இறுகப்பற்று
விமர்சனம்
தயாரிப்பு - பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ்
இயக்கம் - யுவராஜ்
இசை - ஜஸ்டின் பிரபாகரன்
நடிப்பு - விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்ணதி, சானியா ஐயப்பன்
வெளியான தேதி - 6 அக்டோபர் 2023
நேரம் - 2 மணி நேரம் 33 நிமிடம்
ரேட்டிங் - 3/5
குடும்ப உறவுகளை மையமாக வைத்து வரும் படங்கள் இந்தக் காலத்தில் மிகமிகக் குறைவு. கூட்டுக் குடும்பமாக இருந்த போது கணவன், மனைவியருக்கிடையே எந்த ஒரு பிரச்சனை எழுந்தாலும் அதை குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் பேசித் தீர்த்து வைப்பார்கள். அதனால், விவாகரத்து என்பது எங்கோ தான் நடந்தது. ஆனால், இப்போது கூட்டுக் குடும்ப வாழ்க்கையை அதிகம் பார்க்க முடியாத காரணத்தால் கணவன், மனைவியருக்கிடையேயான பிரச்சனையை அவர்களால் தீர்த்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக எங்கோ நடந்த விவாகரத்துக்கள் இங்கும் அதிகமாகி வருகிறது.
லேசான மனக்கசப்பாக ஆரம்பிக்கும் ஏதோ ஒரு விஷயம் கணவன், மனைவி பிரிவதற்குக் காரணமாக அமைகிறது. யாரிடத்தில் சிக்கல் உள்ளது என்பதைக் கண்டறிந்து அதைச் சரி செய்தால் வாழ்க்கை நிம்மதியாகும் என்பதை இந்தப் படத்தில் அழுத்தமாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர் யுவராஜ்.
மூன்று விதமான கணவன், மனைவி கதாபாத்திரங்கள். சைக்யாட்ரிஸ்ட் ஆக இருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அவரது கணவர் விக்ரம் பிரபு, ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் விதார்த், அவரது மனைவி அபர்ணதி, பத்திரிகையாளராக இருக்கும் ஸ்ரீ, அவரது மனைவி சானியா ஐயப்பன். இந்த மூன்று ஜோடிகளுக்குள்ளும் அவர்களது வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வருகிறது. கணவன், மனைவி பிரியக் கூடாது என்பதற்காக அவர்களுக்குக் கவுன்சிலிங் கொடுக்கும் சைக்யாட்ரிஸ்ட் ஷ்ரத்தாவுக்கே அவரது கணவர் விக்ரம் பிரபுவுடன் ஒரு சிக்கல் வருகிறது. மூன்று ஜோடிகளும் அவர்களது பிரச்சனைகளை எப்படி தீர்த்துக் கொண்டார்கள், யாராவது பிரிந்தார்களா என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
ஒரு படத்தில் ஒரு ஜோடி இருந்தாலே அவர்களுக்கான முக்கியத்துவத்தைக் கொடுக்க இயக்குனர்களுக்கு ஒரு தடுமாற்றம் இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் மூன்று ஜோடிகளை வைத்துக் கொண்டு மூவருக்குமான முக்கியவத்துவத்தை சரியாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
சைக்யாட்ரிஸ்ட் ஆக ஷ்ரத்தா ஸ்ரீநாத். ஒரு மெச்சூர்டான, பாந்தமான ஒரு பெண். அவரது தோற்றம், பேச்சு, மற்றவர்கள் மீதான அக்கறை அனைத்துமே நமக்கு ரொம்பவும் பிடித்துப் போகும். அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்பவரே ஒரு 'மொபைல் ஆப்' மூலம் தனது கணவருடனான வாழ்க்கையை மகிழ்வாக நடத்த முயற்சிக்கிறார் என்பது அதிர்ச்சியானது. அதனால், ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க முடியாமல் ஷ்ரத்தா தவிக்கும் போது நமக்கு அவர் மீது அனுதாபம்தான் வருகிறது.
கணவன், மனைவி என்றால் சண்டை போடாமல் இருக்கக் கூடாது. அவ்வப்போது சின்னச் சின்ன சண்டைகள் போட்டு ஒரு ஊடல் ஏற்பட்டு, அதன்பின் சில நாட்கள் பேசாமல் இருந்து, பின்னர் பேசித் தீர்த்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற சராசரி கணவனாக இருக்க ஆசைப்படும் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு. தன் மீதான பாசம் இயல்பாக வரவில்லை, அதை ஒரு 'மொபைல் ஆப்' வைத்து சோதித்துப் பார்க்கிறார் ஷ்ரத்தா எனத் தெரிந்ததும் உடைந்து போகிறார். இதுவரை விக்ரம் பிரபு நடித்த கதாபாத்திரத்திரங்களில் நமக்கு நெருக்கமான ஒரு கதாபாத்திரமாக இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.
ஒரு நடுத்தரக் குடும்பத்தின் சராசரி கணவன், மனைவியாக விதார்த், அபர்ணதி. கல்யாணம் ஆன போது தனது மனைவி ஸ்லிம்மாக இருந்தார், ஆனால், இப்போது குண்டாக மாறிவிட்டார் என்ற ஒரு காரணத்தினாலேயே மனைவியை அவருக்குப் பிடிக்காமல் போகிறது. அதை வைத்தே விவாகரத்துப் பெறத் துடிக்கிறார். இதெல்லாம் கூட ஒரு காரணமா என அதிர்ச்சி இருந்தாலும் இப்படிப்பட்டவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் என்பதும் உண்மைதான். வழக்கம் போல இயல்பான நடிப்பைத் தந்திருக்கிறார் விதார்த்.
இந்தக் காலத்து சராசரி மனைவியர் பலரின் கதாபாத்திரத்தை நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார் அபர்ணதி. குழந்தை பிறந்த பிறகு பல பெண்களின் உடலில் நிறையவே மாற்றங்கள் வரும். அதில் ஒன்று குண்டாகிப் போவது. கணவனுடன் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என துடியாய்த் துடிக்கிறார். அதற்காக தன்னை மாற்றிக் கொள்ள எவ்வளவோ முயற்சிக்கிறார். ஒரு கட்டத்தில் மனைவி என்பவள் யார் என்பதை விதார்த்துக்கு அழுத்தமாய் புரிய வைக்கிறார்.
இளம் கணவன், மனைவியாக ஸ்ரீ, சானியா ஐயப்பன். காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள் பின் அடிக்கடி சண்டை போடுபவர்களாக மாறிவிடுகிறார்கள். தன் மீது குற்றமில்லை மனைவி மீதுதான் குற்றம் இருக்கிறது என விடாப்பிடியாய் இருக்கிறார் ஸ்ரீ. எப்போதும் ஒரு சோகத்துடனேயே இருக்கிறார் சானியா. காதலித்துத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு இவர்களின் கதாபாத்திரம் ஒரு பாடமாக அமைந்தால் மகிழ்ச்சியே.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் யுவன்ஷங்கர் ராஜா பாடும் 'பிரியாதிரு' பாடல் மனதை வருடுகிறது. பின்னணி இசையிலும் உணர்வுகளுக்கு உயிரோட்டத்தைத் தந்திருக்கிறார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை மெருகூட்டியிருக்கிறது.
ஷ்ரத்தா ஸ்ரீநாத் கவுன்சிலிங் கொடுக்கும் காட்சிகள் திரும்பத் திரும்ப வருவது தான் படத்தின் நெருடல். அதுவும் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பேசுகிறார். ஒரு கட்டத்தில் அந்த அட்வைஸ், ஓவர் டோஸ் ஆக மாறிவிடுமோ என்ற அச்சத்தைத் தருகிறது. வெவ்வேறு இடங்களில் அந்த கவுன்சிலிங் காட்சிகளை வைத்திருக்கலாம்.
இறுகப்பற்று - பாசத்துடன்…
இறுகப்பற்று தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
இறுகப்பற்று
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்