விவசாயத்தை விடுத்து, விவசாய நிலத்தை விற்று, அந்த காசில், அரசாங்க வேலை என மதுக்கடையில் வேலை வாங்கி வாழத்துடிக்கும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு சாட்டையடித்தரும் வகையில் நெத்தியடியாக வந்திருக்கும் படமே "பகிரி".
லட்சுமி கிரியேஷன்ஸ் வழங்க, ஒயிட் ஸ்கிரீன் என்டர்டெயின்மெண்ட் எம்.ஆண்டனி எட்வர்டு வெளியிட, புதியவர் இசக்கி கார் வண்ணன் எழுத்து, இயக்கத்தில் புதுமுகம் பிரபு ரணவீரன் - ஷ்ரவ்யா ஜோடியுடன், ரவி மரியா, ஏ.வெங்கடேஷ், டி.பி .கஜேந்திரன், கே.ராஜன், மாரிமுத்து, சூப்பர் குட் சுப்பிரமணி, கதா.க .திருமாவளவன், ஆதிரா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திங்கள் நடிக்க வந்திருக்கும் "பகிரி" படத்தின் கதைப்படி, விவசாய குடும்பத்தைச் சார்ந்த நாயகர் பிரபுரணவீரன், தான் படித்த., டிப்ளமோ அக்ரிகல்சர் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் நகரத்திற்கு வந்து மதுக்கடை பார் ஒன்றில் தற்காலிக வேலை பார்க்கிறார். வந்த இடத்தில் அவரிடம் டோர் டெலிவரி மூலம் அடிக்கடி வாங்கிக் குடிக்கும் ஏ.வெங்கடேஷ் - ஆதிரா தம்பதியின் சீமந்த புத்தரி ஷ்ரவ்யாவிற்கும் பிரபுரணவீரனுக்குமிடையில் காதல் காட்டுத் தீ போல் பற்றுகிறது.
காதலையும், காதலியையும் காப்பாற்ற, தனது தற்காலிக வேலை நிரந்தர வேலையானால் நலம் பயக்கும்...எனக் கருதும் பிரபுரணவீரன், அங்கு, இங்கு அலையாது தன் சித்தப்பா மாரிமுத்து மூலம் மாவட்ட செயலாளர் கே.ராஜனை பிடித்து., அதே மதுக்கடையில் அரசு வேலை பெற முயற்சிக்கிறார். அதற்கு பல லட்சம் பணம் தேவைப்படுகிறது. ஊரில் இருக்கும் நிலத்தை விற்று அந்தப் பணத்தை புரட்ட முயற்சிக்கிறார். உதைத்து விரட்டாத குறையாக விவசாயி அப்பா சூப்பர் குட் சுப்பிரமணி துரத்துகிறார். வாழ்க்கை வெறுத்து திரும்ப வரும் பிரபுக்கு, காதலி ஷ்ரவ்யாவும் அவரது தாய்குலம் ஆதிராவும் உதவ முன்வருகின்றனர். அவர்களது உதவியுடன், நாயகர் பிரபுரணவீரன் ஊத்திக் கொடுக்கும் அரசு வேலையில் சேர்ந்து பணிபுரிந்தாரா ? அல்லது, வேறு மாதிரி தடைகளை சந்தித்து, விவசாயமே மேல்... என காதலியுடன் கிராமத்திற்கு கிளம்பினாரா..? என்னும் காமெடி கருத்தாழம் தான் "பகிரி" படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம் .
ஊத்திக் கொடுக்கும் வேலை என்றாலும் அரசு வேலை என அலையும்... புதுமுகம் பிரபு ரணவீரன், இக்கதையின் நாயகராக கச்சிதம்.
அவரது காதலியாக அவருக்கு எல்லா விதத்திலும் கை கொடுக்கும் ஜோடியாக ஷ்ரவ்யா , செம கச்சிதம்.
மகளின் காதலுக்கு பச்சை கொடி காட்டி பணமும் தரும் அம்மாவாக ஆதிரா, அந்த அம்மாவையே ஒரு தலையாக காதலிக்கும் லோக்கல் அலட்டல் அரசியல்வாதியாக ரவி மரியா, மகளின் காதலை எதிர்க்கும் டோர் டெலிவரியில் குடிக்கும் குடிகார தத்தக்கா, பித்தக்கா அப்பாவாக ஏ.வெங்கடேஷ் , ஒர்க் ஆகாத செல்லில் மூன்று சிம் கார்டுடன் திரியும் மதுவிலக்கு அமைச்சர் டி.பி .கஜேந்திரன், மாவட்டம் கே.ராஜன், மகனிடமும் கனகச்சிதமாக கமிஷன் எதிர்பார்க்கும் சித்தப்பாவாக மாரிமுத்து, நாயகரின் வெள்ளந்தி விவசாய அப்பாவாக சூப்பர் குட் சுப்பிரமணி, பெண் எடுக்கும் இடத்தினரின் விவசாய நிலத்தை விற்று சிட்டியில் மகனுக்கு பிளாட் வாங்கத் துடிக்கும் கதா.க .திருமாவளவன் .. உள்ளிட்ட எல்லோரும் காமெடியிலும் , டிராஜிடியிலும் ஒரு சேர கலக்கியிருக்கின்றனர்.
கருணாஸின் பாடல்கள் இசையும் எஸ்.என்.அருணகிரியின் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. வீரக்குமாரின் ஒளிப்பதிவு கதைக்கேற்ற கலர்புல் பதிவு. அத்தியப்பன் சிவாவின் படத்தொகுப்பும் பக்கா தொகுப்பு.
இசக்கி கார் வண்ணனின் எழுத்து, இயக்கத்தில் ஒரு சில குறைகள், குற்றங்கள் ஆங்காங்கே தென்பட்டாலும், "டோர் டெலிவரி" குடி திட்டம்.. எனும் புது கான்செப்ட்டுடன் "டாஸ்மாக்"-கை, "நாஸ்மாக்" என்று சைலன்ட்டாய் நாசமாக்கியிருப்பதற்காகவும், இறுதியில் விவசாயம் தான் பெரிதென்று... இன்றைய இளைய தலைமுறைக்கு காமெடியாய் கருத்து சொல்லியிருப்பதற்காகவும் "பகிரி"யை பார்க்கலாம்! நல்விதமாக பகிரலாம்!
"பகிரி - ரசிகர்கள் தைரியமாக தியேட்டருக்கு சென்று பருகலாம்!!"