குஷி,Kushi

குஷி - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - மைத்ரி மூவி மேக்கர்ஸ்
இயக்கம் - ஷிவா நிர்வானா
இசை - ஹேஷம் அப்துல் வகாப்
நடிப்பு - விஜய் தேவரகொண்டா, சமந்தா
வெளியான தேதி - 1 செப்டம்பர் 2023
நேரம் - 2 மணி நேரம் 45 நிமிடம்
ரேட்டிங் - 3/5

சொல்லப்படாத காதல் கதைகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. இடைவேளை வரை ஒரு அழகான காதல் கதையாகவும், இடைவேளைக்குப் பின் தேவையான ஒரு குடும்பக் கதையாகவும் கொடுத்து படத்தை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஷிவா நிர்வானா.

பிஎஸ்என்எல்-லில் வேலை கிடைத்து காஷ்மீருக்குக் கேட்டு வாங்கி செல்கிறார் விஜய் தேவரகொண்டா. அங்கு சமந்தாவைப் பார்த்ததும் காதல் கொள்கிறார். விஜய் தேவரகொண்டாவின் அப்பா கடவுள் இல்லை, அறிவியல்தான் எல்லாம் எனப் பேசுபவர், சமந்தாவின் அப்பா ஆன்மிக சொற்பொழிவாளர். இருவரது குடும்பத்தினரும் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையைத் துவக்குகிறார்கள். ஒரு வருடம் கழித்து விஜய்க்கும், சமந்தாவுக்கும் சண்டை ஆரம்பமாகிறது. ஒரு ஹோமம் செய்தால்தான் அவர்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என தன் அப்பா சொன்னதை ஞாபகப்படுத்துகிறார் சமந்தா. அதனால், சண்டை பெரிதாக விஜய்யும், சமந்தாவும் பிரிகிறார்கள். அதன்பின் அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இடைவேளை வரை அழகான காதல் கதையாக மட்டுமே நகர்கிறது படம். இயக்குனர் மணிரத்னத்தின் தீவிர ரசிகராக இப்படத்தின் இயக்குனர் ஷிவா இருப்பார் போலிருக்கிறது. பாடலை மட்டுமல்லாது சில வசனங்களிலும் மணிரத்னத்தை நுழைத்துள்ளார். விஜய்யையும், சமந்தாவையும் அன்யோன்னியமாக நடிக்க வைத்து அவர்களுக்கான நெருக்கத்தை நமக்கும் கிடைக்கும்படி செய்திருக்கிறார்.

முந்தைய படுதோல்விப் படமான 'லைகர்' படத்திலிருந்து மீண்டு 'குஷி'யாக இருக்கலாம் விஜய் தேவரகொண்டா. இந்தப் படம் அவரை நிச்சயம் காப்பாற்றிவிடும். வழக்கம் போல தன்னுடைய துள்ளலான நடிப்பால் ரசிகர்களைக் கவர்கிறார். சமந்தா மீதான அவருடைய காதலும், பாசமும் அப்படி ஒரு நெருக்கமாய் அமைந்துள்ளது. நடிப்பு என்பதையும் மீறி நேசித்திருக்கிறாரோ என அச்சப்பட வைக்கிறார்.

ஆரம்பத்தில் முஸ்லிம் பெண் தோற்றத்தில் வருகிறார் சமந்தா. அப்போதுதான் விஜய் அவரை சந்திக்கிறார். அதை வைத்தே ஒரு அரை மணி நேரத்தை ஓட்டிவிடுகிறார் இயக்குனர். அந்தக் காட்சிகளை குறைத்திருக்கலாம். 'பர்தா' அணிந்ததால் தான் முஸ்லிம் பெண்ணல்ல ஒரு 'பிராமணப் பெண்' என சொல்லி விஜய்க்கு அதிர்ச்சியளிக்கிறார் சமந்தா. காதல் கதைகளில்தான் சில கதாநாயகிகளை அவ்வளவு வெகுவாய் ரசிக்க முடியும். சமந்தாவுக்கு அப்படித்தான், அவருடைய காதல் காட்சிகளில் அவ்வளவு யதார்த்தம் இருக்கிறது.

சமந்தாவின் அப்பாவாக முரளி சர்மா, விஜய்யின் பெற்றோர்களாக சச்சின் கடேகர், சரண்யா. விஜய்யின் குடும்ப நண்பராக ரோகிணி, அவரது கணவராக ஜெயராம். சரியான பாத்திரத் தேர்வு.

ஹேஷம் அப்துல் வகாப் இசையில் அனைத்துப் பாடல்களுமே இனிமையாக அமைந்துள்ளன. ஒரு டப்பிங் படத்தின் பாடல்கள் என்பதே தோன்றவில்லை. முரளியின் ஒளிப்பதிவில் காஷ்மீர் அழகு எப்படி ஆரம்பத்தில் கொள்ளை கொண்டதோ அப்படியே மற்ற காட்சிகளும் அழகாய் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் நீளம்தான் மைனஸ். தேவையில்லாத இரண்டு சண்டைக் காட்சிகளை வெட்டித் தூக்கினாலும் பரவாயில்லை.

அறிவியலுக்கு ஆதரவளிப்பதா, ஆன்மிகத்திற்கு ஆதரவளிப்பதா எனக் குழம்பி கடைசியில் 'மனிதம்' பேசி படத்தை முடித்துவிட்டார் இயக்குனர்.

குஷி - குடும்பத்துடன் ரசிக்கலாம்

 

குஷி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

குஷி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓