தமிழ்க்குடிமகன்,Tamilkudimagan

தமிழ்க்குடிமகன் - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - லட்சுமி கிரியேஷன்ஸ்
இயக்கம் - இசக்கி கார்வண்ணன்
இசை - ராஜேஷ் யாதவ்
நடிப்பு - சேரன், ஸ்ரீபிரியங்கா
வெளியான தேதி - 7 செப்டம்பர் 2023
நேரம் - 2 மணி நேரம் 3 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

தமிழ் சினிமாவில் தொடர்ந்து சாதிய வேற்றுமைகளைப் பற்றிய படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் வந்துள்ள மற்றுமொரு படம் இது. இந்தப் படத்தில் குலத்தொழிலை விடத் துடிக்கும் ஒருவருக்கும், அவர் அந்தத் தொழிலையே செய்தாக வேண்டும் என அடக்கும் சாதியினருக்கும் இடையிலான போராட்டமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன்.

கிராமத்தில் இறுதிச்சடங்கு செய்யும் குலத்தில் பிறந்தவர் சேரன். படித்து முடித்து அரசாங்க வேலைக்குச் செல்ல வேண்டும் என நினைக்கிறார். அவரது தங்கை டாக்டருக்குப் படித்து வருகிறார். அவருக்கும் மேல்சாதியைச் சேர்ந்த ஊரின் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த லால் மகனுக்கும் காதல். இது பற்றித் தெரிய வரும் லால் மற்றும் அவரது உறவினர்கள், சேரனின் தங்கையை கொலை வெறியோடு தாக்குகிறார்கள். இதற்கடுத்து லாலின் அப்பா இறந்துவிடுகிறார். ஆனால், அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய வர மாட்டேன் எனச் சொல்கிறார் சேரன். தனது கொள்கையில் உறுதியாக இருக்கிறார் சேரன். இதனால், ஊருக்குள் பெரும் பிரச்சனை வருகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

மீண்டும் ஒரு கிராமத்துக் கதையில் கதையின் நாயகனாக பொருத்தமாக நடித்திருக்கிறார் சேரன். இறுதிச் சடங்கு செய்யும் கிராமத்து மனிதர் சின்னச்சாமி கதாபாத்திரத்தில் சாதியக் கொடுமைகளை எதிர்ப்பவராக உணர்வுபூர்வமாக நடித்திருக்கிறார். ஊரில் மற்றவரெல்லாம் குலத் தொழிலை விட்டு வேறு வேலைக்குச் சென்றுவிட அவரும் அப்படிச் செல்ல நினைக்கிறார். ஆனால், கிராமத்தில் இருக்கும் மேல் சாதியினர் அவரைப் போகவிடாமல் தடுக்கிறார்கள். தனக்கான வாழ்க்கையை தன் விருப்பப்படி அமைத்துக் கொள்ளத் துடிக்கும் அவருடைய நடிப்பில் ஆவேசம் அதிகமாகவே உள்ளது.

சேரனின் மனைவியாக ஸ்ரீபிரியங்கா, தங்கையாக தீப்ஷிகா, இவரது காதலனாக துருவா நடித்திருக்கிறார்கள். இருப்பினும் நெகட்டிவ் கதாபாத்திரங்களாக இருந்தாலும் படம் முழுவதும் வரும் முக்கிய கதாபாத்திரங்களாக லால், அருள்தாஸ் நடித்திருக்கிறார்கள். மேல் சாதியைச் சேர்ந்த இவர்கள் தங்களை எதிர்க்கும் சேரனை சாதி வெறி கொண்டு அடக்குவதில் அந்தக் கோபத்தை, ஆணவத்தை சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

உணர்வுபூர்வமான கிராமத்துக் கதையில் கதையுடனும், கதாபாத்திரங்களுடனும் சேர்ந்து பயணிக்கிறது ராஜேஷ் யாதவ்வின் ஒளிப்பதிவு. சாம் சிஎஸ் பின்னணி இசையில் படத்தைத் தூக்கி நிறுத்தியிருந்தாலும் பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். கிராமிய மணம் வீசும் பாடல்களைக் கொடுக்க முயற்சித்து அதில் சற்றே வெற்றி பெற்றிருக்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சிகளும், படத்திற்கான முடிவும் தலைப்புக்குப் பொருத்தமாக அமைந்துள்ளது. அப்படியெல்லாம் மாற்றம் வர இன்னும் எத்தனை ஆண்டு காலம் ஆகுமோ ?.

தமிழ் சினிமா இதுவரை சொல்லாத கதை என்றாலும் சேரனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நடக்கும் கொடுமைகள் நம்மிடம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் காட்சிகளை அமைக்கவில்லை இயக்குனர். சினிமா என்பதையும் மீறி அது நமக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினால் மட்டுமே நம்மால் படத்துடன் ஒன்ற முடியும். அதைச் செய்யத் தவறியிருக்கிறார் இயக்குனர்.

தமிழ்க்குடிமகன் - தவிப்புடன்…

 

தமிழ்க்குடிமகன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

தமிழ்க்குடிமகன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓