யாரும் ஏற்க தயங்கும் கதாபாத்திரத்தில் துணிச்சலாக சார்மி விலைமாதுவாக நடித்துள்ள ஜோதிலக்ஷ்மி படத்தை டோலிவுட்டின் வெற்றி பட இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார். டோலிவுட்டில் முன்னணி நடிகையாக ஜொலித்த சார்மியின் மார்கெட் சரிவை சந்தித்துள்ளதால் இப்படத்தின் வெற்றியே சார்மிக்கு திரை உலக வாழ்க்கைக்கு வாழ்வா சாவா என்பதை தீர்மானிக்கும். இப்படத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் சார்மி இணைந்துள்ளதால் படம் பண ரீதியிலும் நடிப்பு ரீதியிலும் படம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். இப்படத்தின் எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம் அதன் இயக்குனர் பூரி ஜெகனாத்.
ஜோதிலக்ஷ்மி படத்தின் நாயகன் சத்யா ஒரு மென்பொருள் பொறியாளன், விலைமாதுவான ஜோதிலட்சுமி மீது காதல் கொள்கிறான். ஒர் நல்ல நாளில் அவளிடம் தனது திருமண ஆசையை சொல்லவும் செய்கிறான். முதலில் மறுக்கும் ஜோதிலக்ஷ்மி அவனின் நேர்மை கண்டு மனம் மாறி சம்மதிக்கிறாள்.ஜோதிலக்ஷ்மி சத்யாவுடன் இணைந்து வாழ்ந்தாளா?? அவளின் கடந்தகாலம் அவளை வாழவிட்டதா ?? அவள் சந்திக்கும் சவால்கள் இது தான் படத்தின் கதை.
சார்மி தான் படத்தின் முக்கிய பலம், அலட்டல் கலந்த தைரியமான விலைமாதுவின் கதாபாத்திரத்தில் முதல் பாதியில் அசரடிக்கிறார். இதற்கு நேர் எதிரான இரண்டாம் பாதியிலும் சார்மி நடிப்பில் விளையாடியிருக்கிறார்.யார்வேண்டும் என்றாலும் சொல்லலாம் நிச்சயம் ஜோதிலக்ஷ்மி படம் சார்மிக்கு முக்கியமான படம். சார்மி டோலிவுட்டில் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க ஒரு புதிய பாதைக்கு இப்படம் வழிவகுத்திருக்கிறது.
சார்மியை தவிர படத்தில் கவனம் ஈர்ப்பவர் இளம் நடிகர் சத்ய தேவ், அவரின் ஆளுமை திரையில் அதீத கவனம் ஈர்க்கிறது. நிச்சயம் அவருக்கு தெலுங்கு திரை உலகில் நல்ல எதிர்காலம் இருக்கிறது.இதுபோக படத்தில் குறிப்பிட வேண்டியது இடைவேளையும், பூரி ஜெகனாத்தின் வசனங்களும். பெண்ணியத்தை இயல்பாக வசனங்கள் தூவுகின்றன.
படத்தின் மைனஸ் என்று சொன்னால் சார்மி கதாபத்திரத்தின் மாற்றம் தைரியமான பெண் சற்றே நேர் எதிராக மாறியது. பிரம்மானந்தத்தை படத்தில் தவிர்த்திருக்கலாம். பாடலகள் நன்றாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் அவை தவறான இடங்களில் இடம் பெற்றது மற்றுமொரு பிரச்சனை.
தொழில் நுட்ப ரீதியாக பார்த்தால், பின்னனி இசை படத்தை தாங்கி பிடிக்கிறது, திரைக்கதையும் வசனங்களும் படத்திற்கு பெரும் பலம். நல்ல செய்தி சொல்ல வந்து அதை கமர்சியல் வழியில் சற்றே இழுத்து முடித்திருக்கிறார்கள்.மொத்தமாக பார்த்தால், சார்மியின் நடிப்பு திறமை நன்றாகவே வெளிப்பட்டு இருக்கிறது. வசனங்கள் படத்தை நியாபகத்தில் இருக்க வைக்கும்.
ஜோதிலக்ஷ்மி- தைரியலட்சுமி