பாயும் ஒளி நீ எனக்கு
விமர்சனம்
தயாரிப்பு - கார்த்திக் மூவி அவுஸ்
இயக்கம் - கார்த்திக் அத்வைத்
பின்னணி இசை - சன்னி - சாகேத்
நடிப்பு - விக்ரம் பிரபு, வாணி போஜன்
வெளியான தேதி - 23 ஜுன் 2023
நேரம் - 1 மணி நேரம் 59 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5
பழி வாங்கும் கதைகளை எழுதத்தான் தமிழ் சினிமாவில் பலருக்கும் எளிதாக வரும் போலிருக்கிறது. அப்பாவைக் கொன்றவர்களை, அம்மாவைக் கொன்றவர்களை, பெற்றோரைக் கொன்றவர்களை, உடன் பிறந்தவர்களைக் கொன்றவர்களைப் பழி தீர்க்கத் துடிக்கும் கதாநாயகனை காலம் காலமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த பழி வாங்கலில் ஏதாவது புதிதாகச் செய்து ரசிகர்களை ரசிக்க வைப்போம் என முயற்சிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் இயக்குனர் கார்த்திக் அத்வைத், படத்தின் கதாநாயகனுக்கு பார்வை குறைபாடு என்று கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார். சிறு வயதில் நடந்த ஒரு விபத்தில் கதாநாயகனுக்கு பார்வை பிரச்சினை வருகிறது. நல்ல வெளிச்சத்தில் மட்டுமே கண் தெரியும், குறைவான வெளிச்சத்தில் கண் தெரியாது என்பதே அது. அதுதான் இந்தப் படத்தில் இருக்கும் ஒரே ஒரு புதிய விஷயம். மற்றபடி இதற்கு முன்பு பல படங்களில் பார்த்த அதே பழி வாங்கும் ஆக்ஷன் படம்தான் இது. பாரதியாரின் 'பாயும் ஒளி நீ எனக்கு' என்ற பாடலை படத்தில் இரண்டு காட்சிகளில் சரியாக வைத்து உணர்வூட்டுகிறார் இயக்குனர்.
விக்ரம் பிரபு நண்பன் விவேக் பிரசன்னாவுடன் சேர்ந்து சிறிய கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். கண் பார்வை குறைபாடுள்ள விக்ரம் பிரபுவை யாரோ சிலர் கடத்தி அடைத்து வைக்கிறார்கள். அங்கிருந்து அவர் தப்பித்து வருகிறார். அதன்பின் அவரது சித்தப்பா ஆனந்த்தை யாரோ கொலை செய்கிறார்கள். அப்போது சித்தப்பாவுடன் இருந்தும், இரவு நேரமாகிவிட்டதால் பார்வை சரியாகத் தெரியாமல் அவரைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கிறார் விக்ரம் பிரபு. சித்தப்பாவின் கொலைக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து பழி வாங்கத் துடிக்கிறார். அந்தக் கொலையாளியைக் கண்டுபிடித்தாரா, பழி வாங்கினாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இதற்கு முந்தைய படங்களை விட இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவின் தோற்றத்தில் நிறைய மாற்றம் தெரிகிறது. அவரது ஹேர்ஸ்டைல், தாடி ஆகியவை அவருக்கு மாறுபட்ட தோற்றத்தைக் கொடுத்துள்ளது. கண்பார்வை குறைபாடுள்ள கதாநாயகன் என்பதை படத்தின் ஆரம்பத்தில் இயக்குனர் காட்டவில்லை. சில காட்சிகளுக்குப் பிறகுதான் அவரது கதாபாத்திரம் பற்றி நமக்கு உணர்த்துகிறார். படத்தின் கதாநாயகி வாணி போஜனை முதலில் சந்திக்கும் காட்சியில் கூட திடீரென வாணி போஜனின் குளோசப் காட்சிகள் ஏன் இருட்டாகத் தெரிகிறது என படத்தின் ஒளிப்பதிவாளரைத் திட்ட வைக்கிறார் இயக்குனர். அதன்பின் காரணம் தெரிந்ததும் இயக்குனரின் பார்வை பாராட்ட வைக்கிறது. இப்படி சில பல காட்சிகளில் இயக்குனர் புதிதாக யோசித்திருந்தாலும் பரபரப்பான திரைக்கதையை யோசிக்கத் தவறிவிட்டார்.
விக்ரம் பிரபுவின் காதலியாக வாணி போஜன். அவர் கூடவே இருப்பதைத் தவிர அவருக்கு அழுத்தமான காட்சிகள் என எதுவும் இல்லை. அவர் கூடவே இருக்கும் மற்றொருவர் நண்பர் விவேக் பிரசன்னா. மூவரும் சேர்ந்துதான் அப்பாவைக் கொன்றது யார் எனக் கண்டுபிடித்து பழி வாங்கத் துடிக்கிறார்கள். அதற்காக அவர்கள் செய்யும் சில விஷயங்கள் விளையாட்டுத்தனமாய் இருக்கிறது. அதிலும் குறிப்பாக மருத்துவமனைக்குச் சென்று மெயின் சர்வரிலிருந்து பைல்களைக் காப்பி செய்து கொண்டு வரும் காட்சி ஒரு உதாரணம்.
வில்லனாக தனஞ்செயா. வட சென்னை பகுதி அரசியல் ரவுடியாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் வில்லன்கள் பற்றாக்குறை நிறைய இருக்கிறது. இவர் முயற்சித்தால் இங்கு முக்கிய வில்லனாக மாறலாம். நல்ல அரசியல்வாதியாக வேலராமமூர்த்தி, விக்ரம் பிரபுவின் சித்தப்பாவாக ஆனந்த் கொஞ்சமாக வந்தாலும் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் இயக்குனரின் கற்பனைகளுக்கு சரியான காட்சி வடிவங்களைத் தந்திருக்கிறார். பாடல்கள், பின்னணி இசை ஏமாற்றமே.
ஆரம்பத்திலிருந்து ஓரளவிற்கு நிறைவாய் ரசிக்க வைத்தாலும், கிளைமாக்ஸ் காட்சியை வைத்த விதம் அபத்தமாய் முடிந்துவிடுகிறது. தன்னைக் கொல்ல விக்ரம் பிரபு முயற்சிப்பது தெரிந்தும், அவர் அழைத்தார் என்பதற்காக அவரது இடத்திற்கே செல்கிறார் வில்லன் தனஞ்செயா. அங்குள்ள 'செட் அப்'களைப் பார்த்தும் அவர் மீறிச் செல்வதும் படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் இல்லாததை பூர்த்தி செய்துவிடுகிறது.
பாயும் ஒளி நீ எனக்கு - பாய்ச்சல் குறைவு…
பாயும் ஒளி நீ எனக்கு தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
பாயும் ஒளி நீ எனக்கு
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்