தினமலர் விமர்சனம் » அரவான்
தினமலர் விமர்சனம்
"வெயில்", "அங்காடித்தெரு" உள்ளிட்ட வெற்றிப்படங்களின் இயக்குநர் வசந்தபாலனின் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக வெளிவந்திருக்கும் மற்றும் ஓர் திரைக்காவியம் தான் "அரவான்"! பல நூற்றாண்டுகளுக்கு முன் களவும், காவலும், கட்டுப்பாடுமாக வாழ்ந்த தமிழர்களைப்பற்றிய கதைதான் அரவான் மொத்தமும்!
கதைப்படி திருடுவதையே தொழிலாக கொண்ட மக்களை உடைய கொம்பூதி - பசுபதியின் ஊர் பெயரைச் சொல்லி புதிதாக ஒரு கள்வன் அங்கே இங்கே என நிறைய இடங்களில் தன் கைவரிசையை காண்பிக்கிறான். இதனால் இன்னல்களுக்கு உள்ளாகும் பசுபதியும், அவரது ஊர்மக்களும், அவன் யார்? எவர்...? என்று ஒரு பக்கம் தேடிக் கொண்டே மற்றொருபக்கம் குலத்தொழிலான களவையும் செய்து வருகின்றனர். அப்படி ஒரு களவில் கொம்பூதி-பசுபதியிடம் கையும் களவுமாக மாட்டுகிறான் அந்த பலே திருடன். அவன் தான் வரிப்புலி எனும் ஹீரோ ஆதி! ஆதியின் கைவரிசையையும், களவாடும் திறனையும் பார்த்து மிரளும் பசுபதி, தான் ஒரு அநாதை எனும் ஆதியை தனது ஊருக்கு அழைத்து வந்து, தனது களவாடும் குரூப்பில் ஒருவர் ஆக்குகிறார். இந்நிலையில் கைதேர்ந்த களவுக்காரனும் கொள்ளையடிக்க முடியாத துணியாத காவலும், கட்டுப்பாடுகளும் நிறைந்த ஓர் ஊருக்கு ஒரு சவாலாக ஆதியும்-பசுபதியும் தங்களது களவு கூட்டத்துடன் களவாட போகின்றனர். அங்கு திருடி திரும்பும் வழியில் காவல்காரர்களின் கண்ணில் மாட்டிவிடும் இவர்கள் தப்பித்தோம், பிழைத்தோம் என ஓடி வரும்போது தவறி விழும் பசுபதி மட்டும் அவர்கள் கையில் சிக்கி கொள்கிறார்.
அப்புறம்? அப்புறமென்ன...? பசுபதியை அத்தனை பேர் கண்ணிலும் மண்ணை தூவி விட்டு குற்றுயிரும், கொலை உயிருமாக துணிச்சலாக போய், மறுநாள் காலை மீட்டு வருகிறார் ஆதி! அப்படி ஆதி, பசுபதியை தூக்கி வரும் போது அவரை துரத்தி வரும் காவல்காரர் கரிகாலன், ஆதியை பார்த்து டேய் சின்னான் உன்னை விடமாட்டேன்டா என கூவுவது அரைமயக்கத்தில் இருக்கும் பசுபதியின் காதுகளில் விழுகிறது. அதன்பிறகு படுத்த படுக்கையாகிவிடும் பசுபதி மீண்டும் எழுந்ததும், அவரது தங்கை சிமிட்டி, ஆதியை காதலிப்பதாக தெரியவருகிறது. அதனால் அரைமனதுடன் ஆதியின் பூர்வீகம் என்ன...? திருடபோய் திரும்பிவந்தபோது துரத்தி வந்த காவல்காரன் கரிகாலன், வரிப்புலி ஆதியை சின்னான் என அழைக்க காரணம் என்ன? தன் தங்கையின் காதலுக்கு பதில் என்ன...? என ஆதியிடம் கேட்கிறார். அதற்கு ஆதி, எனக்கு திருமணமாகிவிட்டது, அதற்குமேல் வேறு எதையும் கேட்காதீர்கள்... என்கிறார். அப்புறம் ஆதி அரவானாக, பலிஆளாகி தப்பி பிழைத்து ஊருக்கு தெரியாமல் வாழ்வதும், உண்மை குற்றவாளியை ஊர் முன் நிறுத்த முடியாமல், போவதும், இறுதிவரை உயிரோடு வாழ்ந்தாரா, இல்லையா என்பதும் தான் அரவான் படத்தின் வித்தியாசமும் விறுவிறுப்புமான மீதிக்கதை!
புகை கூண்டின் வழியாக ஏறி இறங்கி பொத்தினார் போல் மணியக்காரர் வீட்டிற்குள் கொள்ளையடிக்க போகும் காட்சிகளில் தொடங்கி, ஒவ்வொரு சீனிலும் தனது அஜானுபாகுவான உடம்பை வைத்து கொண்டு அசால்ட்டாக நடித்திருக்கும் ஆதிக்கு வைக்கலாம் ஒரு ராயல் சல்யூட்! களவிற்குபோன இடத்தில் காவல்காரர்களிடம் மாட்டிக்கொள்ளும் பசுபதியை காபந்து செய்ய போகும் காட்சியில், மாட்டு மந்தையில் மாடுகளுடன் மாடுகளாக போய், பசுபதியை மீட்டு, மாட்டின் மேலேயே அவரை படுக்க வைத்தபடி தானும் அமர்ந்து கொண்டு தைரியமாக துரத்தும் குதிரை வீரர்களை தாக்கியபடி திரும்பும் ஒரு காட்சி போதும் ஆதி, அரவானுக்காக எத்தனை உழைத்திருக்கிறார், எத்தனை ரிஸ்க் எடுத்திருக்கிறார் என்பதற்கு கட்டியம் கூற! வாவ், ஹேட்ஸ் ஆஃப் ஆதி!
பசுபதி களவாணி-கொம்பூதியாகவே வெற்றிலை காவிபடிந்த பற்களும், மீனாட்சி கொண்டையுமாக வாழ்ந்திருக்கிறார். இவருக்கும் ஆதிக்கு இணையான பாத்திரம். அதை ஆதியை விட அழகாகவே செய்திருக்கிறார் மனிதர். ஜல்லிக்கட்டில் தன் ஊர் மானத்தை காக்க ஒற்றை ஆளாக காளையுடன் முட்டி மோதும் காட்சி ஒன்றும் போதும் பசுபதியின் நடிப்பு திறமையை பறைசாற்ற! இனி, இவர் பசுபதி இல்லை... பலேபதி!!
வனப்பேச்சியாக சின்னான்-ஆதியின் காதல் மனைவியாக ப்ளாஷ்பேக்கில் வரும் தன்ஷிகாவிற்கு விருதுகள் நிச்சயம்! சிமிட்டி-அர்ச்சனா கவி, ஆதியின் அம்மா ஒச்சாயி டி.கே.கலா, மாத்தூரன்-கரிகாலன், மொசக் காதன், சிங்கம்புலி, வீரணனாக ஆதியின் நண்பராக வரும் திருமுருகன், பாளையக்காரராக வரும் விஜய் சந்தர் உள்ளிட்டவர்களும், சிறப்பு தோற்றத்தில் வந்துபோகும் பரத், அஞ்சலி, ஸ்வேதாமேனன், ஸ்ருதிபிரகாஷ் உள்ளிட்டவர்களும் கூட பாத்திரமறிந்து பளிச் என்று நடித்திருப்பதால் படம் முடிந்து வெகுநேரமாகியும் மனதை விட்டு அகல மறுக்கின்றனர். ஆனாலும் அரவான் படத்தின் அத்தனை முகங்களையும் கரிசல் மண்ணில் போட்டு புரட்டியெடுத்த மாதிரி காட்டியிருப்பது சுத்த போர்.
பிரபலபாடகர் கார்த்திக் இசையமைப்பாளராக முதல் படத்திலேயே முத்திரை பதித்துவிட்டார். பேஷ், பேஷ், சபாஷ்! கார்த்திக்கின் இசை மாதிரியே, சித்தார்த்தின் ஒளிப்பதிவும், விஜய் முருகனின் கலை இயக்கமும் படத்தின் பெரும்பலம்!
சு.வெங்கடேசனின், "களவு இருந்தால் தான் காவலுக்கு வேலை..." உள்ளிட்ட நறுக் - சுறுக் வசனங்களும், வசந்தபாலனின் திரைக்கதை-இயக்கமும் அரவானை தமிழ்சினிமாவுக்கு புதியவனாக காண்பித்திருக்கிறது சில பல ஆங்கிலப் படங்களின் சாயலுடன் (உதாரணம் - மெல் கிப்ஸனின், அபோகலிப்டா) பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருடர்களின் வாழ்க்கையை திகட்ட திகட்ட தந்திருப்பதின் அவசியத்தையும் வசந்தபாலன் காட்டியிருந்தால், அரவான் மேலும் மெச்சும்படி இருந்திருக்கும். ஆனாலும், மரண தண்டனைக்கு எதிராக ஓங்கி குரல் கொடுத்திருக்கும் வசந்தபாலனின் அரவான், வித்தியாசமான தமிழ் சினிமாவில் ஒருவன்.
----------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
களவு, காவல் மற்றும் பலிகொடுத்தலை தொழிலாகக் கொண்டு வாழ்ந்த ஒரு தமிழ் சமூகத்தின் கதைதான் “அரவான்’. 18ம் நூற்றாண்டில் நடக்கும் கதை.
வேம்பேரி மக்களின் கொள்ளைக் கூட்டத் தலைவனாக பசுபதி. களவாண்ட நகைகளை விற்று தனது ஊர் மக்களுக்காக கேப்பை வாங்கித் தருகிறார். வளைந்த நெடுங்குச்சியோடு காட்டுக்குள் பரபரவென வெற்றுடம்புடன் ஓடுவதும் களவாடும்போது எதிராளிகளிடம் மாட்டிக்கொண்டு சண்டை போடுவதுமாக கச்சிதமாகப் பொருந்துகிறார் பசுபதி.
ராணியின் நகையைத் திருடியவனை பிடித்துக் கொடுக்க பசுபதிக்கு அரசகட்டளை வருகிறது. ராணி நகையைத் திருடியவன் ஆதி. இருவரும் எதிரும் புதிருமாக மல்லு கட்டப்போகிறார்கள் என்று பார்த்தால் கூட்டாளியாகிறார்கள்.
சின்னவீரம்பட்டி காவல்காரனாக இருந்தவன்தான் ஆதி. அங்கே கோடையூர் ஆளான பரத் ஆட்டு மந்தையில் கழுத்து அறுபட்டு செத்துக்கிடக்க, கொண்டவன் யார் என்பது தெரியாததால் செத்துப்போனவனுக்கு பதிலாக ஊர்க்கார இளைஞன் ஒருவனை பலி கொடுக்க ராஜா தீர்ப்பு சொல்கிறார். பலிகடாதான் ஆதி. ஆதியின் நெடுநெடுவென்ற உயரமும் திடமான உடம்பும் ப்ளஸ் காவல்காரன் கேரக்டருக்கு கச்சிதமான பொருத்தும். ஆதி பலியாவானா? குற்றவாளியைக் கண்டு பிடித்தார்களா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
ஆதிக்கு மனைவியாக வரும் தன்ஷிகா இயல்பாக ரவிக்கை அணியாமல் நடித்திருக்கிறார். கதை, வசனம், “காவல் கோட்டம்’ சு.வெங்கடேசன். களவு, வேட்டையாடும் குணம், கொம்பு ஊதுவது, நடுகல் வழிபாடு, கோடங்கி, கேப்பை உணவு என 18-ம் நூற்றாண்டு தமிழர்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்திருப்பதற்காக இயக்குநர் வசந்தபாலனை பாராட்டலாம். பின்னணி இசையும் பாடல்களும் மகா அமர்க்களம். ஒளிப்பதிவில் சித்தார்த் மிளிர்கிறார். படத்தின் பலவீனம். வசன உச்சரிப்பு. என்ன பேசுகிறார்கள் என்றே பல இடங்களில் புரியவில்லை. படம் ஆமைவேகத்தில் நகர்கிறது.
அரவான் - சரித்திர மோதல்
குமுதம் ரேட்டிங் - ஓகே
------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
களவுக்குப் போகும் ஒரு சமூகத்தை காவல்காரர்களாக்குகிற பதினெட்டாம் நூற்றாண்டு வாழ்க்கைதான் அரவான். களவை விட்டுவிட்டுக் காவலுக்குப் போவதன் பின்னணியில் ஒருவர் உயிர்ப்பலி கொள்ளப்பட்டதன் ரத்தமும், கண்ணீரும், வேதனையும், நெகிழ்ச்சியும், வெக்கையும், காதலும்.... நிறைகட்டி நிற்கின்றன கதையில். மகாபாரதக் காலத்து அரவான் என்கிற புராணத் தொன்மத்தில் பதினெட்டாம் நூற்றாண்டின் பாளையக் காலத்து சின்னாவைப் பொருத்திப் பார்த்து ஆரவாரமில்லாத வெற்றியை ருசித்திருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். சாகித்ய அகாடமி விருது வென்ற சு. வெங்கடேசனின் காவல்கோட்டம் நாவலிலிருந்து உருவப்பட்ட கதை என்பதால் ஏற்பட்ட எதிர்பார்ப்புக்குக் கர்வபங்கம் இல்லை. ஆனாலும், வசந்தபாலனின் முந்தைய படைப்பான் அங்காடித்தெரு, வெயில்.... படங்களோடு அரவானை ஒப்பிட்டும் பார்க்கும் ரசிகன் உள்ளுக்குள் உடைந்துதான் போவான்.
கதையின் நாயகன் ஆதி, ஆளை அசத்தும் ஆஜானுபாகு; புகுபல பராக்கிரமத்திலும் ஜல்லிக்கட்டுக் காளைக்கு நிகரானத் துள்ளல், சின்னாவாக காவல் காப்பதைவிட வரிப் புலியாகக் களவுக்குப் போகும்போது அதிவசீகரம். “மிருகம்’ படத்துக்குப் பிறகு நடிக்கக் கிடைத்த வாய்ப்பை பக்கென்று பற்றிக்கொண்டது புத்திசாலித்தனம். அதிலும் காளை மாடுகள் சகிதம் வந்து பசுபதியைக் காப்பாற்றும் சீனில் திரை முழுக்க விரிகிறது ஆதி தாண்டவம்.
கொம்பூதி பசுபதிக்கு ஆந்தை போல பகலில் உறங்கி இரவில் விழிக்கும் களவு வாழ்க்கை. கையில் வைத்திருக்கும் மூங்கில் கம்பைப் போல நடிப்பிலும் துடிப்பிலும் பதினெட்டாம் நூற்றாண்டு கரடுமுரடு. களவுக்கு முன்பும் பின்பும் என அவர் நடத்தும் பாடங்கள் படத்தின் சுவாரஸ்யப் பக்கங்கள். தாம் கதையைக் கொண்டு செலுத்தும் முக்கியமான பாத்திரம் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்.
குறிசொல்லும் குறத்தி அர்ச்சனா கவிக்கு அச்சச்சோ தக்குணூண்டு வேடம். குறி சொல்வதும், காதில் பூச்சுற்றுவதெல்லாம் ஓகே. அதுக்காக ஆதியிடம் காதல்வயப்படுவதில் ஒரு காட்சி நியாயம் வேண்டாமா? முப்பது நாளில் சாகப்போகும் ஒருவனை மணக்கும் தன்ஷிகா கேரக்டரில் மட்டுமில்லை. நடிப்பிலும் அந்தோ பரிதாபம். குரலும் முகபாவமும் கட்டி இழுத்து வந்தாலும் வெட்டிக்கொண்டு போகின்றன எதிரெதிர்த்திசையில். வழக்கமான கோடம்பாக்கத்து நாயகிகள்போல நாயகனைக் கட்டிப்பிடிப்பதும் நெட்டி முறிப்பதும் தன்ஷிகா மூலம் இந்தப் படத்திலும் தொடர்கிறது.
கலகலப்புக்கு சிங்கம்புலியும், கதையின் வேகத்துக்கு பரத்தும், அஞ்சலியும் அணிலாக இருந்து உதவியிருக்கிறார்கள். நிலா... நிலா, உன்னைக் கொல்லப்போகிறேன்.... பாடல்களில் காதுகளைத் தொட்ட கார்த்திக்கின் இசை, மலையளவு கனக்கும் கதையைத் தூக்கி சுமக்க முடியாமல் பின்னணியில் நொண்டுகிறது கல்லடிபட்ட குதிரை போல. கதைக்கு நியாயமாக உழைத்திருக்கும் கலை இயக்குனர் விஜய் முருகனின் கரங்களுக்கு பாராட்டுக் குலுக்கல்கள் பலப்பல. பதுங்கும் சிங்கத்தின் பவ்யம்; எதிர்த்தடிக்கும் சிறுத்தையின் வேகம்; நிலவின் குளுமை; நிலத்தின் தன்மை... என பதினெட்டமா நூற்றாண்டைக் காட்டுகிறது சித்தார்த்தின் காமிரா.
இப்போது இயக்குனர் வசந்தபாலனிடம் வருவோம்: களவுக்குப் போய்விட்டு வரும் பசுபதி குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சும்போது செல்லங்களா என்கிறாரே, செல்லம் என்பது பதினெட்டாம் நூற்றாண்டு வார்த்தையா? கொலை செய்த பாளையக்காரர் அறையில், ஆதியும் அவரும் மோதிக்கொள்ளும்போது பாளையக்காரர் சிம்னிவிளைக்கைத் தூண்டி விடுகிறாரே, மண்ணெண்ணெய் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டடைந்த திரவம் அல்லவா? ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்று சொன்னவனாயிற்றே தமிழன். ஏன் பசுபதி உள்ளிட்ட அத்தனை பேரும் பல் கறையோடு சிரிக்கிறார்கள்? ஆதிக்குப் பதிலாக ஏற்கெனவே ஒருவர் பலி கொள்ளப்பட்ட பிறகும் ஆதி பலி வாங்கப்படுவது படத்தின் டைட்டிலுக்காக இழுத்துவைத்த அடிக்கப்பட்ட ஆணி என்பதை ஒருவர் கூடவா சொல்லவில்லை? கொல்வதென்றால் சட்டென்று வெட்டிக் கொன்றுவிடாமல் இயேசுநாதர் ஸ்டைலில் சிலுவைச் சுமக்க வைத்து ஆதியைக் கொல்வது கதையோடு ஒட்டவில்லையே, கவனித்தீர்களா...? இப்படிக் கேள்விகள் முட்டி எழுந்தாலும் ரத்தமும், சதையுமாய், காலத்தால் நமக்கு முன்னால் வாழ்ந்த வாழ்வை திரையில் தந்ததற்காக உங்களுக்கும், அர்த்தம் புரிந்து தயாரித்த அம்மா கிரியேஷன்ஸ் சிவாவுக்கு அடர்த்தியான பாராட்டுகள்.
அரவான் - விதையாய் விழுந்தவன்