2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ்
இயக்கம் - வசந்தபாலன்
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு - ஜிவி பிரகாஷ்குமார், அபர்ணதி
வெளியான தேதி - 9 டிசம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம் 14 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

'வெயில், அங்காடித் தெரு' என எளிய மனிதர்களின் வாழ்க்கையை அவ்வளவு யதார்த்தமாகப் பதிவு செய்தவர் வசந்தபாலன். அந்த இரண்டு படங்களும் அவர் மீதான பார்வையை ரசிகர்களிடத்தில் அதிகரிக்கச் செய்தது.

'ஜெயில்' படத்தைப் பற்றிய அறிவிப்பும், அதன்பிறகு அந்தப் படத்தைப் பற்றி வந்த செய்திகளும் அந்தப்படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தின. பட வெளியீட்டிற்கு முன்பு இயக்குனர் வசந்தபாலன் இந்தப் படம் பற்றி பேசிய பேச்சுக்கள், கொடுத்த பேட்டிகள் மீண்டும் ஒரு சிறந்த படத்தைப் பார்க்கப் போகிறோம் என ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது.

'குடிசைப் பகுதி மக்களின் மறு குடியமர்வு' பற்றிய படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறேன் என்றார். படம் ஆரம்பிக்கும் போதும், படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் போதும் அவர் சொன்ன நம்பிக்கை லேசாகத் துளிர்விட ஆரம்பித்தது. ஆனால், போகப் போக அவர் சொல்ல வந்த மையக்கருவிலிருந்து விலகி, கஞ்சா கடத்தல், போதைப் பொருள் கடத்தல், இரு குழுக்களுக்கிடையே மோதல் என வேறு தடத்தில் பயணித்து ஒரு சராசரி படத்தைப் பார்க்க வைத்துவிட்டார்.

சென்னையின் பல்வேறு குடிசைப் பகுதிகளில் வாழ்ந்த மக்களை சென்னையிலிருந்து 30 கிமீ தள்ளி காவேரி நகர் என்ற இடத்தில் மறு குடியமர்வு செய்கிறார்கள். அங்கு லோக்கல் திருடனாக இருப்பவர் ஜிவி பிரகாஷ்குமார், அவரது நண்பனாக கஞ்சா கடத்துபவராக நந்தன்ராம், சிறு வயதிலேயே சிறைக்குச் சென்று திரும்பிய பசங்க பாண்டி மூவரும் நெருங்கிய நண்பர்கள். அந்தப் பகுதியில் கஞ்சா கடத்தும் மற்றொரு கோஷ்டிக்கும் நந்தன்ராமுக்கும் எப்போதும் பகை. ஒரு சண்டையில் நந்தன்ராமை எதிர்கோஷ்டி கொலை செய்துவிட பதிலுக்கு பசங்க பாண்டி எதிர்கோஷ்டியில் ஒருவனைக் கொன்று விடுகிறார். கைதாகி சிறைக்குச் செல்லும் பசங்க பாண்டியை மீட்டு வர ஜிவி பிரகாஷ் போராடுகிறார். அதன்பின் நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள் தான் படத்தின் கதை.

படத்தின் கதை என்று சொல்லும் போது இதைத்தான் சொல்ல முடிகிறது. இதில் எங்கே குடிசைப்பகுதி மக்களின் மறு குடியமர்வு, அவர்களுக்கான பிரச்சினை ஆகியவற்றைச் சொல்ல முடியும். படத்தில் அவர்களது பிரச்சினைகளைப் பேசும் விதமாக ஓரிரு காட்சிகளை வைத்திருக்கிறார்கள், அவ்வளவுதான்.

சென்னை அருகில் இருக்கும் கண்ணகி நகர் என்ற இடத்தைத்தான் படத்தில் காவேரி நகர் என காட்டுகிறார்கள். ஆனால், படத்தின் பல காட்சிகளில் தெருப் பெயர்களில் கண்ணகி நகர் என்றே இடம் பெற்றுள்ளது. கவனக் குறைவா அல்லது வேண்டுமென்றே வைத்தார்களா எனத் தெரியவில்லை. ஒன்றரை லட்சம் வீடுகள் இருக்கும் இடமாம் கண்ணகி நகர். அங்கு படப்பிடிப்பு நடத்த அருமையான வாய்ப்பு கிடைத்தும் அம்மக்களின் வலிகளை நேரடியாகப் பேசாமல் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போவது வருத்தம்தான் வசந்தபாலன்.

படம் முழுவதும் அரை டிரவுசர், டீ ஷர்ட், கலர் அடித்த ஹேர்ஸ்டைல், கொஞ்சம் தாடி என அந்தப் பகுதி இளைஞனாகவே தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார் ஜிவி பிரகாஷ்குமார். சென்னைத் தமிழ் அவருக்கு சரளமாக வருகிறது. நட்பு, காதல், பாசம், கோபம், வெறுப்பு என பல பாவங்களைக் காட்டக் கூடிய கதாபாத்திரம். சிறிதும் குறை வைக்காமல் சிறப்பாகவே நடித்திருக்கிறார் ஜிவி.

ஜிவியின் காதலியாக அபர்ணதி. பேசும் காட்சிகளில் சத்தமாகப் பேசி, கொஞ்சம் ஓவர் நடிப்பையே வெளிப்படுத்துகிறார். காதல் காட்சிகளில் ஜிவியுடன் மிக நெருக்கம் காட்டியிருக்கிறார்.

ஜிவியின் நண்பர்களாக நந்தன் ராம், பசங்க பாண்டி. இருவருமே அவரவர் கதாபாத்திரங்களில் கொடுத்த வேலையை செவ்வனே செய்திருக்கிறார்கள். படத்தின் ஆரம்பத்திலேயே ஜிவி, நந்தன் ராம் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள் எனக் காட்டும் போது, கண்டிப்பாக நந்தன் படத்தில் இறந்துவிடுவார் என யூகிக்க முடிகிறது. சில காட்சிகளில் 'மெட்ராஸ்' கார்த்தி, கலையரசனை ஞாபகப்படுத்துகிறது இந்த நட்பு.

ஜிவிக்கு காதலியாக அபர்ணதி என ஒரு பெண் கதாபாத்திரத்தை வைத்ததைப் போல நந்தன்ராம் அக்காவாக ஜெனிபர், பசங்க பாண்டி காதலியாக சரண்யா ரவிச்சந்திரன் என கண்டிப்பாக ஒரு பெண் சென்டிமென்ட் சேர்க்க வேண்டும் என சேர்த்திருக்கிறார்கள். ஜிவியின் அம்மாவாக ராதிகா சரத்குமார், வழக்கமான அம்மா கதாபாத்திரம், ஆனாலும் மனதில் நிற்கவில்லை.

படத்தில் வில்லனாக ரவி மரியா, காவேரி நகர் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறார். பனிஷ்மென்ட் போஸ்டிங்கில் வந்தவர். கஞ்சா கடத்த, போதைப்பொருள் கடத்த துணையாக இருக்கிறார். அவரே ஏரியாவில் இரண்டு கோஷ்டிகளையும் வளர்க்கவிட்டு, மோதிக் கொள்ளவும் வைத்து அரசியல் செய்கிறார். கிளைமாக்சில் இவர் மீண்டு வந்தது அதிர்ச்சியோ அதிர்ச்சி.

ஜிவி பிரகாஷ்தான் படத்திற்கு இசை. படத்தின் இடைவேளை வரை இரண்டு, மூன்று பாடல்கள் தேவையில்லாமல் வந்து போகின்றன. 'காத்தோடு காத்தானேன்…' பாடல் ரசிக்க வைத்தாலும் திரைக்கதையில் தவறான ஒரு இடத்தில் வருகிறது. கண்ணகி நகர் காட்சிகளை நேரிலேயே பார்க்கும் உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா.

எல்லாம் கிடைத்தும் சரியான, அழுத்தமான, உணர்வுபூர்வமான கதை, காட்சிகள் இல்லாதது இந்த ஜெயிலுக்குள் நம்மை இழுத்துச் செல்ல தள்ளாடுகிறது.

ஜெயில் - கைதியாக முடியவில்லை…

 

ஜெயில் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ஜெயில்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

ஜி.வி.பிரகாஷ் குமார்

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் தான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். 1987ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி, சென்னையில் பிறந்த ஜி.வி.பிரகாஷ், ஆரம்பத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை குரூப்பில் பணி செய்தார். ஏ.ஆர்.ரஹ்மான் தவிர்த்து ஹாரிஸ் ஜெயராஜிடமும் பணியாற்றியிருக்கிறார். பின்னர் வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். தொடர்ந்து தமிழில் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். குறுகிய காலத்தில் 50 படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளரும் இவர் தான். இசையமைப்பாளராக மட்டுமல்லாது, ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார் ஜி.வி. தனது படங்களில் ஏராளமான பாடல்களை பாடிய பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் விமர்சனம் ↓