பற்றி சொல்வதற்கு முன்பாக 1975களின் வட சென்னை கதைக்களத்தை அப்படியே கண்முன் நிறுத்திய கலை இயக்குனர் ராமலிங்கத்தை ஒரு கோப்பை கொடுத்து பாராட்ட வேண்டும். அந்த பாக்சிங் நடக்கும் உள்ளரங்க மைதானம், மணிக்கூண்டு, தெருக்கள் என அந்தக் கால கட்டத்தை அசலாகக் கொண்டு வந்துள்ளார்.
அடுத்தது படத்தின் சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவு. இதற்கு முன்பு வந்த குத்துச்சண்டை படங்களில் இருந்த சண்டைக்காட்சிகளை விட இந்தப் படத்தில் நம்மையும் ஒரு பார்வையாளராய் கவனிக்கும்படி அமைத்திருக்கிறார்கள்.
நான் கடவுள், மதராசபட்டிணம் படங்களுக்குப் பிறகு ஆர்யாவுக்கு இந்தப் படம் மிக முக்கியமான ஒரு நினைவுப் படமாக அமைந்துவிட்டது. கபிலன் கதாபாத்திரத்திற்காக அவர் தன்னை ஏற்றிக் கொண்டதையும், இறக்கிக் கொண்டதையும் பாராட்டியே ஆக வேண்டும். குத்துச்சண்டை களத்தில் அவர் இறங்கும் போது அவரது ஆஜானுபாகுவான தோற்றம் எதிராளியை மட்டுமல்ல ரசிகர்களையும் மிரள வைக்கிறது. அவ்வளவு வீரம் உள்ளவர், அம்மாவிடம் அவரது அன்பிடம் பணிந்து போவது தாய்ப் பாசத்தின் உச்சம். இந்தக் காட்சி, அந்தக் காட்சி என்று சொல்வதை விட படம் முழுவதுமே, இந்தப் படம் தனக்கான படம் என்பதை உணர்ந்து நடித்து சிறப்பு சேர்த்திருக்கிறார்.
படத்தின் இரண்டாவது நாயகன் என பசுபதியை தாராளமாகச் சொல்லலாம். எந்த கேரக்டர் கொடுத்தாலும் மனுஷன் என்னமாய் ஜமாய்க்கிறார். வாத்தியார் ரங்கன் கதாபாத்திரத்தில் அவரது மிடுக்கும், தெனாவெட்டும், திறமையும், ஏளனமும், கர்வமும், பார்வையும் என ஒவ்வொன்றுமே மிரட்டல், மிரட்டல். அந்தக் கால கட்டங்களில் தாங்கள் சார்ந்த கட்சிகள் மீது ஒவ்வொரு தொண்டனும் எந்த அளவிற்கு தீவிரத்துடன் இருந்தார்கள் என்பதை அவர் மிசாவில் கைதாகும் போது பேசும் ஒரு வசனத்திலேயே புரிய வைத்துவிடுகிறார்.
படம் முழுவதும் வரும் மற்றொரு கதாபாத்திரம் டாடியாக நடித்திருக்கும் ஜான் விஜய். ஆங்கிலோ இந்தியன் கதாபாத்திரம், ஆங்கிலமும், தமிழும் கலந்து பேசி அடாவடியாய் நடித்திருக்கிறார் ஜான். ஆர்யாவின் அம்மாவாக அனுபமா குமார். சில காட்சிகளில் கொஞ்சம் ஓவராகவே நடித்துவிட்டார், குறைத்திருக்கலாம். பசுபதியின் மகனாக கலையரசன். அப்பாவே வாத்தியாராக இருந்தாலும் தன்னை போட்டி போட வைக்க மறுக்கிறார் என்பதால் சில வில்லத்தனங்களைச் செய்கிறார்.
அந்தக் காலத்தில் வீட்டுக்கு அடங்காமல் சுற்றித் திரியும் இளைஞர்களை அடக்க வேண்டுமென்றால் திருமணம் செய்து வைத்தால் சரியாகி விடுவார்கள் என பெரியவர்கள் சொல்வார்கள். அப்படித்தான் ஆர்யாவிற்கு மனைவியாகிறார் துஷாரா விஜயன். அதிக முக்கியத்துவம் இல்லையென்றாலும் வரும் காட்சிகளில் அட..அட..போட வைக்கிறார். அதிலும், வீட்டிற்கு வரும் ஆர்யாவை வழி மறித்து காதலுடன் பார்க்கும் அந்த ஒரு காட்சி போதும்.
வேம்புலி ஆக ஜான் கொக்கேன், மற்றொரு பாக்சராக ஷபீர் கல்லரக்கல் இருவருமே யார் இவர்கள் என பலரையும் கூகுள் செய்ய வைப்பார்கள். இடியப்ப பரம்பரை வாத்தியாராக ஜிஎம் சுந்தர், போட்டிகளின் அமைப்பாளராக காளி வெங்கட் என படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவது கதாபாத்திரமும், அதற்கான சரியான தேர்வும் பேச வைக்கிறது.
சரியான படம் கிடைத்தால் சரியாகச் செய்வேன் என சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். ஓரிரு பாடல்களுடன் நிறுத்தியிருப்பது சரியானதே. எந்த இடத்தில் எந்த மாதிரியான ஒளியமைப்பு இருந்தால் சிறப்பு என்பதை பர்பெக்ட் ஆக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் முரளி ஜி.
சில சாதிய குறியீடுகள், சில சாதிய வன்மம் ஆகியவற்றைத் தொடர்ந்து தன்னுடைய படங்களில் பதிவு செய்வதை பா.ரஞ்சித் தவிர்த்தே ஆக வேண்டும். சினிமா என்பது அனைவருக்குமான ஒன்று. அந்த எண்ணத்தில்தான் திரைப்படங்கள் உருவாக்கப்பட வேண்டும். சினிமாவை ஒரு வட்டத்திற்குள் அடைப்பது சரியல்ல. இது பா.ரஞ்சித்துக்கானது மட்டுமல்ல, சாதிய அடையாளத்தை பதிவு செய்யத் துடிக்கும் அனைவருக்குமானது தான்.
சிறந்த வீரனாக உருவெடுத்த ஆர்யா, குடிக்கு அடிமையாவதை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். அங்கு ஏதோ, ஜம்ப் செய்துவிட்டது போன்ற உணர்வே இருக்கிறது. ஒரு சில வருடங்களிலேயே தாடி நரைக்கும் அளவுக்கு கொஞ்சம் வயதான தோற்றத்துடன் ஆர்யாவை மாற்றியிருப்பது நம்பும்படியாக இல்லை, சினிமாத்தனமாக இருக்கிறது. மேலும், கலையரசனின் கதாபாத்திரம் சரியாக வடிவமைக்கப்படவில்லை. அவர் எப்போது நல்லது செய்கிறார், எப்போது மாறுகிறார், ஏன் செய்கிறார் என்பது விட்ட குறை, தொட்ட குறையாக இருக்கிறது.
படத்தின் ஆரம்பக் காட்சியே 20 நிமிடம் வரை ஒரே இடத்தில் நடக்கிறது. அதை இன்னும் சுருக்கியிருக்கலாம். மேலும், சில காட்சிகளின் நீளத்தையும் குறைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
சார்பட்டா பரம்பரை - மெட்ராஸ் பெருமை
சார்பட்டா பரம்பரை தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
சார்பட்டா பரம்பரை
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்