குய்கோ
விமர்சனம்
தயாரிப்பு - எஎஸ்டி பிலிம்ஸ் எல்எல்பி
இயக்கம் - அருள் செழியன்
இசை - அந்தோணி தாசன்
நடிப்பு - யோகி பாபு, விதார்த், ஸ்ரீபிரியங்கா, இளவரசு
வெளியான தேதி - 24 நவம்பர் 2023
நேரம் - 1 மணி நேரம் 53 நிமிடம்
ரேட்டிங் - 3.5/5
தமிழ் சினிமாவில் மக்களின் வாழ்வியல் பற்றிய படங்கள் அவ்வப்போது வருவது உண்டு. அப்படிப்பட்ட படங்களிலும் இன்னும் சொல்லப்படாத பல கதைகள் இருக்கின்றன என்பது இந்தப் படத்தைப் பார்க்கும் போதும் புரியும். ஒரு சிறிய உணர்வுபூர்வமான விஷயத்தை வைத்து அதில் எந்த அளவுக்கு நகைச்சுவையை வைக்க முடியுமோ, சமுதாயத்தில் நடக்கும் சில விஷயங்களை விமர்சிக்க முடியுமோ அந்த அளவிற்குச் செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் அருள்செழியன்.
சவுதியில் அரச குடும்பத்தின் ஒட்டகங்களை மேய்க்கும் வேலை பார்ப்பவர் யோகிபாபு. அவரது அம்மா திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ஒரு மலைகிராமத்தில் இறந்து போகிறார். அவரது உடலை சில நாள் பாதுகாத்து வைக்க 'ப்ரீசர் பாக்ஸ்' கொண்டு வருகிறார் விதார்த். ஊரிலிருந்து வரும் யோகி பாபு அம்மாவைத் தகனம் செய்து முடிக்கிறார். அதோடு அம்மாவின் உடலை சில நாட்கள் பாதுகாத்து வைத்த அந்த ப்ரீசர் பாக்ஸை விலைக்கு வாங்கி அதை 'குடியிருந்த கோயில்' ஆக பாவித்து தனி அறையில் வைத்து வணங்கி வருகிறார். இந்நிலையில் அவரது முன்னாள் காதலி துர்காவின் அம்மா இறந்துவிட அந்த பாக்ஸைக் கேட்டு வருகிறார்கள். காதலியின் அண்ணன் தன்னை அவமானப்படுத்தியதால்தான் சவுதி சென்றவர் யோகிபாபு. அவர் அந்த பாக்ஸைக் கொடுத்தாரா, அவரது காதல் என்ன ஆனது, என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
மலை கிராமம் என்றதுமே ஊட்டி, கொடைக்கானல் ஆகிய ஊர்களைச் சுற்றித்தான் கதைகளைச் சொல்வது வழக்கம். இந்தப் படத்தில் செங்கம் அருகே உள்ள ஒரு மலைகிராமம் என இதுவரை யாரும் காட்டாத ஒரு இடத்தைக் காட்டியிருக்கிறார் இயக்குனர். அந்த இடத்தையே ஒரு ஊட்டி, கொடைக்கானல் போல அழகாகக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ். படத்திற்குக் கூடுதல் படமாக அந்தோணி தாசன் பாடல்களும் அமைந்துள்ளது. படத்தில் நடித்துள்ள ஒவ்வொருமே அவ்வளவு யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள்.
படம் ஆரம்பித்த கொஞ்ச நேரம் கழித்துதான் யோகிபாபுவின் என்ட்ரி அமைந்துள்ளது. அவர் இதற்கு முன்பு கதாநாயகனாக நடித்து வந்த படங்கள் அவருக்காகவே எழுதப்பட்டது போல இருக்கும். இந்தப் படத்தில் ஒரு அருமையான கதாபாத்திரத்திற்குள் அவர் வந்து செட் ஆகி பொருத்தமாக நடித்திருக்கிறார். அவருடைய வழக்கமான டைமிங் வசனங்கள் ஒவ்வொரு காட்சியிலும் அமைந்து சிரிக்க வைக்கிறது. எந்த இடத்திலும் அவருடைய கதாபாத்திரமோ, அவருடைய நடிப்போ அதன் எல்லையை மீறிச் செல்லாமல் இயல்பாக அமைந்து ரசிக்கவும் வைக்கிறது.
படத்தின் இன்னொரு கதாநாயகன் விதார்த். ஒரு பணத் தேவைக்காக தாய் மாமன் முத்துக்குமார் சொன்னதால் அந்த ப்ரீசர் பாக்ஸை எடுத்துக் கொண்டு மலைக்கிராமத்திற்குச் செல்கிறார். ஒரு போலீஸ் விசாரணையிலிருந்து தப்பிக்கவும் அங்கேயே சில நாட்கள் தங்கியும் விடுகிறார். ஒரு யதார்த்த நடிகரை 'மைனா' படத்திற்குப் பிறகு சரியாகப் பயன்படுத்தியுள்ள படம் இதுதான்.
யோகிபாபுவின் அக்கா மகளாக ஸ்ரீபிரியங்கா. ஆனால், அவர் யோகிபாபுவின் ஜோடி இல்லை. யோகிபாபுவின் காதலியாக துர்கா. சில காட்சிகள் மட்டுமே வந்து போகிறார். விதார்த், ஸ்ரீபிரியங்கா இடையில் ஒரு சில காதல் காட்சிகளையாவது வைத்திருக்கலாம்.
படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் இளவரசு. ஊரில் எந்த நல்லது, கெட்டது நடந்தாலும் முன்னின்று நடத்துபவர். யோகிபாபுவையும் மிஞ்சும் அளவிற்கு படம் முழுவதும் நகைச்சுவையில் தூள் கிளப்புகிறார். அவருடைய சில வசனங்களுக்குக் கைத்தட்டாமல் இருக்க முடியவில்லை.
படத்தின் சுவாரசியத்திற்கும் கலகலப்புக்கும் முக்கிய காரணம் வசனம். இயக்குனர் அருள்செழியன் பல விஷயங்களை நேரடியாகவும், சில விஷயங்களை மறைமுகமாகவும் சொல்லி கலகலப்பூட்டுகிறார். குறிப்பாக 'சேகர்-பாபு', 'வடிவேலு', 'போலீஸ்' பற்றிய வசனங்கள் வரும் போது தியேட்டரே சிரிக்கிறது.
எளிமையான கதை, எளிமையான மனிதர்கள், அவர்களின் வாழ்வியல்கள், அதோடு சுவாரசியமான காட்சிகள் என ஆரம்பம் முதல் கடைசி வரை கலகலப்பாக நகர்கிறது இந்த 'குய்கோ'.
குய்கோ - குன்றின் மணி