2

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சசிகுமார், சனுஷா, மகிமா நம்பியார், பூர்ணா, பசுபதி, விதார்த், இந்திரகுமார்
இயக்கம் - முத்தையா
இசை - என்.ஆர்.ரகுநந்தன்
தயாரிப்பு - கம்பெனி புரொடக்ஷன்ஸ்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஒரே பாணியிலான படங்களை எப்படித்தான் போரடிக்காமல் கொடுத்துக் கொண்டிருக்கிறாரோ இயக்குனர் முத்தையா. நமது மண்ணின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்ட படங்கள் அனைத்து ரசிகர்களையும் கவர வாய்ப்புள்ளது. ஆனால், தொடர்ந்து அவருடைய படங்களில் மறைமுகமாக ஒரே ஒரு சாதியின் பெருமையைக் குறிப்பிட்டால் அவர்களை மட்டும் தானே அந்தப் படம் அதிகம் கவரும். ஒவ்வொரு படத்தையும் அப்படியே கொடுத்தால் போதும் என முத்தையா நினைக்கிறாரா ?.

படத்தின் முதல் காட்சியைப் பார்ப்பதற்கே தனி தைரியம் வேண்டும். தமிழ் சினிமாவில் இதுவரை இப்படி ஒரு தற்கொலை காட்டப்பட்டதேயில்லை என்று சொல்லும் அளவிற்கு ஒரு நிறைமாத கர்ப்பிணியின் தற்கொலையைக் காட்டியிருக்கிறார் இயக்குனர். அதைப் பார்க்கும் போது படத்தின் இணை தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டதும் ஞாபகத்திற்கு வந்து போகிறது.

ஊரே கொண்டாடும் நாயகன், ஊரே கொண்டாடும் வில்லன் இவர்களுக்கிடையிலான மோதல் தான் இந்த கொடி வீரன். அம்மா, அப்பா இல்லாத சசிகுமார், தங்கை சனுஷா மீது அதிக பாசம் வைத்துள்ளவர். ஊரின் சாமியாடி என்பதால் ஊரே அவரை மதிக்கிறது. தங்கை சுனுஷாவுக்கும், அவர்கள் ஊருக்கு ஆர்டிஓ (கோட்டாட்சியர்) ஆக இருக்கும் விதார்த்திற்கும் திருமணம் நிச்சயிக்கிறார். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தன்னுடைய பட்டாசு ஆலைக்கே தீ வைத்த வழக்கில் சிக்கியிருக்கும் இந்திரகுமாரை சிறைக்குத் தள்ள விதார்த் தீவிரமாக இருக்கிறார். அந்த வழக்கிலிருந்து இந்திரகுமாரைக் காப்பாற்ற அவரின் மைத்துனரான பசுபதி, விதார்த்தை கொலை செய்யத் துடிக்கிறார். தங்களது தங்கைகளின் கணவரைக் காப்பாற்ற சசிகுமாரும், பசுபதியும் மோதிக் கொள்வதுதான் படத்தின் மீதிக் கதை.

மீண்டும் ஒரு குட்டிப் புலி தோற்றத்தில் சசிகுமார். இன்னும் எத்தனை படங்களில் தான் இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பார் எனத் தெரியவில்லை. சுப்பிரமணியபுரம், நாடோடிகள் என வித்தியாசத்தைக் காட்டியவர், தொடர்ந்து ஒரே வட்டத்திற்குள் அவரை அடைத்துக் கொள்வது ஏன் எனத் தெரியவில்லை. நடிப்பில் தான் வித்தியாசத்தைக் காட்டவில்லை, தோற்றத்திலாவது வித்தியாசத்தைக் காட்டுங்கள் சசிகுமார். படத்திற்குப் படம் வித்தியாசத்தை விரும்பும் ரசிகர்கள் அதிகமாகி வருகிறார்கள்.

சசிகுமாரின் தங்கையாக நடிக்கும் சனுஷா தான் படத்தில் அதிகம் ஸ்கோர் செய்கிறார். எத்தனையோ தங்கை கதாபாத்திரங்களை, தமிழ் சினிமாவில் பார்த்திருந்தாலும், அப்படியே அந்த கிராமத்துப் பாசத்துக்கே உரிய தங்கையாக யதார்த்தமாக நடித்திருக்கிறார். அவருக்கு டப்பிங் கொடுத்தவரும் பொருத்தமாகப் பேசி நடித்திருக்கிறார்.

சசிகுமாரின் ஜோடியாக மகிமா நம்பியா. முந்தைய படங்களைக் காட்டிலும் இந்த படத்தில் தோற்றத்தில் மெருகேறியிருக்கிறார். ஆனால், நடிப்பதற்கான வாய்ப்புகள்தான் குறைவு. சனுஷா, பூர்ணா கதாபாத்திரங்களுக்கு உள்ள முக்கியத்துவம் மகிமா கதாபாத்திரத்திற்கு இல்லை.

பூர்ணா இந்தப் படத்திற்காக நிஜமாகவே மொட்டை அடித்து நடித்துள்ளார். ஆனால், மொட்டை அடித்தத்தற்கான காரணம் படத்தில் அழுத்தமாகப் பதியவில்லை. ஆனாலும், கிராமத்து பெண்ணாக, கணவன் மீது அதிக பாசம் வைத்துள்ள மனைவியாக, அண்ணன் மீது தீவிர பாசம் வைத்துள்ள தங்கையாக அவருடைய அழுத்தமான நடிப்பு அவரைப் பேச வைக்கிறது.

பசுபதி, பல படங்களில் பார்த்த அதே கிராமத்து வில்லத்தனம். முறைப்பிலும், பேச்சிலும் குறை வைக்கவில்லை. ஆனால், இன்னும் எத்தனை படங்களில்தான் எதற்கெடுத்தாலும் கத்தியைத் தூக்கும் வில்லனைப் பார்ப்பது?. படத்தில் விதார்த்தும் இருக்கிறார். இப்படிப்பட்ட நேர்மையான அரசாங்க அதிகாரிகள் ஊருக்கு ஊர் வந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

படத்தில் காமெடி காட்சிகள் என சிலவற்றைச் சேர்த்திருக்கிறார்கள், அது நம் பொறுமையை சோதிக்கும் காட்சிகள். அவற்றையும், படத்தின் ஆரம்பத்தில் அந்த நீளமான திருவிழாக் காட்சியையும் நீக்கியிருக்கலாம். படத்தின் 2 மணி நேரம் 35 நிமிட நீளம் இன்னும் கொஞ்சம் குறைந்திருக்கும்.

என்.ஆர். ரகுநந்தன் இசையில், சசிகுமாருக்கான தீம் மியூசிக் ஓகே. அதற்காக அவர் வரும் போதெல்லாம் அதையே இசைப்பது ரிபீட்டு. களவாணி.... பாடல் கேட்ட டியூனாக இருந்தாலும் ரசிக்க வைக்கிறது.

கத்தி, ரத்தம், ஆவசேம், பழிக்குப் பழி, கொலை ஆகியவை அடங்கிய கிராமத்துக் கதைகள் தான் நம் மண்ணின் கலாச்சாரமா..?. இன்னும் எவ்வளவோ இருக்கிறதே. ஊர்த் திருவிழாவில், நம் மண்ணின் கிராமத்து சாமிகளின் பெருமையச் சொல்வதில் அழுத்தமான பதிவைத் தரும் முத்தையா, கதைத் தேர்வுகளில் மாற்றத்தைக் கொண்டு வந்தால் மட்டுமே இனி முத்திரை பதிக்க முடியும்.

மொத்தத்தில், "கொடி வீரன் - சரியாக படரவில்லை"

 

பட குழுவினர்

கொடிவீரன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓