2

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - தர்மா புரொடக்ஷன்ஸ், பூரி கனெக்ட்ஸ்
இயக்கம் - பூரி ஜெகன்னாத்
பின்னணி இசை - சுனில் காஷ்யப்
நடிப்பு - விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன்
வெளியான தேதி - 25 ஆகஸ்ட் 2022
நேரம் - 2 மணி 20 நிமிடம்
ரேட்டிங் - 2/5

தெலுங்குத் திரையுலகின் முன்னணி மசாலா இயக்குனர்களில் ஒருவர் பூரி ஜெகன்னாத். தான் இதற்கு முன்பு இயக்கிய 'பத்ரி, அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி' படங்களின் கதைகளையே அப்படி, இப்படி மாற்றி கலப்பு செய்து இந்த 'லைகர்' படத்தைக் கொடுத்திருக்கிறார். சிங்கத்திற்கும், புலிக்கும் பிறப்பதுதான் லைகர். தன் படங்களைக் கலந்து பூரி கொடுத்ததுதான் இந்த 'லைகர்'. ஹிந்தி, தெலுங்கில் தயாராகி தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்துள்ள படம்.

'பத்ரி' படம் தமிழிலும் விஜய் நடிக்க ரீமேக் ஆகி வெளிவந்தது. 'அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி' படம் ஜெயம் ரவி, அசின் நடிக்க 'எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி' படமாக வந்தது. அந்தப் படத்தில் பேராசிரியை நதியா கதாபாத்திரம் இந்தப் படத்தில் ராயபுரம் டீக்கடைப் பெண் ரம்யா கிருஷ்ணன் ஆகவும், அந்தப் படத்தில் கல்லூரி முடித்த ஜெயம் ரவி கதாபாத்திரம் இந்தப் படத்தில் படிக்காத விஜய் தேவரகொன்டாவாகவும் மாறி உள்ளது. எலைட் கதையை லோக்கல் ஆக மாற்றியிருக்கிறார்.

அடுத்து என்ன நடக்கும் என யூகிக்க முடிந்த காட்சிகள், பார்த்துப் பார்த்து சலித்துப் போன காதல் காட்சிகள் என ஒரு காட்சி கூட புதிதாக இல்லாத புளித்துப் போன அரைத்த மாவை அப்படியே எடுத்து சுட்டுள்ளார்கள். இந்தப் படத்திற்காக பான் இந்தியா படம் என இப்படி ஒரு பில்டப் கொடுத்தார்கள் என அதிர்ச்சியடைய வேண்டியதாக உள்ளது.

பாக்சிங் வீரரான தனது கணவரை சண்டையிலேயே பறி கொடுத்தவர் ரம்யா கிருஷ்ணன். தனது மகன் விஜய் தேவரகொண்டாவையும் ஒரு பாக்சிங் வீரனாக சாம்பியானாகப் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார். அதற்காக சென்னையிலிருந்து மும்பை சென்று அங்கு பயிற்சிப் பள்ளியில் சேர்க்கிறார். 'மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ்' என அழைக்கப்படும் 'எம்எம்ஏ' பள்ளியில் தரை துடைப்பது, எடுபிடி வேலைகளைச் செய்வது என வேலை செய்யும் விஜய் ஒரு சந்தர்ப்பத்தில் தனது திறமையை கோச்சிடம் காட்டுகிறார். இடையில் அனன்யா பாண்டே உடன் ஒரு காதல் தோல்வி. அதிலிருந்த மீண்டு தேசிய சாம்பியனாகிறார். பின்னர் உலக சாம்பியன் ஆக அமெரிக்கா பறக்கிறார். அந்தப் போட்டியில் வென்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

காதல் படங்களில் நடித்து பல ரசிகர்களைக் கவர்ந்த விஜய் தேவரகொண்டா இந்தப் படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக ஆசைப்பட்டிருக்கிறார். ஆக்ஷன் எல்லாம் அதிரடியாகத்தான் இருக்கிறது. ஆனால், கதையே இல்லாத ஒரு களத்தில் அவர் என்னதான் இறங்கி அடித்தாலும் அது வீணாகப் போய் உள்ளது. திக்குவாய் குறைபாடு உள்ளவர். வழக்கம் போல அவரைக் கிண்டல் செய்கிறார்கள். காதலி அனன்யாவும் அதனாலேயே விலகுகிறார். வெற்றிக்கு குறைபாடு ஒரு தடையல்ல என சாதித்துக் காட்டும் 'ஹீரோயிசக் கதாபாத்திரம்'.

அனன்யா பாண்டே, சில சினிமாக்களில் வழக்கமாக வரும் ஒரு லூசுத்தனமான கதாபாத்திரம். மிகப் பெரும் கோடீஸ்வரி, இன்ஸ்டாகிராமில் லைக்குகளை அள்ள ஆசைப்படுபவர், மாடலிங், சினிமா ஆசை உள்ளவர். ஏழையான விஜய்யைக் காதலிக்கிறார். இன்னும் எத்தனை படங்களில்தான் இப்படிப் பார்ப்பது.

மற்ற கதாபாத்திரங்களில் விஜய் அம்மாவாக ரம்யா கிருஷ்ணன். 'பாகுபலி' ராஜமாதாவாகப் பார்த்த ரம்யா கிருஷ்ணனை ராயபுரம் பாலாமணியாகப் பார்க்க முடியவில்லை. சென்னைத் தமிழ் எல்லாம் ரம்யாவுக்கு செட்டாகவில்லை. நாயகி அனன்யா பாண்டேவின் அப்பாவாக அவரது நிஜ அப்பா சன்கி பாண்டே நடித்துள்ளார். குத்துச் சண்டையின், உலக சாம்பியன் மைக் டைசன் கிளைமாக்சுக்கு முன்பாக வருகிறார். இப்படி ஒரு படத்தில் அவரை நடிக்க வைத்து அவருடைய பெருமையைக் குறைத்திருக்க வேண்டாம்.

பாடல்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எல்லாமே மிகச் சுமார் ரகம். ஆக்ஷன் காட்சிகள் மட்டும் அசத்தல். கூட்டத்தைக் கூட்டினால் மட்டுமே பிரம்மாண்டம் அல்ல.

எத்தனை கோடி செலவு செய்தாலும், எவ்வளவு பிரபலமான நடிகர்கள், நடிகைகள் நடித்தாலும், யார் தயாரித்தாலும், இயக்கினாலும், 'கதை' வேண்டும், 'கதை' வேண்டும், புதிததாகக் காட்சிகள் வேண்டும் என இந்தப் படம் பலருக்கு உதாரணமாக அமையும்.

லைகர் -- நோ 'லைக்'கர்ஸ்…

 

லைகர் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

லைகர்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓