டியர் காம்ரேட்
விமர்சனம்
நடிப்பு - விஜய் தேவரகொன்டா, ராஷ்மிகா மந்தனா
தயாரிப்பு - மைத்ரி மூவி மேக்கர்ஸ், பிக் பென் சினிமாஸ்
இயக்கம் - பரத் கம்மா
இசை - ஜஸ்டின் பிரபாகரன்
வெளியான தேதி - 29 ஜுலை 2019
நேரம் - 2 மணி நேரம் 49 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்துள்ள படம். அறிமுக இயக்குனர் பரத் கம்மா படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் போன்ற வெற்றிப் படங்களில் நடித்த விஜய் தேவரகொன்டா படத்தின் நாயகன். கீதா கோவிந்தம் படத்திற்குப் பிறகு விஜய், ராஷ்மிகா மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம்.
இயக்குனர் பரத் கதைக்காக அதிகம் யோசிக்கவில்லை. 1989ல் தெலுங்கில் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் நாகார்ஜுனா, அமலா நடித்து வெளிவந்த சிவா (தமிழில் உதயம் என்ற பெயரில் வெளியாகி இங்கும் வெற்றி பெற்றது) படத்திலிருந்து நாயகன் மற்றும் அவரது நண்பர்கள் கதாபாத்திரத்தை இந்தக் காலத்திற்கேற்றபடி மாற்றிவிட்டார். நாயகி கதாபாத்திரத்தை மட்டும் மாற்றி அவரை ஒரு கிரிக்கெட் வீராங்கனையாக வைத்து அதில் பெண் வன்கொடுமை என்ற இன்றைய பரபரப்பு விஷயத்தைச் சேர்த்துவிட்டார். அடிதடியில் இருக்கும் கொஞ்சம் ரவுடி நாயகனுக்கும், கிரிக்கெட் வீராங்கனையான நாயகிக்கும் காதல் என காதலையும் சேர்த்து இந்த டியர் காம்ரேட் படத்தைக் கொடுத்திருக்கிறார்.
கல்லூரியில் படிக்கும் விஜய் தேவரகொண்டா மாணவர்களுக்கு எந்தப் பிரச்சினை என்றாலும் எதிர்த்து நிற்பவர். சக மாணவியை அடிக்கடி தொந்தரவு செய்யும் எம்எல்ஏ தம்பியை அடித்துத் துவைக்கிறார். கோபமடையும் எம்எல்ஏ ஆட்கள், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் முன்னாள் மாணவர் யூனியன் ஆட்கள், விஜய்யை அடித்து மருத்துமனையில் படுக்க வைக்கின்றனர். இந்த மாணவர் பிரச்சினையால் தான் தன் அண்ணன் இறந்து போனார், அதனால் அடிதடி வேண்டாம் என விஜய்யிடம் சொல்கிறார் அவரது காதலியான ராஷ்மிகா. அதை ஏற்க மறுக்கும் விஜய்யை விட்டுப் பிரிகிறார். மூன்று வருடங்கள் கழித்து இருவரும் சந்திக்கும் போது ராஷ்மிகா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
80களில் தமிழ் சினிமாவில் இளமைத் துடிப்பான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் கார்த்திக். இந்தப் படத்தில் விஜய் தேவரகொன்டாவின் நடிப்பைப் பார்க்கும் போது மௌனராகம் கார்த்திக் தான் ஞாபகத்திற்கு வருகிறார். குறைந்த படங்களில் மட்டுமே நடித்த அனுபவம் வாய்ந்த விஜய், கோபம், ஆவேசம், காதல், தவிப்பு என தன் நடிப்பால் ரசிகர்களைக் கவர்கிறார். காதல் என்று வந்துவிட்டால் மட்டும் கூடுதலாக என்னமோ செய்கிறார். அது பெண் ரசிகைகளை அதிகம் கவர்ந்துவிடுகிறது.
தென்னிந்தியத் திரையுலகின் அடுத்த முன்னணி நடிகையாக உயர்ந்து வருகிறார் ராஷ்மிகா. அழகும், நடிப்பும் ஒரு சேர உள்ள நடிகை. இந்தப் படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக இளமைத் துள்ளலுடன் கவர்கிறார். விஜய் அவரது நண்பர்களுடன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும் போது தோற்கும் நிலையில் இருக்க, கிண்டலாய் பேசுபவர்களுக்கு மத்தியில் பேட்டிங் ஆட இறங்கி ராஷ்மிகா சிக்சராகப் பறக்கவிட்டு விஜய் டீமை வெற்றி பெற வைத்து, நான் ஒரு ஸ்டேட் பிளேயர் என்று சொல்லும் காட்சி சுவாரசியமாக உள்ளது. இடைவேளைக்குப் பின் மன உளைச்சலில், அழுத்தத்தில் அவர் இருக்க, அதற்குக் காரணம் காதல்தான் என நாம் நினைக்க அது இல்லை, அது பெண் வன்கொடுமை எனத் தெரிய வரும் போதுதான் கதை கொஞ்சம் சூடு பிடிக்கிறது. அதுவரை காதல் படமாக இருந்தது வேறு பாதையில் பயணிக்கிறது.
படம் முழுவதும் விஜய் தேவரகொன்டா, ராஷ்மிகா நிறைந்திருந்தாலும், ராஷ்மிகா அக்கா கதாபாத்திரம், விஜய்யின் நண்பர்கள் கதாபாத்திரம், கிரிக்கெட் மண்டல சேர்மன் கதாபாத்திரம் ஆகியவற்றிற்கும் குறிப்பிடத்தக்க காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர்.
தமிழ் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சில பாடல்கள் தமிழில் கேட்பதற்கு இனிமையாக உள்ளன. ஒளிப்பதிவாளர் நாயகனையும், நாயகியையும் எவ்வளவு அழகாகக் காட்ட முடியுமோ அவ்வளவு அழகாகக் காட்டியிருக்கிறார்.
ராஷ்மிகாவின் கதாபாத்திரம், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் தவிர படத்தின் மற்ற பல காட்சிகள் இதற்கு முன் நாம் எத்தனையோ சினிமாவில் பார்த்த காட்சிகள்தான். சமீபத்தில் வெளிவந்த தேவ் படத்தின் காட்சி வரை இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. காதல் தோல்வியால் கார்த்தி பைக்கை எடுத்துக் கொண்டு வட இந்தியா பக்கம் பயணம் செய்து கொண்டிருப்பார். அதுவும் இந்தப் படத்தில் உள்ளது.
படத்தின் நீளம் மிக மிக அதிகம். ஸ்டூடன்ட் யூனியன் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரிபீட் ஆவது போல இருக்கின்றது. சில காட்சிகள் படத்திற்கத் தேவையில்லாதவை, அவற்றை கத்தரித்தாலும் படத்திற்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது.
உனக்குத் தேவையானவற்றை நீ தான் போராடிப் பெற வேண்டும். கடைசி வரை உனக்காக யார் கூடவே தோள் கொடுத்து வருகிறார்களோ அவர்கள்தான் காம்ரேட் என்று சிம்பிளாக அழகாக சொல்ல வேண்டியதை எங்கெங்கோ சுற்றி வளைத்து எப்படி எப்படியோ சொல்லியிருக்கிறார்கள்.
விஜய் தேவரகொன்டாவின் முந்தைய சூப்பர் ஹிட் படங்களான அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் அளவிற்கு இந்தப் படம் ரசிக்க வைக்கவில்லை என்பது உண்மை.
டியர் காம்ரேட் - போராடினால்தான் வெற்றி