2.75

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சேரன், சரயு மோகன், சிருஷ்டி டாங்கே, நந்தனா வர்மா
தயாரிப்பு - பல்லட்டே கொக்கட் பிலிம் அவுஸ்
இயக்கம் - சாய் ராஜ்குமார்
இசை - வினோத் எஜமான்யா
வெளியான தேதி - 24 ஜனவரி 2020
நேரம் - 2 மணி நேரம் 9 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

சினிமா என்பது கற்பனை என்றாலும், நாட்டில் நடக்கும் பல நிஜ நிகழ்வுகள் அடிக்கடி சினிமாக்களாக எடுக்கப்படுவது உண்டு. அப்படிப்பட்ட ஒரு படம்தான் இந்தப் படம். படத்தின் ஆரம்பத்திலிருந்து எப்படி ரசிக்கிறோமோ இல்லையோ கிளைமாக்ஸ் காட்சியை நிச்சயம் ரசிப்போம். காமக் கொடூரர்களுக்கு நமது நாட்டில் இப்படியான தண்டனை தான் அளிக்கப்பட வேண்டும் என்ற ஒரு மன நிறைவுடன் படத்தை ரசித்து முடிப்போம்.

மழை படத்தை இயக்கிய ராஜ்குமார், தன் பெயரை சாய் ராஜ்குமார் என மாற்றிக் கொண்டு இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் காட்சிகள் மிக மிக மெதுவாக நகர்ந்து தடுமாறினாலும், போகப் போக அதை சரி செய்து விடுகிறார். கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க பரபரப்பைக் கூட்டியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிக்காக மட்டுமாவது அவரைப் பாராட்டுபவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள்.

கிரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் ஆக இருப்பவர் சேரன். அவருக்குத் திடீரென தூங்கிவிடும் வியாதி இருப்பதால் மனைவி அவரை விட்டு பல ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விடுகிறார். அவர்களின் ஒரே மகள் வெளிநாட்டிற்குச் சென்று படிக்க இருப்பதால் தன்னுடன் மகள் பத்து நாட்களாவது தங்க வேண்டும் என நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி தங்க வைக்கிறார். மறுநாள் வெளிநாட்டிற்கு சேரன் மகள் செல்ல வேண்டிய சூழ்நிலையில் இரவில் கடத்தப்படுகிறார். அவரைக் கடத்தியவர்கள் யார் என்பது சேரனுக்குத் தெரியும். ஆனால், மகளை எங்கு கடத்தி வைத்திருக்கிறார்கள் என்பதும் தெரியாது. மேலும், சேரனையும் வீட்டிற்குள்ளேயே மடக்கி வைக்கும் சூழலையும் உருவாக்குகிறார்கள் கடத்தல்காரர்கள். இந்நிலையில் சேரன் தன் மகளை மீட்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சேரப்பா என்று அழைக்கப்படும் சேரனுக்கு மிகவும் பாசமான அப்பா கதாபாத்திரம் கொண்ட ஒரு படம் வெளிவந்திருப்பது பொருத்தமானது. இதற்கு முந்தைய படங்களில் கூட கொஞ்சம் ஓவராக நடிக்கிறாரே சேரன் என்ற பேச்சு இருந்தது. ஆனால், இந்தப் படத்தில் மீட்டருக்கு மேல் ஒரு மில்லி மீட்டர் கூட அதிகமாக நடிக்காமல் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்திருக்கிறார்.

இப்படி ஒரு பாசமான அப்பா கதாபாத்திரத்தை குடிகாரன், சிகரெட் பிடிப்பவர், அதிலும் பணியில் இருக்கும் போது கூட குடிப்பார் என்றெல்லாம் காட்டியிருப்பது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். மனைவி, மகளைப் பிரிந்தவர்கள் எல்லாம் குடித்துக் கொண்டா இருக்கிறார்கள்.

திடீரென தூங்கும் வியாதி அவருக்கு இருக்கிறது என்பது விவாகரத்திற்குத்தானே காரணமாக இருக்கிறது படத்தில் எதற்காகப் பயன்படப் போகிறது என்று யோசித்தால், கடத்தல்காரர்களை ஏமாற்ற சரியான சமயத்தில் அதை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

சேரனின் மனைவியாக மலையாள நடிகை சரயு மோகன். சேரன் ஜோடி என்றாலே மலையாள நடிகைகளைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என ஏதாவது சென்டிமென்ட் இருக்கிறதா என்று தெரியவில்லை. இருந்தாலும் சரயு அவரது கதாபாத்திரத்தில் சரியாக நடித்திருக்கிறார். கண்களிலேயே அந்த வெறுப்பை, கோபத்தை வெளிப்படுத்துகிறார்.

சில காட்சிகளில் மட்டுமே சிருஷ்டி டாங்கே. சேரனின் மகளாக நந்தனா வர்மா. அப்பாவைப் புரிந்து கொண்ட மகளாக நெகிழ வைக்கிறார். இவருக்கும், சேரனுக்கும் இடையிலான கடத்தப்படுவதற்கு முன், பின் ஆகிய காட்சிகள் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஞாபகப்படுத்துகின்றன.

அந்நிகழ்ச்சியில் சேரனும், லாஸ்லியாவும் அப்பா, மகளாக பாசத்துடன் பழக, லாஸ்லியாவைக் காதலிப்பதாக கவின் சொல்ல, அவை இப்படத்திலும் ஓரளவிற்கு பொருந்திப் போகின்றன. அதாவது, சேரன், லாஸ்லியா பாசத்திற்கு கவின் செக் வைத்தது போல இந்தப் படத்தில் சேரன், நந்தனா பாசத்திற்கு வில்லன் இர்பான் செக் வைக்கிறார். அவ்வளவுதான் நாம் சொல்ல வருவது. இருவருமே சரவணன் மீனாட்சி தொடரின் சரவணன்கள் என்பதும் மற்றொரு பொருத்தம்.

இளம் வில்லன் நடிகர்கள் தமிழ் சினிமாவில் பஞ்சமாக இருக்கிறார்கள். இர்பான் இந்த ரூட்டைப் பிடித்தால் கூட முன்னேற வாய்ப்பு இருக்கிறது. கள்ளச் சிரிப்பு சிரிப்பதில் கவினையே தோற்கடிப்பார் போலிருக்கிறது.

ஒரு அலுவலகம் இரண்டு வீடு என மிகவும் சிம்பிளான கதைக் களங்கள்தான் படத்தில். இருப்பினும் ஆரம்பத்தைத் தவிர, முடிந்தவரையில் அலுப்புத் தட்டாமல் காட்சிகளை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். ஓர் இரவில் நடக்கும் பரபரப்பு சம்பவங்களை ஒளிப்பதிவாளரும், படத் தொகுப்பாளரும் தங்கள் பங்கிற்கு விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார்கள்.

வினோத் எஜமான்யா இசையில் அப்பா, மகள் பாடல் இன்னும் அழுத்தமாய் மனதில் இடம் பிடித்திருக்கலாம். பின்னணி இசையில் ஓரளவிற்கு சமாளிக்கிறார்.

மகள்களைப் பெற்ற அப்பாக்கள் தங்கள் மகள்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றும் களவாணிகளிடமிருந்து எப்படியாவது காக்க வேண்டும் என்ற பாடத்தைச் சொல்கிறது இந்த ராஜாவுக்கு செக்.

‛ராஜாவுக்கு செக் - மகளின் மாஸ்டர்

 

ராஜாவுக்கு செக் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ராஜாவுக்கு செக்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓