பரமசிவன் பாத்திமா
விமர்சனம்
தயாரிப்பு : லட்சுமி கிரியேஷன்ஸ்
இயக்கம் : இசக்கி கார்வண்ணன்
நடிகர்கள் : விமல், சாயாதேவி, எம் எஸ் பாஸ்கர், இசக்கி கார்வண்ணன், கூல் சுரேஷ், சுகுமார், மகேந்திரன், ஸ்ரீ ரஞ்சனி, வி ஆர் விமல் ராஜ், காதல் சுகுமார், வீரசமர்
வெளியான தேதி : 06.06.2025
நேரம் : 2 மணி நேரம் 23 நிமிடம்
ரேட்டிங் : 2.5/5
கதைக்களம்
திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் மலை கிராமம் ஒன்று மதமாற்றத்தால் மூன்றாக பிரிந்து கிடக்கிறது. இதில், கிறிஸ்தவர்கள் வாழும் கிராமத்திற்கும், இந்துக்கள் வாழும் கிராமத்திற்கும் இடையே அவ்வபோது மோதல் ஏற்படுகிறது. இதற்கிடையே, இந்த இரண்டு கிராமங்களை சேர்ந்த இரு இளைஞர்களை விமல் மற்றும் சாயாதேவி இணைந்து கொலை செய்வதோடு, மேலும் சிலரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.
கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் இசக்கி கார்வண்ணன், குற்றவாளியை கண்டு பிடிக்க முடியாமல் திணறுகிறார். மறுபக்கம் கிராமங்களுக்கு இடையே நடக்கும் மோதல் தொடர்கிறது. விமலும், சாயாதேவியும் எதற்காக கொலை செய்கிறார்கள்? கொலை செய்யப்பட்டவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன பகை? என்பதே படத்தின் மீதி கதை.
சில மதங்கள் பணம் கொடுத்து மக்களை தங்கள் பக்கம் இழுக்கின்றன என்பதையும், அப்படி இழுக்கப்பட்ட பலர் பெயரளவில் மட்டுமே மதம் மாறியிருக்கிறார்களே தவிர மனதளவில் மாறவில்லை என்பதையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன்.
இது ஒரு ஹாரர் படம் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு விமல் நடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார். அவருக்கு பக்கபலமாக சாயாதேவி நடித்திருக்கிறார். இவர்களோடு கிறிஸ்தவ தேவாலய பாதராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் நெல்லை பாஷை பேசி ரசிகர்களை கவருகிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் இன்னும் கொஞ்சம் நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம். வில்லனாக அறிமுகம் ஆகி இருக்கும் ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவர்களோடு கூல் சுரேஷ், மனோஜ்குமார், ஆதிரா, சேஷ்விதா, ஸ்ரீரஞ்சனி, வி.ஆர்.விமல்ராஜ், மகேந்திரன், காதல் சுகுமார், ஆறு பாலா, வீரசமர், களவாணி கலை உள்ளிட்ட அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் தனது கேமராவுக்கு பெரிய அளவில் வேலை கொடுக்கவில்லை. சில பருந்து காட்சிகளை தவிர மற்ற காட்சிகள் சாதாரணமாக உள்ளது. அதேபோல் படம் முழுவதும் பனிமூட்டம் என காட்டுவதற்காக புகையை போட்டு இருப்பது அந்நியமாக தெரிகிறது. தீபன் சக்கரவர்த்தி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே ரகம்.
பிளஸ் & மைனஸ்
மதமாற்றம் குறித்த பிரச்சார படமாக இதை இயக்குனர் கொடுத்து இருக்கிறார். அதில் சுவாரசியத்திற்காக பேய் கதையை சொல்லி இருப்பது அவ்வளவாக எடுபடவில்லை. ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் என மூன்று மதங்களை வைத்து அதில் மதமாற்றத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர். படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் பேசிக்கொண்டே இருப்பதால் ரசிகர்களுக்கு சோர்வு ஏற்படுகிறது. திரும்பத் திரும்ப ஒரே இடத்தில் காட்சிகள் வருவது அயர்ச்சி தருகிறது. படத்தின் நீளமுழம் பெரிய மைனஸ்.
பரமசிவன் பார்வதி - மதயானைக் கூட்டம்
பரமசிவன் பாத்திமா தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
பரமசிவன் பாத்திமா
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்