0

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ஸ்ரீபிரியங்கா, அரீஷ் குமார், முத்துராமன்
தயாரிப்பு - வி அவுஸ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - சுரேஷ் காமாட்சி
இசை - இஷான் தேவ்
வெளியான தேதி - 8 நவம்பர் 2019
நேரம் - 1 மணி நேரம் 36 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

பெண்களின் பிரச்சினைகளை முக்கியமாக வைத்து வரும் படங்கள் மிக மிகக் குறைவுதான். அந்தப் பிரச்சினைகள் அவர்களது வாழ்வியல் அல்லது மன ரீதியான பிரச்சினைகளாகத்தான் அதிகம் இருக்கும். ஆனால், அவர்களது உடல் ரீதியான பிரச்சினைகளை அலசி ஆராய்ந்த படங்கள் ஒரு சிலதான். அந்த ஒரு சில படங்களும் அவர்களது அழகு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளாகவே இருக்கும்.

பெண்களின் இயற்கை உபாதைகளைப் பற்றி இதுவரை எந்த ஒரு படமும் சொன்னதில்லை என்பதுதான் உண்மை. அதிலும் இந்தப் படத்தில் அதை மிகவும் வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ் காமாட்சி.

சாலைகளில் செல்லும் போது விவிஐபிக்கள் வருகிறார்கள் என போலீசார் ஐம்பது அடிக்கு ஒருவராக காவல் காத்துக் கொண்டிருப்பார்கள். அதில் பெண் போலீசாரும் இருப்பார்கள். ஆண்கள் எப்படியாவது சமாளித்துக் கொள்வார்கள். ஆனால், பெண் போலீசாருக்கு சிறுநீர் கழிப்பதோ அல்லது மாதவிடாய் காலமாகவே இருந்தால் அவர்கள் அதை எப்படி சமாளிப்பார்கள் என நீங்கள் என்றாவது யோசித்திருந்தால் உங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்.

வெளிநாட்டு மந்திரி ஒருவர் கோயிலுக்கு வருகிறார் என்பதற்காக அவர் வரும் வழியிலும் கோயிலும் போலீசார் காவலுக்கு நிறுத்தப்படுகிறார்கள். பெண் போலீஸ் ஆன ஸ்ரீபிரியங்கா மீது சபலத்துடன் இருக்கும் இன்ஸ்பெக்டர் அவரைப் பழி வாங்குவதற்காக ஒரு மேம்பாலத்தின் மீது நிற்க வைத்து பழி வாங்கத் துடிக்கிறார். பல மணி நேரமாக அங்கேய நிற்கும் ஸ்ரீபிரியங்காவிற்கு சிறுநீர் கழித்து ஆக வேண்டிய கட்டாயம். ஆனால், அவரால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வேறு எங்கும் செல்ல முடியாத அளவிற்கு இன்ஸ்பெக்டர் அதிகாரத்தால் கட்டுப்படுத்துகிறார். தவியாய் தவிக்கும் ஸ்ரீபிரியங்கா அதன் பின்ன என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு மேம்பாலம், மேம்பாலத்தின் மீது ஒரு பெண் போலீஸ். இதுதான் படத்தின் முக்கியமான கதைக்களம். அவ்வப்போது ஒரு கோயில், ஒரு டீக்கடை, ஒரு மருத்துவமனை மற்றும் சில துணைக் கதாபாத்திரங்கள்.

ஸ்ரீபிரியங்காவின் நிலையைப் பார்த்து பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பரிதாப்படும் அளவிற்கு அவரது கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் அப்பாவித்தனமாய் நடித்து அனுதாபத்தை அள்ளுகிறார். ஒரு நாள் முழுவதும் யாரோ ஒரு விவிஐபி அந்தப் பக்கமாக சில நொடிகள் மட்டுமே கடக்கும் நேரத்திற்காக எத்தனை பேர் கடமை என்பதற்காக கட்டுப்பட்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்பதை நினைக்கும் போது அதன் மீது நமக்கு கோபம் வரத்தான் செய்கிறது.

ஸ்ரீபிரியங்காவின் நிலையைப் பார்த்தும் அவர் மீது சிறிதும் பரிதாபப்படாமல் அவரை மேலும் கஷ்டப்படுத்திப் பார்க்கும் மேலதிகாரியாக முத்துராமன்.

ஸ்ரீபிரியங்காவின் காதலனாக ஹரீஷ்குமார். எப்படியாவது காதலிக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். ஆம்புலன்ஸ் டிரைலவரான அவருக்கும் கடமையே கண் என்பதால் காதலிக்கு உதவி செய்ய முடியாமல் போய்விடுகிறது. மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள சீமான், ஈ.ராமதாஸ், வீ.கே. சுந்தர் அவரவர் பங்கிற்கு நிறைவாக நடிக்க முயற்சித்திருக்கிறார்கள்.

படத்தின் கதை ஏற்படுத்தும் அனுதாபத்தை, திரைக்கதையில் இன்னும் கூடுதலாக சேர்த்திருக்கலாம். அதோடு மேக்கிங்கில் எந்த ஒரு ஈர்ப்பும் இல்லாமல் இருக்கிறது படம்.

இலங்கை மந்திரிதான் விவிஐபி ஆக வருகிறார் என அமைத்து, சிலர் வெடிகுண்டு வைக்க வருகிறார்கள் என்ற ஒரு பரபரப்பைக் காட்டி அதை கதைக்கு எந்த விதத்திலும் உதவாத அளவிற்கு வலிய திணித்திருக்கிறார்கள்.

பெண்களுக்கான அவசியமான ஒரு பிரச்சினையை கதையாக எடுத்துக் கொண்டதற்காகப் பாராட்டலாம். ஆனால், அதை ஏதோ கடமைக்காக சொன்னது போல சொல்லியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

மிக மிக அவசரம் - மிக நிதானம்

 

பட குழுவினர்

மிக மிக அவசரம்

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓