ஜெய் கணேஷ் (மலையாளம்),Jai Ganesh (Malayalam)
Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு ; உன்னி முகுந்தன் பிலிம்ஸ் & ட்ரீம் 'என்' பியாண்ட்
இயக்கம் ; ரஞ்சித் சங்கர்
இசை ; சங்கர் ஷர்மா
நடிப்பு ; உன்னி முகுந்தன், மகிமா நம்பியார், அசோகன், ஹரீஷ் பெராடி
வெளியான தேதி ; 11 ஏப்ரல் 2024
நேரம் ; 2 மணி 05 நிமிடம்
ரேட்டிங் ; 2.75 / 5

விபத்தில் கால்களை இழந்த மாற்றுத்திறனாளி உன்னி முகுந்தன் ஒரு தனியார் கம்பெனியில் டிசைனராக பணியாற்றுகிறார். தன்னால் உடல் ரீதியாக சாதிக்க முடியாத விஷயங்களை, தன்னுடைய பெயரை வைத்து ஜெய்கணேஷ் என தான் உருவாக்கிய காமிக்ஸ் கதாபாத்திரம் செய்வது போல கதைகளை உருவாக்குகிறார். இதை பதிப்பகம் நடத்தும் மகிமாவுடன் சேர்ந்து புத்தகங்களாக வெளியிடும் முயற்சியில் இறங்குகிறார்.

இன்னொரு பக்கம் ஹேக்கிங் செய்வதிலும் வித்தகரான உன்னி முகுந்தன் தனது ஹேக்கிங் திறமையால் சில வழக்குகளில் நல்லவர்களுக்கு நியாயம் கிடைக்கவும் உதவுகிறார். இந்த நிலையில் அவரது பக்கத்து வீட்டு சிறுவன், அவனது பிறந்த நாளன்று உன்னி முகுந்தன் கண் முன்பாகவே காரில் கடத்தப்படுகிறான். அந்த சிறுவனை கடத்திய மனிதன் சிறுவனின் தந்தையான அரசியல்வாதியால் தனது பெண் குழந்தையை பறிகொடுத்தவர். அதனால் அதே பாணியில் அரசியல்வாதியின் மகனை கொல்ல வேண்டும் என முடிவு செய்து காற்றுப்புகாத ஒரு பூட்டிய ஸ்டுடியோ அறைக்குள் சிறுவனை அடைத்து வைத்து கொல்லும் விதமாக செட்டப் செய்து வைக்கிறார். போலீசார் அவரை தேடி செல்வதற்கு முன்பாகவே தற்கொலையும் செய்து கொள்கிறார்.

இப்போது அந்த பையனை எங்கே அடைத்து வைத்திருக்கிறார்கள் என கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறும் போலீஸுக்கு உதவியாக தனது ஹேக்கிங் திறமையை பயன்படுத்தி அந்த சிறுவனின் அடைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடிக்க முயல்கிறார் உன்னி முகுந்தன். கிட்டத்தட்ட ஒரு இடத்தை கண்டுபிடித்து போலீசாருக்கு சொல்ல கடைசியில் பையன் அங்கே இல்லை என தெரிய வருகிறது. இதனால் உன்னி முகுந்தன் மீது நம்பிக்கை இழக்கும் போலீசார் அவர் சொல்வதை ஏற்க மறுக்கின்றனர்.

ஒரு வைராக்கியத்துடன் தனி ஆளாக களத்தில் இறங்கும் உன்னி முகுந்தன் இன்னும் தீவிரமாக ஆராய்ந்து சிறுவனின் இடத்தை கண்டுபிடித்தும் விடுகிறார். குறிப்பிட்ட நேரத்திற்குள் சிறுவனை காப்பாற்றாவிட்டால் விஷ வாயுவால் பாதிக்கப்பட்டு அவன் இறந்து விடுவான் என்கிற நிலையில் அந்த இடத்தை நெருங்கும் உன்னி முகுந்தனுக்கு கடைசி சில நிமிடங்களில் எதிர்பாராத பிரச்னை ஏற்படுகிறது. இதனை தாண்டி அந்த சிறுவனை காப்பாற்றினாரா இல்லையா என்பது கிளைமாக்ஸ்.

நடக்க முடியாமல் சக்கர நாற்காலியிலேயே படம் முழுவதும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் அப்படியே எதார்த்தமாக வாழ்ந்து இருக்கிறார் உன்னி முகுந்தன். பிளாஷ்பேக் காட்சி என்றோ அல்லது கனவு டூயட் என்றோ அவர் நடப்பது போன்று எந்த காட்சிகளுமே படத்தில் இல்லை என்பது ஆச்சர்யம். சிறுவனை காப்பாற்ற துடிப்பதும் கைக்கு எட்டிய தூரத்தில் வந்தும் கூட காப்பாற்ற இயலாமல் தவிப்பதும் என தனது மனப்போராட்டத்தை துல்லியமாக வெளிப்படுத்தி உள்ளார் உன்னி முகுந்தன். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் நம்மை பதைபதைக்க வைத்து விடுகிறார்.

கதாநாயகியாக மகிமா நம்பியார்.. கதாநாயகனுக்கு தன்னம்பிக்கை கொடுத்து உற்சாகப்படுத்தும் கதாபாத்திரமாக அவ்வப்போது சில காட்சிகள் மட்டும் வந்து போகிறார். ஹரீஷ் பிராடியை ஒரே காட்சியில் மட்டும் நடிக்க வைத்து வீணடித்திருக்கிறார்கள். உன்னி முகுந்தன் மனம் தளரும் போதெல்லாம் ஊக்கம் கொடுக்கும் தந்தை கதாபாத்திரத்தில் அசோகன் நிறைவான நடிப்பை வழங்கி இருக்கிறார்.. மற்றபடி படத்தில் சிறுவனின் அரசியல்வாதி, தந்தை போலீஸ் உயர் அதிகாரி, சைபர் கிரைம் போலீஸ் பெண் அதிகாரி என பல கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் பெற்று கதையை நகர்த்த உதவி இருக்கின்றனர், குறிப்பாக பூட்டிய அறையில் அடைத்து வைக்கப்பட்ட அந்த சிறுவன் தனது தவிப்பை, பயத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் வெகு இயல்பாக நடித்துள்ளார்.

சங்கர் ஷர்மா இசையில் அடிக்கடி வரும் பாடல்கள் படத்திற்கு வேகத்தடையாக இருக்கின்றன. சந்துரு செல்வராஜின் ஒளிப்பதிவில் சிறுவனுக்கு பதிலாக அந்த அறையில் நாமே சிக்கிக்கொண்ட உணர்வு சில நேரங்களில் ஏற்படுகிறது.

ஆரம்பத்தில் இது ஏதோ தன்னம்பிக்கையால் முன்னேறும் ஒரு மாற்றுத்திறனாளியின் கதை போல நகரப் போகிறதோ என்ன தோன்றினாலும் திடீரென யு டர்ன் எடுத்து சிறுவன் கடத்தல் என திசை மாறுவது எதிர்பாராத ஒன்று. அதே சமயம் அந்த ஒரே விஷயத்தை வைத்துக்கொண்டு சிறுவன் கடத்தப்பட்ட பிறகான மீதி ஒன்றரை மணி நேர படத்தையும் விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளார் இயக்குனர் ரஞ்சித் சங்கர். சிறுவன் எப்படியாவது காப்பாற்றப்பட்டு விட வேண்டுமே என்கிற பரபரப்பையும் நமக்கு ஏற்படுத்தி விடுகிறார்.

குறிப்பாக சிறுவன் இருக்கும் இடத்தை நெருங்கி விட்டதாக நினைத்து அப்பாடா என நாம் நிம்மதி பெருமூச்சு விடும் நேரத்தில் அது அந்த இடம் இல்லை என தெரிய வரும்போது மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. அந்த வகையில் இயக்குனர் ரஞ்சித் சங்கர் நம்மை பாதி படத்திற்கு மேல் இருக்கை நுனியிலேயே அமர வைத்து விடுகிறார். உணர்வு பூர்வமான படங்களை கொடுப்பதில் தேர்ந்தவரான ரஞ்சித் சங்கரின் வழக்கமான பாணியிலான படமாக இது இல்லை என்றாலும், இந்த புதிய முயற்சியிலும் அவர் நம்மை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

ஜெய் கணேஷ் ; ஜூனியர் சக்திமான்

 

பட குழுவினர்

ஜெய் கணேஷ் (மலையாளம்)

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓