வாழை
விமர்சனம்
தயாரிப்பு - டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நவ்வி ஸ்டுடியோஸ், பார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன்
இயக்கம் - மாரி செல்வராஜ்
இசை - சந்தோஷ் நாராயணன்
நடிப்பு - பொன்வேல், ராகுல், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன்
வெளியான தேதி - 23 ஆகஸ்ட் 2024
நேரம் - 2 மணி நேரம் 16 நிமிடம்
ரேட்டிங் - 3.75/5
ஒரு இயக்குனர் அவரது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை ஒரு 'பயோபிக்' படமாக எடுத்திருப்பது ஆச்சரியம்தான். தன்னுடைய வாழ்க்கையில் 13 வயதில் ஆறு மாத காலத்தில் நடந்த சில சம்பவங்களின் தொகுப்பாக இந்தப் படத்தின் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
1999ம் ஆண்டு 8ம் வகுப்பு படிக்கும் போது பள்ளி திறந்த ஜுன் மாதம் முதல் அரையாண்டு விடுமுறை நாட்களான டிசம்பர் மாதம் வரையில் நடக்கும் ஒரு கதை. அதில் நட்பு, பாசம், காதல், விவசாயம், உழைப்பு, முதலாளித்துவம் என பல விஷயங்களை உள்ளடக்கி ஒரு தோப்பாய் இந்த 'வாழை'யைத் தந்திருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஊரில் நடக்கும் கதை. பொன்வேல், ராகுல் இருவரும் 8ம் வகுப்பு படிக்கும் நண்பர்கள். வாழைத் தோப்புகளிலிருந்து வாழைத்தார்களை சுமந்து வந்து லாரியில் ஏற்றும் கூலித் தொழில் செய்வதுதான் அந்த ஊர் மக்களின் முக்கிய வாழ்வாதாரம். அம்மா, அக்கா இருவர் அந்த வேலை செய்தும் கடனை அடைக்க முடியாத நிலையில் அம்மாவின் வற்புறுத்தலில் பள்ளி விடுமுறை நாளில் அந்த வேலைக்குச் செல்கிறான் பொன்வேல். அவனது பள்ளிக்குப் புதிதாக வந்த டீச்சரான நிக்கிலா விமல் மீது இனம் புரியாத பாசம் கொள்கிறான் பொன்வேல். இப்படி நண்பன், குடும்பம், டீச்சர் என தனக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ நினைக்கும் பொன்வேலுக்கு வாழைத்தார் சுமக்கப் போவதன் மேல் அவ்வளவு வெறுப்பு. அப்படிப்பட்டவனது வாழ்க்கையில் நடக்கும் ஒரு முக்கிய சம்பவம் அவனைப் புரட்டிப் போடுகிறது. அது என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.
பத்துப், பதினைந்து வயதுகளில் இருக்கும் போது ஒரு பையனுக்கு அவனது இஷ்டத்திற்கு சுற்றுவது, நடப்பது என்பது மிகவும் பிடிக்கும். குடும்பத்தினர் அல்லது பெற்றோரது கட்டுப்பாடு, மற்றவர்கள் திணிக்கும் கருத்து எதுவும் பிடிக்காது. தனக்கு எது பிடிக்கிறதோ அதை மட்டுமே செய்யும் குணம் இருக்கும். அப்படியான ஒரு குணம் கொண்டவராக கதையின் நாயகனாக பொன்வேல் அந்த சிவனணைஞ்சான் கதாபாத்திரத்தில் சிறப்பாய் என்பதை விடவும் அவ்வளவு இயல்பாய் நடித்திருக்கிறார். 'பசங்க' படத்தில் பார்த்ததற்குப் பின் சிறுவர்களை சிறுவர்களாகவே காட்டப்பட்டுள்ள ஒரு படத்தைப் பார்க்க இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது. சக நண்பன் ராகுல் மீது ரஜினி, கமல் சண்டையுடன் கூடிய தோளோடு தோளான நட்பு, அம்மா, அக்கா மீதான பாசம் போல டீச்சர் நிக்கிலா மீதான அந்த பாசம், கால் கடுக்க நடந்து சென்று, தலை வலிக்க வாழைத் தார் சுமந்து வந்ததன் வலி என இந்த வருடத்திற்குரிய சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுகளை இப்போதே சந்தோஷமாய் சுமந்து கொள்ளலாம்.
தீவிர ரஜினி ரசிகன் பொன்வேல் என்றால் தீவிர கமல் ரசிகன் நண்பன் ராகுல். நண்பன் பொன்வேலுக்கு காலில் முள் குத்திவிட, “முள் குத்தாமலேயே நாங்க குத்தியது போல நடிப்போம், ஏன்னா நாங்க கமல் ரசிகன்“ என ராகுல் பேசும் அந்த ஒரு காட்சியிலேயே அவனுக்குக் கிடைக்கும் கைத்தட்டல் அவனது நடிப்புக்குக் கிடைக்கும் பரிசு. 80, 90களில் ரஜினி, கமல் ரசிகர்களுக்கு இடையிலான சண்டை எவ்வளவு சுவாரசியமான நட்புச் சண்டையாக இருந்தது என்பதற்கு இன்றைய சமூக வலைத்தளங்களில் சாக்கடையாகச் சண்டை போட்டுக் கொள்ளும் சில விஜய், அஜித் ரசிகர்கள் தெரிந்து கொள்வது நல்லது.
பொன்வேல் அக்காவாக திவ்யா துரைசாமி. அந்த வயதில் ஒரு பெண்ணுக்குள் வரும் காதலை அவ்வளவு அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறார். குடும்ப சூழலில் ஒரு பக்கம் உழைத்தாலும், அம்மாவின் பேச்சுக்குக் கட்டுப்படுவதும், கஷ்டப்படும் தம்பி மீது பாசம் காட்டுவதும் என பாசக்காரப் பெண்ணாய் நடித்திருக்கிறார். திவ்யா, கலையரசன் காதல் கொஞ்ச நேரமே வந்தாலும் பேசிக் கொள்ளாத அந்த காதலும் இனிமையாய் கடந்து போகிறது. செய்யும் வேலைக்குத் தகுந்த கூலி வேண்டும் என்ற போராட்டக்காரனாய் கலையரசன். அதனால், வேலையில் பதவியிறக்கம் வந்தாலும் காதலை இறக்கி வைக்க அதுவும் உதவும் என ஏற்றுக் கொண்டு போகிறார்.
'பூங்கொடி' டீச்சர் ஆக நிக்கிலா விமல். தினமும் பூக்கும் பூ போல ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவு பொலிவுடன் இருக்கிறார். பூங்கொடி டீச்சர் போல யாரோ ஒரு டீச்சர் நம் வாழ்க்கையில் வந்து போய் இருப்பார்கள். படம் பார்த்த பின் அவரவர் டீச்சரை ஞாபகப்படுத்திக் கொள்வார்கள். வாழையில் படர்ந்த கொடியாக இருக்கிறார் நிகிலா. மலையாள நடிகைகள் தமிழ் சினிமா கதாபாத்திரங்களில் ஒன்றி நடிப்பது இப்படத்திலும் தொடர்கிறது. பாராட்டுக்கள் பூங்கொடி டீச்சர்.
பொன்வேல் அம்மாவாக நடித்திருக்கும் ஜானகி, புரோக்கர் ஆக நடித்திருக்கும் பத்மன், வியாபாரியாக நடித்திருக்கும் ஜே சதீஷ்குமார் ஆகியோரும் அவர்களது கதாபாத்திரங்களில் கவனம் பெறும்படி நடித்திருக்கிறார்கள்.
வாழைத் தோப்பும், அதைச் சுற்றிய ஊர், பள்ளிக் கூடம், சாலைகள், வீடுகள் என கதைக்களத்தை தேவைப்படும் போது அழகாகவும், உணர்வுகளைக் கடத்தும் போது அதற்கான கோணங்களுடனும் படமாக்கியிருக்கிறது தேனி ஈஸ்வரின் கேமரா. சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் கதையுடனேயே இணைந்து வருகிறது. பின்னணி இசையிலும் வாழையைத் தன் இசையால் பழுக்க வைக்கிறார்.
படத்தின் ஆரம்பக் காட்சிகள் நம்மை மிகவும் பொறுமை காக்க வைக்கிறது. அதன்பிறகுதான் நம்மை உள்ளே இழுக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். சில இடங்களில் சாதி பற்றிய சில குறியீடுகளையும், சில வசனங்களையும் திணிப்பாக வைத்திருக்கிறார், அவற்றைத் தவிர்த்திருந்தால் வேறு விதமான அனுபவத்தையும் கொடுத்திருக்கும். கதாபாத்திரங்களுடன் சேர்ந்து பயணித்து, கடைசியில் ஒரு 'திக் திக்' அனுபவத்தை எதிர்பாராமல் தந்து அதிர்ச்சியடைய வைக்கிறார்.
வாழை - கனியிருப்பக் காய் கவர்ந்தற்று…