விமர்சனம்
தயாரிப்பு - திருச்சித்திரம்
இயக்கம் - எஸ்.பி.சுப்புராமன்
இசை - ராகவ் பிரசாத், கலாசரண்
நடிப்பு - விதார்த், வாணி போஜன், ரகுமான்
வெளியான தேதி - 7 ஜுன் 2024
நேரம் - 2 மணி நேரம்
ரேட்டிங் - 3/5
இந்திய மருத்துவத் துறையில் மருத்துவப் படிப்புகளைப் படிப்பதற்கு சில வருடங்களுக்கு முன்பு தகுதித் தேர்வாக 'நீட்' தேர்வுகள் கட்டாயம் என கொண்டு வரப்பட்டது. அத்தேர்வுகள் வந்த நாளிலிருந்து இப்போது வரையிலும் தொடர்ந்து சில பல சர்ச்சைகளாகவே நடந்து வருகிறது. இதனால், ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற குரல் ஒரு பக்கம் இருந்து வருகிறது. நீட் தேர்வுகளை எழுதுவதற்காக சில லட்சங்கள் செய்து கோச்சிங் செல்ல வேண்டியிருக்கிறது என்றும் மறுபுறம் குரல்கள் எழுகின்றன. வசதியானவர்கள் மட்டுமே அம்மாதிரியான கோச்சிங் செல்ல முடிகிறது, ஏழை மாணவர்களால் செல்ல முடியவில்லை என்றும் பல ஏழை பெற்றோர்கள் புலம்புகிறார்கள். அப்படியான ஒரு ஏழை பெற்றோரின் கதைதான் இந்த 'அஞ்சாமை'.
திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நாடகக் கலைஞராக இருப்பவர் விதார்த். மனைவி வாணி போஜன், ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். அரசு பள்ளியில் படிக்கும் மகன் கிருத்திக் மோகன் 10ம் வகுப்பில் மாவட்டத்தில் முதல் மாணவனாகத் தேர்வாகிறான். அடுத்து 12ம் வகுப்பு முடித்து டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்பது கிருத்திக்கின் ஆசை. அப்போது டாக்டருக்குப் படிக்க நீட் தேர்வுகள் கட்டாயம் என்ற அறிவிப்பு வருகிறது. மகனை தனியார் கோச்சிங் சென்டர் ஒன்றில் சேர்த்து படிக்க வைக்கிறார் விதார்த். ஆனால், நீட் தேர்வை அவரது ஊரில் எழுத விடாமல் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள பள்ளியில் எழுத வேண்டும் என வருகிறது. சிரமப்பட்டு ஜெய்ப்பூர் சென்று தேர்வு எழுதுகிறார் கிருத்திக். ஆனால், ரயில் பயணம், தூக்கமின்மை ஆகியவற்றால் விதார்த் ஜெய்ப்பூரில் இறந்து போகிறார். தனது அப்பா இறப்புக்கு இப்படி அலைக்கழிக்கப்பட்டது தான் காரணம் என அரசு நிர்வாகத்தின் மீது வழக்கு தொடுக்கிறார் மகன் கிருத்திக். அவருக்கு உதவியாக வக்கீல் ரகுமான் வாதாட முன் வருகிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரு ஏழைக் குடும்பத்தின் வாழ்வியலை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் எஸ்.பி. சுப்புராமன். தன் மகனின் படிப்புக்காக நாடகத்தில் நடிப்பதையே நிறுத்திவிடுகிறார் அப்பா விதார்த். அதன் பின் நிலத்தில் வேலை செய்யும் வேலையை மட்டும் பார்க்கிறார். அந்த சொற்ப வருமானத்தில் மகனை எப்படியாவது படிக்க வைக்க வேண்டுமென நிலத்தையும் அடமானம் வைக்கிறார். படிப்புக்காக அல்லல்படும் பல ஏழைக் குடும்பங்களின் கஷ்டத்தை இயல்பாய் காட்டியிருக்கிறார் இயக்குனர்.
பாசமான அப்பா கதாபாத்திரத்தில் விதார்த். மகனுக்காக தன் நாடக ஆசையையும் துறக்கிறார். குடும்பக் கஷ்டத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மகன் எப்படியாவது படித்து நீட் தேர்வு எழுதி டாக்டராக வேண்டும் என ஓடியாடி உழைக்கிறார். பிள்ளைகளின் படிப்புதான் முக்கியம் என கஷ்டப்படும் எத்தனையோ அப்பாக்களின் பாசத்தை கண் முன் காட்டியிருக்கிறார் விதார்த். இடைவேளை வரை மட்டுமே அவர் வந்தாலும் நெகிழ வைக்கும் ஒரு கதாபாத்திரம்.
விதார்த் மனைவியாக வாணி போஜன். ஏழை கிராமத்து அம்மாவை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். ஆனால், இடைவேளைக்குப் பின் நீதிமன்றக் காட்சிகளில் அவரை எங்குமே காணவில்லை.
நன்றாகப் படிக்கும் மகனாக கிருத்திக் மோகன். இந்தப் படத்தின் நாயகன் என்று இவரைத்தான் சொல்ல வேண்டும். ஒரு கனமான கதாபாத்திரத்தில் அதன் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
வக்கீல் கதாபாத்திரத்தில் ரகுமான். அவர் வாதாடும் காட்சிகளில் சில வசனங்கள் கைத்தட்டலைப் பெறுகின்றன. இன்ஸ்பெக்டராக இருந்து அரசுக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்ததால் துறை விசாரணைக்கு ஆளாகிறார். ஆனால், அவர்கள் டிஸ்மிஸ் செய்வதற்கு முன்பே இவர் ராஜினாமா செய்யும் ஒரு நேர்மையான கதாபாத்திரம்.
பாடல்களுக்கு ராகவ் பிரசாத் இசையமைத்திருக்கிறார். கலாசரணின் பின்னணி இசை குறிப்பிட வேண்டிய ஒன்று. உணர்வுபூர்வமான காட்சிகள் அடிக்கடி வருவதால் அதற்கேற்ப உருக வைத்துள்ளார்.
படத்தின் ஆரம்பக் காட்சிகள் கொஞ்சம் தடுமாறினாலும், பின்னர் சரியான பாதையை நோக்கி நகர ஆரம்பிக்கிறது. கிளைமாக்சில் ஏதோ ஒரு முடிவைச் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தால் அப்படி எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். இருந்தாலும் நாம் நாளிதழ்களில் அடிக்கடி படித்த விஷயங்களை நாமும் உணரும்படி காட்டியிருக்கிறார்கள்.
அஞ்சாமை - ஆற்றாமை