1.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - பிரசன்னா, கலையரசன், தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே மற்றும் பலர்
இயக்கம் - நாகராஜன்

இசை - ஜஸ்டின் பிரபாகரன்

தயாரிப்பு - மதுரை ஸ்ரீ கள்ளழகர் என்டர்டெயின்மென்ட்


ஒரு திரைப்படம் என்றால் அதில் ஒரு அழுத்தமான கதை இருக்க வேண்டும், சில முடிச்சுகள், சில திருப்பங்கள் என திரைக்கதையில் சில எதிர்பாராத விஷயங்கள் நடக்க வேண்டும், இப்படி ஏதாவது இருந்தால்தான் அந்தப் படம் நம்மை கொஞ்சமாவது ரசிக்க வைக்கும். ஆனால், இப்படி எதுவுமே இல்லாத ஒரு படம்தான் காலக் கூத்து. அறிமுக இயக்குனர் நாகராஜன் இந்தப் படத்தின் கதையில் அப்படி என்ன இருக்கிறது என இதைப் படமாக்கினார் என்று தெரியவில்லை.பிரசன்னா, கலையரசன் இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள். கலையரசன் கல்லூரியில் படிக்கும் தன்ஷிகாவைக் காதலிக்கிறார். பிரசன்னா, சிருஷ்டி டாங்கேவைக் காதலிக்கிறார். ஒரு முறை மேயர் தேர்தலில் நிற்கும் பெண் வேட்பாளர் ஒருவரின் மகனை பிரசன்னா கடுமையாக அடித்து விடுகிறார். அவர்கள் பிரசன்னாவை பழி வாங்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனிடையே, சிருஷ்டி டாங்கே பிரசன்னாவை கழற்றிவிட்டு, வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். தன்ஷிகாவிற்கும் அவருடைய தாய்மாமாவுக்கும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். இதனால், தன்ஷிகா, கலையரசன் கோவிலில் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த அதிர்ச்சி தாளாத தன்ஷிகா அம்மா மரணம் அடைகிறார். பிரசன்னாவிடம் அடி வாங்கிய பையனின் அம்மா மேயர் ஆகிவிடுகிறார். அவர்கள் பிரசன்னாவைக் கொல்ல திட்டம் தீட்டுகிறார்கள். இதன் பின் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.படத்தில் எந்த இடத்திலும் ஒரு அழுத்தமான காட்சிகளோ, பாராட்டும்படியான காட்சிகளோ இடம் பெறவேயில்லை. நண்பர்கள் பிரசன்னா, கலையரசன் சம்பந்தப்பட்ட காட்சிகளில் கூட ஒன்று குடிக்கிறார்கள், இல்லை புகைக்கிறார்கள். காதல் காட்சிகளிலும் எந்த சுவாரசியமும் இல்லை. அடுத்து இப்படித்தான் நடக்கப் போகிறது என நாமும் யூகிக்கும்படியான காட்சிகள் இருப்பது படத்தின் மைனஸ்.கலையரசன், பிரசன்னா இருவரும் தாடி வைத்துக் கொண்டால் முரட்டுத்தனமான ஹீரோவாகத் தெரிவார்கள் என்று இயக்குனர் நம்பியிருக்கிறார். ஆனால், அப்படி ஒன்றும் தெரியவில்லை. இருவரும் பிட் ஆகத் தெரிவதைவிட குண்டாகத்தான் தெரிகிறார்கள்.தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே இருவரும் ஹீரோயின்கள். சிருஷ்டிக்கு கொஞ்ச நேரமே வேலை. தன்ஷிகாவிற்கு கிளைமாக்சில் மட்டும் நடிக்கக் கொஞ்சம் வாய்ப்பு தந்திருக்கிறார்கள்.


சாதாரண இளைஞர்களின் கதை என்று எடுத்துக் கொண்டால் சுப்பிரமணியபுரம் படம் போன்று வெற்றி பெற்றுவிடலாம் என இயக்குனர் நினைத்திருப்பார் போலிருக்கிறது. அதற்காக கிளைமாக்சில் இப்படி எல்லாரையுமேவா பழி வாங்குவார்.ஜஸ்டின் பிரபாகரன் இசையில் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமில்லை. பி.வி. சங்கரின் ஒளிப்பதிவு சினிமாத்தனமில்லாமல், கதையை மீறாமல் காட்சிகளை ஒரு யதார்த்தத்துடன் பதிவு செய்திருக்கிறது.ஒரு படத்தை உருவாக்குவதற்கு முன் ஒரு நல்ல கதையைத் தேடிப் பிடித்து, அந்தக் கதை எப்படி ரசிகர்களைச் சென்றடையும் என பலரிடம் கருத்து கேட்டு, பின்னர் அதைப் படமாக உருவாக்கினால், காலமும், பணமும் மிச்சமாகும்.


காலக்கூத்து - கால் கூத்து

 

பட குழுவினர்

காலக்கூத்து

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓