
லாந்தர்
விமர்சனம்
தயாரிப்பு - எம் சினிமா புரொடக்ஷன்
இயக்கம் - சாஜி சலீம்
இசை - பிரவீண்
நடிப்பு - விதார்த், ஸ்வேதா டோரதி
வெளியான தேதி - 21 ஜுன் 2024
நேரம் - 1 மணி நேரம் 57 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
தமிழ் சினிமா அதிகம் பார்த்த 'சைக்கோ' கொலையாளியைப் பற்றிய கதைதான் இந்தப் படம். படத்தின் இயக்குனர் இதற்கு முன்பு வெளிவந்த இப்படியான சில தமிழ், ஆங்கிலப் படங்களைப் பார்த்துத்தான் இப்படி ஒரு கதையை எழுதியிருப்பார். ஆனாலும், ஒரு த்ரில்லர் படத்தை எப்படி கொடுக்க வேண்டும் என்பதை அவர் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
கோயம்பத்தூரில் அசிஸ்டென்ட் கமிஷனராக இருப்பவர் விதார்த். ஒரு நாள் இரவில் யாரோ ஒருவர் சாலையில் வழியில் காண்பவர்களை அடித்தும், சிலரைக் கொலையும் செய்கிறார். அந்த நபர் யார் என விதார்த் தலைமையிலான போலீஸ் குழுவினர் தேடிக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். அந்த நபர் யார் எனத் தேடிக் கண்டுபிடிக்கும் போது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
டெபுடி கமிஷனராக கம்பீரமாக நடிக்காமல் ஒரு யதார்த்தமான போலீஸ் ஆகவே நடித்திருக்கிறார் விதார்த். மனைவியைக் கொஞ்சுவதற்குக் கூட நேரமில்லாமல் கடமை, கடமை என ஓடிக் கொண்டிருக்கிறார். போலீஸ் வாகத்தில் பயணித்த படி ஒயர்லெஸ் பேசுவதிலேயே அவருடைய நேரம் வீணாகப் போகிறது. ஏதோ, பெரிதாக விசாரிக்கப் போகிறார் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே. அதற்கு அவருடைய கதாபாத்திரத்தை ஒரு இன்ஸ்பெக்டராகவே காட்டியிருக்கலாம்.
விதார்த்தின் மனைவியாக ஸ்வேதா டோரத்தி, ஒரு சில காட்சிகளில் வந்து போகிறார். இன்னும் சில முக்கிய துணை கதாபாத்திரங்கள் உள்ளன. ஆனால், அவற்றைப் பற்றி சொன்னால் கொஞ்சமாக இருக்கும் அந்த சஸ்பென்ஸ் போய்விடும். பிளாஷ்பேக் காட்சியில் வரும் அந்த இரண்டு துணை கதாபாத்திரங்கள்தான் படத்தின் திருப்புமுனைக்கும் காரணம்.
ஒரே ஒரு இரவு நாளில் நடக்கும் கதை என்பதால் இரவு நேரக் காட்சிகள் அதிகம், அதிலும் சாலை சார்ந்த காட்சிகள் அதிகம். அதற்காக ஒளிப்பதிவாளர் ஞானசௌந்தர் நிறையவே உழைத்திருப்பார் என்பது தெரிகிறது. பிரவீண் பின்னணி இசை பரவாயில்லை ரகம்.
ஒரு த்ரில்லர் படம் என்றால் திரைக்கதை என்பது விறுவிறுப்பாக நகர வேண்டும். அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற பதைபதைப்பு வேண்டும். ஆனால், இந்தப் படத்தில் அப்படி எதுவும் இல்லை. துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஒருவருக்குக் கூட நடிப்பு என்பதே வரவில்லை. அவர்கள் நடிப்பையும் பேசுவதையும் பார்த்து தியேட்டரில் சிரிக்கிறார்கள்.
லாந்தர் - வெளிச்சமில்லாமல்…