விமர்சனம்
தயாரிப்பு - ஆர்பி பிலிம்ஸ்
இயக்கம் - ஆர்.பி. பாலா
இசை - ரோபின் ரபேல்
நடிப்பு - பரத், வாணி போஜன், விவேக் பிரசன்னா
வெளியான தேதி - 28 ஜுலை 2023
நேரம் - 1 மணி நேரம் 43 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5
'லவ்' எனப் பெயரை வைத்துவிட்டு 'லவ்வே' இல்லாமல் ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அழகான ஒரு காதல் கதைக்கு வைக்க வேண்டிய பெயரை 'கள்ளக் காதல்கள்' கொண்ட ஒரு படத்திற்கு வைத்து வீணடித்திருக்கிறார்கள். 2021ல் மலையாளத்தில் வெளிவந்த 'லவ்' என்ற திரைப்படத்தை அப்படியே ரீமேக் செய்திருக்கிறார்கள்.
'புலி முருகன், குரூப்' உள்ளிட்ட மலையாள டப்பிங் படங்களுக்கு தமிழில் வசனம் எழுதிய ஆர்.பி.பாலா இப்படத்தை இயக்கியிருக்கிறார். முழு படமும் ஒரு அபார்ட்மென்ட் வீட்டுக்குள்ளேயே நகர்கிறது. ஒரு நாடகத்தைப் பார்ப்பது போன்ற உணர்வுதான் வருகிறதே தவிர, படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வு ஏற்படவில்லை.
பணக்கார வீட்டுப் பெண் வாணி போஜன். அவரது அப்பா ராதாரவி சொல்லி பரத்தை சந்தித்து திருமணம் பற்றி பேச வருகிறார். பிசினஸ் ஆரம்பித்து தோற்றுப் போனவர் பரத். அப்பா திடீரென வேண்டாமென்று சொல்லியும் பரத்தைத் திருமணம் செய்து கொள்கிறார் வாணி. ஆனால், இருவரது திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இல்லை. தாய்மை அடைந்த செய்தியை மருத்துவமனையில் உறுதி செய்துவிட்டு வீட்டிற்க வரும் வாணியிடம் சண்டை போட்டு அவரைக் கொன்றும் விடுகிறார் பரத். திடீரென காலிங் பெல் அடிக்க, வாணியின் உடலை பாத்ரூமில் மறைத்து வைக்கிறார். பரத்தின் நெருங்கிய நண்பர் விவேக் பிரசன்னா வீட்டிற்குள் வர, மனைவியைக் கொன்ற நிலையில் அடுத்து என்ன செய்வது என யோசிக்கிறார் பரத். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படம் முழுவதும் வெறுப்பைக் காட்டிக் கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் பரத். பிசினஸில் தோல்வியடைந்த, வேறு எதையும் சரியாக முயற்சிக்காத பொறுப்பில்லாத ஒரு கணவர். படத்தில் அவர் நடித்ததை விட குடித்ததுதான் அதிகமாக இருக்கும். அந்த 'சரக்கு' பாட்டில் குடிக்கக் குடிக்கக் குறையாமல் இருக்கிறது. அப்படி ஒரு 'சரக்கு' கிடைத்தால் குடிமகன்களுக்கு செலவு குறையும்.
வாணி போஜனுக்கு ஆரம்பத்தில் ஓரிரு காட்சிகள், அதோடு கிளைமாக்சில் மட்டும். மற்ற நேரங்களில் பாத்ரூமில் பிணமாக சுருண்டு கிடக்கிறார். பரத்தின் நெருங்கிய நண்பராக விவேக் பிரசன்னா. அவரது மனைவியை அவரது நண்பன் ஒருவரே கள்ளக் காதல் புரிகிறார் என பரத் வீட்டில் வந்து புலம்பிக் கொண்டு கூட சேர்ந்து குடிக்கிறார். வேறொருவரின் மனைவியான தனது முன்னாள் காதலியை அழைத்துக் கொண்டு பரத் வீட்டிற்கு வருகிறார் டேனி அனி போப். ஒரு கட்டத்தில் அது வீடா இல்லை 'லோக்கல்' லாட்ஜா என யோசிக்க வைக்கிறது.
ஒரே வீட்டை எப்படியாவது விதவிதமான கோணங்களில் காட்ட வேண்டும் என நிறையவே முயன்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் முத்தையா. ரோனி ரபேல் பின்னணி இசையும் படத்தைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை.
ஒரு படம் என்றால் அதில் ஏதாவது ஒரு விஷயமாவது ரசிக்கும்படி இருந்தால் ரசிகர்களால் கொஞ்சமாவது ரசிக்கப்படும். அப்படி எவ்வளவு தேடினாலும் இந்தப் படத்தில் எதுவும் கிடைக்கவில்லை. 'காதல்' என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் ஒரு இடத்தைப் பிடித்த பரத்தின் 50வது படம் இந்த 'லவ்'. அப்போது வந்த 'காதல்' கவர்ந்தது, இப்போது வந்த இந்த 'லவ்' கசக்கிறது.
லவ் - அவ்வ்வ்வ்வ்வ்…