தினமலர் விமர்சனம்
இனி கதாநாயகராகவே மட்டுமே நடிப்பது என உறுதியில் இருக்கும் காமெடி நாயகர் வடிவேலு, தெனாலிராமன் படத்தின் இயக்குநர் யுவராஜ் தயாளனுடன் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் தான் எலி. எலி வெறும் சிரிப்பு எலியா.? செயற்கரிய காரியங்கள் செய்யும் புலியா.? என பார்ப்போம்!
1960ம் ஆண்டுகளில் நடக்கிறது எலி படத்தின் கதை. வடிவேலு, போலீஸில் கான்ஸ்டபிள் ஆக வேண்டும் எனும் ஆசையில் இருந்தாலும், ஒரு இன்ச் மார்பளவு குறைவாக இருந்த காரணத்தால் பலே திருடனாகிவிடுகிறார். ஆனாலும், அவர் விரும்பிய போலீஸ் வேலை, போலீஸ் உயரதிகாரிகள் மூலம் வேறு ரூபத்தில் அவருக்கு கிடைக்கிறது. பெரும்புள்ளி போர்வையில், 1960களில் தடை செய்யப்பட்ட சிகரெட்டுகளை கடத்தும் பெரும் புள்ளியையும், அவரது கும்பலையும் வேவு பார்க்கும் உளவு போலீஸாகிறார் வடிவேலு.
கொலைபாதக கும்பலின் கைகளில் சிக்காமல் அந்த கும்பலில் வேவு பார்த்து, போலீசில் போட்டு கொடுத்து தான் விரும்பிய போலீஸ் வேலையை வடிவேலு சட்டப்படி அடைந்தாரா.? அல்லது சட்டத்தை டபாய்க்கும் அந்த சிகரெட் கடத்தல் கும்பலிடம் சிக்கி சின்னாபின்னமானாரா.? என்பது தான் எலி படத்தின் காமெடியும், நவீன காலத்துக்கும் பொருந்தும் கரு தாகமிக்க வசனங்களை உடைய எலி படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதி கதை!
வடிவேலு, எலி எனும் எலிச்சாமியாக தன் பாத்திரத்தை பக்காவாக செய்திருக்கிறார். போலீசுக்கு போட்டு கொடுக்கும் ஜாலி பாத்திரத்திலும் பக்காவாக பொருந்தி நடித்திருக்கிறார்.
இன்டர்வெல் வரை திரையில் காணாத கதாநாயகி சதா, இன்டர்வெல்லுக்கு பின் ரசிகர்களை சதா சதா என கூக்குரலிட வைக்கிறார்.
சிகரெட் கடத்தல் வில்லன் பிரதீப் ராவத், தன் பார்வையால் உருட்டி மிரட்டுகிறார். போலீஸ் அதிகாரி ஆதித்யா, படகுபாபு - மகாநதி சங்கர், குரங்கு குமார் - மொட்டை ராஜேந்திரன், ஜெயிலர் சந்தானபாரதி, ராஜ்கபூர், சண்முகராஜன், முத்துக்காளை, உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். ஆனாலும், படம் காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நாடகத்தன்மையுடன் நகருவதால், முன்பாதியில் ஒருக்கட்டத்திற்கு மேல் ரசிகர்கள் உஷ்... அப்பா, அம்மா... என பெருமூச்சு விடுவது தியேட்டரின் டிடிஎஸ்., டால்பி சவுண்ட்களையும் தாண்டி கேட்கிறது. ஆனாலும் அந்த குறையை பின்பாதி மறக்கடிக்க செய்து நிவர்த்தி செய்திருப்பது ஆறுதல்!
வித்யாசாகரின் இசையில், ஜெயில் தத்துவ பாடல் உள்ளிட்ட பாடல்கள் 1960 ரக சுக ராகங்கள். பால் லிவிங்கஸ்டனின் சீரியஸ் ஔிப்பதிவு பலே சொல்ல வைக்கிறது. விடி.விஜயன், பிஎஸ்.ஜாயின் கத்தரி இன்னும் கொஞ்சம் வேலை செய்திருக்கலாம். தோட்டா தரணியின் கலை பலே சொல்லும் அளவிற்கு இருக்கிறது.
மொத்தத்தில், யுவராஜ் தயாளனின் எழுத்து இயக்கத்தில், வடிவேலு 1960 கதாநாயகராக எலி படத்தில் ஜொலிக்கிறார். ரசிகர்கள் சற்றே நௌிகிறார்கள்! எலி - புலியும் அல்ல, எலியும் அல்ல!!
குமுதம் விமர்சனம்
தெனாலிராமனில் விட்டதை எலியில் பிடித்துவிடலாம் என்று நம்பி வடிவேலுவும் இயக்குநர் யுவராஜ் தயாளனும் துணிந்து களமிறங்கியிருக்கிறார்கள். விளைவு படுஏமாற்றம்.
போலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசை நிறைவேறாததால் அதே கிரிமினல் மூளையை திருட்டுத்தனத்திற்கு உபயோகிக்கிறார் எலிச்சாமியாக வரும் வடிவேலு. இதைத் தெரிந்து கொண்டு, கடத்தல் கும்பலைப் பிடிக்க வில்லன் கூட்டத்திற்குள் எலியை போலீஸ் அனுப்புகிறது. வில்லனைப் பிடித்துக் கொடுத்தால் போலீஸ் வேலை. இதுதான் கதை.
1960களில் மெட்ராஸில் நடக்கும் கதை இது. படம் நடக்கும் காலகட்டமும் பழசு. திரைக் கதையும் காட்சியமைப்பும் அதைவிட பழசு.
எலியாக வருகிறார் வடிவேலு. போலீஸ் உயர் அதிகாரி வீட்டில் கொள்ளையடிப்பது போன்ற சில காட்சிகளில் வயிறு குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கிறார். இதை முழுப் படத்திற்கும் தக்கவைக்க அவரால் முடியவில்லை என்பதுதான் சோகம்.
ஹீரோயின் சதாவை சாதாவாக்கி விட்டார்கள். அந்நியன் நாயகிக்கு இப்படியொரு நிலைமையா? என்றாலும் ஓரிரு காட்சிகளில் மட்டும் வந்தாலும் ரசிகர்களைக் குளிர்விக்கிறார்.
வில்லன் பிரதீப் ராவத் (கஜினி வில்லன்) மிரட்டலுக்கு வாய்ப்பு இருந்தும் அவரைப் பார்த்தால் சிரிப்பு வருமாறு செய்திருப்பது கொடுமை.
படத்தில் காமெடிக்காக பெசன்ட் ரவி, மகாநதி சங்கர், சந்தானபாரதி, போஸ் வெங்கட், பூச்சி முருகன், மொட்டை ராஜேந்திரன் இவ்வளவு இருந்தும் சுவாரஸ்யமே இல்லை.
தோட்டாதரணியின் 1960-களின் செட்டும் பழைய கார்களும் கொஞ்சம் பார்க்க வைக்கிறது. ஒளிப்பதிவும், இசையும் ஓ.கே. ரகம்.
வடிவேலு என்று நகைச்சுவை ஜாம்பாவனுக்காக பொறுமையாகக் காத்திருந்த ரசிகர்களை ஹீரோவும் இயக்குநரும் சேர்ந்தே ஏமாற்றியிருக்கிறார்கள். முழுப் படத்தையும் இப்படி பழையபாணி காமெடியை வைத்தே ஓட்டு ஓட்டு என்று ஓட்டுவார்கள்? ரசிகர்கள் சோர்வடைந்து போனதுதான் மிச்சம்.
மொத்தத்தில் எலி - ரசிகர்களை வாங்கிவிட்டது பலி!
குமுதம் ரேட்டிங் - சுமார்
கல்கி சினி விமர்சனம்
பொதுவாக ஃப்ளாஷ்பேக் காட்சிகள் வைப்பது திரைப்பட வழக்கம்தான். எப்படியும் ஒரு கட்டத்தில் நிகழ்காலத்துக்குப் படம் திரும்பிவிடும். ஆனால் எலி படத்தில் 1960களில் நடக்கும் காட்சிகளுடன் படம் ஆரம்பித்து, 60களிலேயே கதை நடந்து, அந்தக் காலகட்டத்திலேயே முடிந்தும் விடுகிறது!
60களில் நடக்கும் படம் என்பதைச் சொல்வதற்காக, கை ரிக்ஷா, அந்தக் கால சினிமா போஸ்டர்கள், மாரிஸ் மைனர் கார், வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள், பெரிய காலர் வைத்த சட்டைகள், ட்ரங் கால், ரவுடிகளின் கழுத்தில் கர்சீஃப் என்று வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அதற்காக அட்டை செட்டிங்குகளும், அரதப் பழசான பின்னணி இசையுமா அதேபோல இருக்கவேண்டும்? கொடுமைடா சாமி!
ஆரம்பக் காட்சிகள் மிக அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. உடனே படத்தின் ஆரம்பக் காட்சி என்று நினைத்தால் ஏமாந்துதான் போவீர்கள். சிகரட் ஸ்மோக்கிங் ஈஸ் இஞ்சூரியஸ் டு ஹெல்த் என்ற வடிவேலுவின் குரலைக் கேட்டவுடன் ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர். அதன் பின்னர் ஙே!
சுவாரசியமில்லாமல் படம் நகர்கிறது. வடிவேலுவின் அற்புதமான நடிப்பைச் சரியாகப் பயன்படுத்தாமல் சொதப்பலான கதையும் திரைக்கதையும் வீணடித்திருக்கின்றன. தேவையில்லாமல் பெண் வேடம் போட்டும்கூட சிரிப்பை வரவழைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனாலும் நோ யூஸ்!
"மேரே சப்னம் கீ ரானி ஹிந்திப் பாடலை முழுக்க இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். நல்லவேளை ராஜேஷ்கன்னா உயிருடன் இல்லை. இருந்திருந்தால் மிகவும் நொந்திருப்பார். வடிவேலு சண்டைக் காட்சிகளில் போடும் காமெடி ஃபைட்டை சீரியஸாகவும், சீரியசாக சண்டை போடும்போது கேலிச்சிரிப்போடும் ரசிகர்கள் பார்க்கிறார்கள். பின்னணி இசை காதைத் துளைக்கிறது.
கதாநாயகியாக இருந்த சதாவை விடுதியில் ஆடும் நடன மங்கையாக்கி இருக்கிறார்கள்ள. எப்படி இருந்த சதா இப்படி ஆகிவிட்டாரே!
வடிவேலுவின் பாடி லாங்வேஜ் சூப்பர்! வடிவேலுவின் கூட்டாளியாக வரும் மொட்டைத் தோழரின் முக பாவங்கள் அவ்வப்போது மாறிக் கொண்டே இருப்பதும் அருமை!
பல படங்களில் காவல்துறை அதிகாரிகளைக் கோமாளிகளாகச் சித்தரித்திருப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் காண்பித்திருப்பதைப்போல அடி முட்டாள்களாக வேறெதிலும் காட்டியிருக்க முடியாது.
வடிவேலு படம் என்றால் குழந்தைகளும் ரசிப்பார்கள் என்று சிலர் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார்கள். குழந்தைகளின் கடுப்பைச் சமாளிக்க முடியாமல் அவர்கள் திணறியதைப் பார்க்க முடிந்தது. படத்தில் ஆங்காங்கே உள்குத்து வசனங்களும் இருக்கின்றன.
"எலி பார்ட் 2 இருக்கிறது என்று கடைசியில் சூசகமாகச் சொல்கிறார்கள்! அதிர்ச்சியாக இருக்கிறது!
மொத்தத்தில் எலி... ரசிகர்களுக்கு கிலி!