2

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஜீ ஸ்டுடியோஸ், டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - முத்தையா
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு - ஆர்யா, சித்தி இத்னானி, பிரபு
வெளியான தேதி - 2 ஜுன் 2023
நேரம் - 2 மணி நேரம் 32 நிமிடம்
ரேட்டிங் - 2/5

கிராமத்துக் கதைகளாகவே தொடர்ந்து இயக்கிக் கொண்டிருப்பவர் இயக்குனர் முத்தையா. அவருடைய படங்கள் சாதிப் பெருமை பேசும் படங்களாகத்தான் அதிகம் இருக்கும். இந்தப் படத்தில் அதை சற்றே மாற்றி மத ஒற்றுமையைக் கொஞ்சம் சேர்த்து, தமிழ் சினிமா பார்த்து சலித்த பழி வாங்கல் கதையாகக் கொடுத்திருக்கிறார்.

ஒரு படத்தை பார்க்க ஆரம்பித்ததுமே படம் பார்க்கும் ரசிகர்கள் அந்தக் கதைக்குள் செல்ல வேண்டும். ஆனால், எதுவுமே புரியாமல் ஒரு குழப்பமான மனநிலையில் படத்தைப் பார்க்க ஆரம்பித்தால் அது ரசிகர்களை எந்தவிதத்திலும் ஈர்க்காது. படத்தின் கதாநாயகியான சித்தி இத்னானி மீதுதான் கதை ஆரம்பமாகிறது. அவரைத் திருமணம் செய்து கொள்ளத் துடிக்கும் முறைமாமன்கள், அதனால் நடக்கும் குடும்ப சண்டை என நகர ஆரம்பிக்கும் கதை, பின்னர் எங்கெங்கோ நகர்ந்து, எப்படியோ போய், இப்படி சுற்றி, அப்படி சுற்றி ஒரு வழியாக வந்து முடிவதற்குள் நமக்கு தலையே சுற்றி விடுகிறது.

யார் ஆதரவு இல்லாமல் தனியே இருக்கும் சித்தி இத்னானியை அவருடைய முறைமாமன்கள் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார்கள். அவரைப் பெண் கேட்டு வருபவர்களைக் கூட கொலை செய்கிறார்கள் அவர்களது குடும்பத்தினர். இந்நிலையில் சித்தி இத்னானி, சிறையில் இருக்கும் ஆர்யாவை சந்திக்கப் போய் அவரை சந்திக்காமலேயே திரும்புகிறார். ஜாமீன் பெற்று வெளியில் வரும் ஆர்யா, சித்தி ஊருக்குச் செல்கிறார். அங்கு சென்ற பின் அவருக்கு பல உண்மைகள் தெரிய வருகிறது. ஆர்யாவைக் கொல்ல சித்தி முறை மாமன்களும், வேறு சிலரும் முயற்சிக்கிறார்கள். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

'நான் கடவுள், அவன் இவன்' என ஒரு சில படங்களில் ஆர்யாவின் நடிப்புத் திறமை வெளிப்பட்டது. ஆனால், இந்தப் படத்தில் அவரா இவர் என ஆச்சரியப்பட வைக்கிறார். அவருடைய தோற்றமும் சரி, அவருடைய நடிப்பும் சரி சராசரிக்கும் கீழாகத்தான் உள்ளது. உணர்ச்சிகரமான வசனங்களைக் கூட மனப்பாடம் செய்து ஒப்பித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் மட்டும் வாங்கிய சம்பளத்திற்கு உண்மையாக இருக்க வேண்டுமென அடித்து உதைக்கிறார்.

சித்தி இத்னானி முதல் காட்சியிலேயே கிராமத்துப் பெண்தான் இவர் என நம்ப வைக்கிறார். அதன்பின் அவர் கதாபாத்திரம் மீது ஒரு அனுதாபம் வருகிறது. அவருடைய கதாபாத்திரத்தை மையப்படுத்தியே திரைக்கதையை நகர்த்தியிருந்தால் ரசித்திருக்கலாம்.

படத்தில் எண்ணற்ற துணைக் கதாபாத்திரங்கள். எல்லாருக்கும் ஒரு சீன்களைக் கொடுத்தாக வேண்டிய கட்டாயம். எல்லாமே தனித் தனி காட்சிகளாக நகர்ந்து போகின்றன. பிரபு கதாபாத்திரம் மட்டும் மற்ற கதாபாத்திரங்களில் தனித்து தெரிகிறது. மதுசூதன ராவ், அவினாஷ், ஆடுகளம் நரேன், தமிழ், விஜய் முருகன் என படத்தில் நான்கைந்து வில்லன்கள். எல்லாருமே கிராமத்து வில்லன்கள். சிலர் டாட்டூவெல்லாம் போட்டிருக்கிறார்கள். பாக்யராஜ் ஒரு சில காட்சிகளில் வந்து போகிறார்.

இடைவேளை வருவதற்குள் படத்தில் இருபது சண்டைக் காட்சிகள் வந்துவிட்டதோ என்ற உணர்வு. ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இடைவேளை வரைக்கான இயக்குனரின் சம்பளத்தை முழுவதுமாகக் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். இடைவேளைக்குப் பின்னும் கிளைமாக்சிலும் அடிக்கடி அவருக்கான வேலைகள் அதிகம். ஜிவி பிரகாஷ்குமார் சண்டைக் காட்சிகளுக்கு வாசித்துத் தள்ளியிருக்கிறார். பாடல்கள் 'கறிக்குழம்பு' பாடலில் மட்டும் கொஞ்சம் வாசம் வீசுகிறது.

முத்தையா இயக்கிய படங்களில் ஏதோ ஒரு சென்டிமென்ட் அந்தப் படத்தைக் கொஞ்சம் காப்பாற்றும். இந்தப் படத்தில் பல சென்டிமென்ட்டுகளை வைத்தாலும் அது படத்தைக் காப்பாற்றவில்லை.

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் - மாத்தி யோசிங்க முத்தையா…

 

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓