விமர்சனம்
தயாரிப்பு - வின்டோ பாய் பிக்சர்ஸ்
இயக்கம் - ரமேஷ் பழனிவேல்
இசை - ரோனி ரபேல்
நடிப்பு - சச்சின், அபர்ணதி
வெளியான தேதி - 22 செப்டம்பர் 2023
நேரம் - 2 மணி நேரம் 2 நிமிடம்
ரேட்டிங் - 2/5
தமிழ் சினிமாவில் சரியான இடைவெளியில் பேய்க் கதைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் ஒரு சில படங்கள் மட்டுமே பயத்தை ஏற்படுத்தி ரசிக்க வைக்கின்றன. இந்தப் படம் பயமுறுத்தியதா அல்லது படுத்தியதா என்பதைப் பார்ப்போம்.
பேய்க் கதை என்றால் லாஜிக் பார்க்க வேண்டாம் என்று சொல்வார்கள். இருந்தாலும் ஒரு அடிப்படையான லாஜிக்காவது இருக்க வேண்டும். இந்தப் படத்தில் அதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு தனது வசதிக்கேற்றபடி திரைக்கதை அமைத்து படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரமேஷ் பழனிவேல்.
தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை சொல்லி படம் இயக்கும் வாய்ப்பைப் பெறுகிறார் சச்சின். அதற்கு வசதியாக ஒரு பிளாட்டிற்கு புதிதாக குடி போகிறார். அங்கு போனதுமே அவருக்கு விதவிதமான பேய்க் கனவுகள் வருகின்றன. பின்னர்தான் அந்த பிளாட்டில் பேய் இருக்கிறது என்பது அவருக்குத் தெரிய வருகிறது. அங்கிருந்து அவர் தப்பித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படம் ஆரம்பித்த கொஞ்ச நேரம் காதல் கதையாகப் போகுமா என எதிர்பார்த்தால் திடீர் என 'யு டர்ன்' அடித்து இது பேய்க் கதை என்று படத்தை நகர்த்துகிறார்கள். தொடர் கனவுகள், பயந்து போகும் கதாநாயகன் சச்சின் என அடுத்தடுத்து சலிப்பை ஏற்படுத்தும் காட்சிகள்தான் படத்தில் அதிகம் நிறைந்திருக்கிறது.
ஒரு காதல் நாயகனுக்குரிய அனைத்து அம்சங்களுடன் இருக்கிறார் சச்சின். முதலில் அவரை ஒரு சுவாரசியமான இளைஞராகக் காட்டிவிட்டு, பின் அப்படி பயந்து நடுங்குபவராகக் காட்டியிருப்பது முரணாக உள்ளது. பேய்க் கதையைப் படமாக்க இருக்கும் ஒரு இயக்குனர் பேய்களை இப்படித்தான் டீல் செய்வாரா என்ற கேள்வியும் எழுகிறது. நண்பர்களிடம் கூட தனக்கு என்ன நடக்கிறது என்பதை சொல்லாமல் இருக்கிறார். அந்த பிளாட்டில் அக்கம், பக்கம் உள்ளவர்களிடம் கூட, ஏன் வாட்ச்மேனிடம் கூட அது பற்றி விசாரிக்க மாட்டாரா கதாநாயகன். இப்படி பல கேள்விகள் எழுகிறது.
சச்சின் ஜோடியாக அபர்ணதி. ஆரம்பத்தில் சில காட்சிகள், ஒரு டூயட் ஆகியவற்றுடன் அவரது வேலை முடிந்து போகிறது. நண்பர்கள் என அத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்கள் எல்லாம் நண்பன் காணாமல் போன பிறகுதான் அக்கறையாய் விசாரிக்கிறார்கள்.
பிளாஷ்பேக்கில் ஒரு குடும்பத்தின் கதை என ஒன்றைச் சொல்கிறார்கள். அதிர்ச்சியாக இருந்தாலும் நிஜத்தில் நடந்த சம்பவம் ஒன்றை சற்றே மாற்றி சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
ஒரு பிளாட்டுக்குள் முடிந்தவரையில் மாற்றி மாற்றி படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்தகுமார். ரோனி ரபேல் பின்னணி இசை பரவாயில்லை, பேய்ப் படங்களுக்கு பயமுறுத்தும்படி வாசித்தாலே போதுமானது.
எதையோ நினைத்து என்னென்னமோ சொல்லியிருக்கிறது இந்த டீமன்.
Demon - Demo