யசோதா,Yashoda
Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஸ்ரீதேவி மூவிஸ்
இயக்கம் - ஹரி - ஹரிஷ்
இசை - மணி சர்மா
நடிப்பு - சமந்தா, வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன்
வெளியான தேதி - 11 நவம்பர் 2022
நேரம் - 2 மணி நேரம் 15 நிமிடம்
ரேட்டிங் - 3/5

தெலுங்கில் சமந்தா முதன்மைக் கதாநாயகியாக நடித்துள்ள இந்த 'யசோதா' படத்தை தமிழிலும் அதே பெயரில் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளார்கள். சமந்தா, வரலட்சுமி, உன்னி முகுந்தன், சம்பத் என தமிழிலும் நடித்துள்ள நட்சத்திரங்கள் படத்தில் இருப்பதால் ஒரு நேரடிப் படத்தைப் பார்க்கிறோம் என்றே எண்ண வைக்கிறது. வசனங்களையும் உதட்டசைவுகளுக்குப் பொருத்தமாக எழுதி சமாளித்திருக்கிறார்கள். அதையெல்லாமும் கவனத்தில் கொள்ளாத அளவுக்கு படமும் பரபரப்பாகவே நகர்கிறது.

புதிது புதிதாக ரசிகர்களுக்கு என்ன கதைகளை சொல்வது என பல இயக்குனர்களும் ஆராய்ந்து தேடி வருகிறார்கள் என்பது இந்தப் படத்தின் கதையைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் சமீப காலத்தில் நடிகை நயன்தாரா 'வாடகைத் தாய்' மூலம் குழந்தை பெற்றது ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அப்படிப்பட்ட 'வாடகைத் தாய்' விவகாரத்தை இந்தப் படத்தில் வேறு ஒரு கோணத்தில் கொடுத்து விறுவிறுப்பாக ரசிக்க வைத்திருக்கிறார்கள் இயக்குனர்கள் ஹரி - ஹரிஷ்.

தன் தங்கையின் ஆபரேஷனுக்கு பணம் தேவைப்பட, அதற்காக வாடகைத் தாய் ஆக சம்மதித்து செல்கிறார் சமந்தா. இப்படி வாடகைத் தாய் ஆக வரும் பெண்களை நட்சத்திர விடுதி போல வசதிகளை செய்து கொடுத்து பார்த்துக் கொள்ளும் பிசினஸ் செய்கிறார் வரலட்சுமி. அங்கு டாக்டராக இருக்கிறார் உன்னி முகுந்தன். அதிக கட்டுப்பாடுகளுடன் இருக்கும் ஒரு விடுதி அது. அந்த விடுதி எங்கு இருக்கிறது என்பது கூட அங்கு வாடகைத் தாய் ஆக செல்பவர்களுக்குத் தெரியாது. அனைத்து மருத்துவ வசதிகளும் அங்கு உண்டு. தன்னுடன் வாடகைத் தாய் ஆக இருக்கும் ஒரு பெண்ணுக்கு திடீரென வலி எடுக்க, அவரை அழைத்துச் செல்கிறார்கள். ஆனால், அந்தப் பெண் திரும்பி வரவில்லை. அதைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார் சமந்தா. அவருக்கு அதிர்ச்சியான சில உண்மைகள் தெரிய வருகிறது. அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

வாடகைத் தாய், பெண்களின் அழகு குறையாமல் இருக்க ஆராய்ச்சி, அதனால் நடக்கும் சர்வதேச பிசினஸ், மத்திய மந்திரி ஒருவர் அதில் சம்பந்தப்பட்டிருப்பது, அக்கா, தங்கை சென்டிமென்ட், காவல் துறை விசாரணை என ஒரு கமர்ஷியல் ஆக்ஷன் படத்திற்குரிய அனைத்து விஷயங்களையும் படத்தில் வைத்திருக்கிறார்கள். தெலுங்கு ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் விதமாக சில மசாலாத்தனமான காட்சிகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் தவிர்த்துப் பார்த்தால் ரசிக்கும்படியான ஒரு படம்தான்.

சமந்தா ஆரம்பத்தில் அப்பாவியான ஒரு அக்காவாக வருகிறார். உடல் நலம் குன்றிய தனது தங்கையின் ஆபரேஷனுக்கு செலவு செய்வதற்காக வாடகைத் தாய் ஆகப் போகிறார். அங்கு விடுதியில் டாக்டராக இருக்கும் உன்னி முகுந்தன் மீது காதல் வயப்பட்டு கிண்டல் செய்து பழகுகிறார். உடன் இருக்கும் மற்றொரு பெண்ணுக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் போனதும் களத்தில் இறங்குகிறார். திடீரென அதிரடியாக சண்டை போடவும் ஆரம்பிக்கிறார். அவர் யார் என்ற உண்மை தெரிய வரும் போது நமக்கும் அதிர்ச்சிதான், எதிர்பாராத திருப்பம் அது. ஆக்ஷன் ஹீரோயினாக மாறி, சண்டைக் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார் சமந்தா.

வாடகைத் தாய்களை ஏற்பாடு செய்து அவர்களுக்காக பிரம்மாண்டமான நட்சத்திர விடுதி, மருத்து வசதி, அதிகபட்ச பாதுகாப்பு என கட்டுப்பாடுகளுடன் கூடிய பிசினஸ் செய்கிறார் வரலட்சுமி. தமிழில் வந்த 'சர்க்கார்' படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியவர் இந்தப் படத்திலும் மிரட்டியிருக்கிறார். அவரிடம் டாக்டராக வேலை பார்ப்பவர் உன்னி முகுந்தன். அவருக்கும் சமந்தாவுக்கும் காதல் வருமோ என நாம் எதிர்பார்க்கும் நேரத்தில் உன்னி, வரலட்சுமியின் காதலர் என்ற பிளாஷ்பேக் மற்றொரு திருப்பம். இடைவேளைக்குப் பின் இப்படி பல திருப்பங்கள் படத்தில் உண்டு.

இரண்டு பிரபலங்களின் திடீர் மரணத்தை விசாரிக்க போலீஸ் பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த சம்பத் உதவி செய்ய, அங்கிருந்து கதை நகர்ந்து வாடகைத் தாய் விசாரணையில் வந்து முடிகிறது. இரண்டையும் திரைக்கதையில் அருமையாக முடிச்சு போட்டிருக்கிறார்கள். கமிஷனராக முரளி சர்மா, மத்திய மந்திரியாக ராவ் ரமேஷ் கொஞ்ச நேரம் வந்தாலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

படத்தில் பாடல்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை. மணிசர்மாவின் பின்னணி இசை படத்தை பரபரப்பாக நகர்த்த உதவுகிறது. அந்த விடுதி, அதன் பிரம்மாண்டம், அதற்கான லைட்டிங்குகள் என ஒளிப்பதிவில் குறிப்பிட வைக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். குழப்பமில்லாமல் படத்தைத் தொகுத்திருக்கிறார் எடிட்டர் மாத்தாண்ட கே வெங்கடேஷ். வெங்கட்டின் சண்டைக் காட்சிகள் அசத்தல்.

படத்தில் ஆங்காங்கே சில பல லாஜிக் ஓட்டைகள் இருக்கின்றன. அவ்வளவு பாதுகாப்பான இடத்தில் சமந்தா விசாரணையில் இறங்குவதும், எளிதாக அந்த இடத்தை விட்டு வெளியே செல்வதும் நம்பும்படியாக இல்லை. அவ்வளவு பெரிய இடத்தில் பத்தே பத்து செக்யூரிட்டிகள், அவர்களையும் சமந்தா எளிதில் அடித்துவிடுகிறார் என சில சினிமாத்தனமான காட்சிகளும் உண்டு. கிளைமாக்ஸ் விஎப்எக்ஸ் காட்சிகள் மிகச் சுமார். ஆனாலும், புதுவிதமான கதை, கதைக்களம் அந்த லாஜிக் மீறல்களையும் மீறி சுவாரசியமாக ரசிக்க வைக்கிறது.

யசோதா - காக்கும் தாய்

 

பட குழுவினர்

யசோதா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓