3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : பிரித்விராஜ் புரொடக்சன்ஸ்
இயக்கம் : விபின் தாஸ்
இசை : அங்கித் மேனன்
நடிகர்கள் : பிரித்விராஜ், நிகிலா விமல், பசில் ஜோசப், அனஸ்வரா ராஜன், யோகி பாபு, ரேகா, ஜெகதீஷ்
வெளியான தேதி : 17 மே 2024
நேரம் : 2 மணி 14 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5

தன்னை காதலித்து விட்டு வேறு ஒருவரை மணந்து கொண்ட காதலியால் மனமுடைந்து போய் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார் பசில் ஜோசப். இவருக்கு தனது தங்கை அனஸ்வராவை திருமணம் செய்ய நிச்சயம் செய்வதுடன் இங்கிருந்தபடியே வெளிநாட்டில் இருக்கும் பசில் ஜோசப்புக்கு அவ்வப்போது உற்சாகமும் நம்பிக்கையும் கொடுத்து புது மனிதனாக மாற்றுகிறார் பிரித்விராஜ். இதனால் தனது மச்சான் மீது மிகப்பெரிய மரியாதை பசில் ஜோசப்புக்கு ஏற்படுகிறது. எந்த அளவிற்கு என்றால் வருங்கால மனைவியுடன் போனில் பேசுவதை விட, மச்சானுடன் தான் அதிக நேரம் பேசுகிறார் பசில் ஜோசப். திருமணத்திற்காக ஊருக்கு வரும்போது கூட மணப்பெண்ணுக்கு பதிலாக மச்சானுக்கு விலை உயர்ந்த ஐபோன் ஒன்றை பரிசாக வாங்கி வருகிறார்.

அது மட்டுமல்ல பிரித்விராஜின் மனைவி நிகிலா விமல், கணவருடன் கருத்து வேறுபாடால் பிரிந்து சென்று தந்தையின் வீட்டில் வசிக்கிறார். ஆனால் தனது திருமணத்தின் போது நீங்கள் தம்பதி சமேதராக நின்று எங்களை வாழ்த்த வேண்டும் என்று பிரித்விராஜிடம் கோரிக்கை வைக்க, வருங்கால மாப்பிள்ளைக்காக ஈகோவை மறந்து மனைவி வீட்டுக்குச் சென்று அவரை சமாதானப்படுத்தி அழைத்து வருகிறார் பிரித்விராஜ்.

பசில் ஜோசப் ஊருக்கு வந்து இறங்கியதுமே ஆவலாக தனது வருங்கால மனைவியை பார்ப்பதை விட மச்சானை சந்திக்க தான் முதலில் செல்கிறார். அங்கே போனதும் தான் தன்னுடைய முன்னாள் காதலி நிகிலா விமல் தான் பிரித்விராஜின் மனைவி என்கிற அதிர்ச்சி கலந்த உண்மை அவருக்கு தெரிய வருகிறது. இதை வெளியில் சொல்ல முடியாமல் எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்த முயற்சி செய்கிறார் பசில் ஜோசப். அதற்காக வெவ்வேறு விதமான கிறுக்குத்தனமான முயற்சிகளை நண்பர்கள் மூலமாக மேற்கொள்கிறார்.

ஆனால் எப்படியும் இந்த திருமணத்தை நடத்தியே தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் பிரித்விராஜூக்கும் ஒரு கட்டத்தில் தனது மனைவி தான் பசில் ஜோசப்பின் காதலி என்று தெரிய வந்ததும் அப்படியே யு டர்ன் அடித்து இந்த திருமணத்தை நடத்த விட மாட்டேன் என சபதம் செய்கிறார். அதேசமயம் தனது வருங்கால மனைவி அனஸ்வராவுக்கு இந்த உண்மை தெரிந்து, ஆனாலும் தன்னையே திருமணம் செய்துகொள்ள அவர் உறுதியாக இருப்பதை அறிந்து கொண்ட பசில் ஜோசப் இந்த திருமணத்தை நான் நடத்திய தீருவேன் என்கிறார். இதற்காக இவர்கள் இருவரும் மாறி மாறி நடத்தும் காமெடி போராட்டம் தான் மீதிப்படம். இந்த திருமணம் நடந்ததா இல்லையா என்பது கிளைமாக்ஸ்.

குடும்பங்கள் சேர்ந்து ரசிக்கக்கூடிய நகைச்சுவை படம் என்று சொல்வார்களே அது நூறு சதவீதம் இந்த படத்திற்கு பொருந்தும்.

நாயகன் பசில் ஜோசப், தான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற தூண்டுதலாக இருக்கும் பிரித்விராஜ் மீது கடவுள் ரேஞ்சுக்கு வைக்கும் பக்தியை பார்க்கும் போது சிரிக்காதவர்கள் கூட சிரித்து விடுவார்கள். தனது வருங்கால மனைவியுடன் போனில் பேசும்போது கூட எந்நேரமும் பிரித்விராஜ் பற்றியே புகழ்ந்து பேசுவது, நிலைமை தலைகீழாக மாறி இருவரும் எதிரும் புதிராக மாறியதும் சண்டைக்கோழிகளாக சீறுவது என தனது கதாபாத்திரத்தை செவ்வனே செய்துள்ளார் பசில் ஜோசப் திருமணத்தை நிறுத்துவதற்கும் பின் திருமணத்தை நடத்துவதற்கும் அவர் செய்யும் யுக்தி வேலைகள் எல்லாமே அவருக்கு எதிராகவே திரும்புவது பரிதாபம்.

எந்நேரமும் வீட்டிற்கு வரப்போகும் மாப்பிள்ளையை தாங்கு தாங்கென்று தாங்கும் மச்சானாக பிரித்விராஜ். இதுவரை நடித்திராத ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது மனைவி தான், மச்சானின் முன்னால் காதலி என்று தெரியாமல் கண்ணா பின்னாவென்று பேசுவதும் அவரை பழிவாங்குவதற்கே மச்சானுக்கு ஐடியா கொடுப்பதும் என காமெடி தோரணம் கட்டி தொங்க விடுகிறார். அதேசமயம் பிரித்விராஜ் இந்த படத்தில் படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கதாநாயகன் அந்தஸ்தை பசில் ஜோசப்புக்கு விட்டுக் கொடுத்துள்ளார் என்பதே உண்மை.

முன்னாள் காதலி, இந்நாள் மனைவி என இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கும் கதாபாத்திரத்தில் நிகிலா விமல் சரியான தேர்வு. அதிலும் அவருக்கு சூட்டப்பட்ட அந்த அழகிய லைலா பட்டமும் அவர் வரும்போதெல்லாம் பின்னணியில் ஒலிக்கும் அந்த பாடலும் செம பில்டப். பிரித்விராஜின் தங்கையாக அனஸ்வரா ராஜனும் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் இளம் பெண்ணின் உணர்வுகளை அழகாக பிரதிபலித்திருக்கிறார்.

இந்த படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் யோகிபாபு. கிளைமாக்ஸில் கடைசி பத்து நிமிடங்களே வந்தாலும் தனது பாணியில் அனைவரையும் கலாய்த்து கலகலப்பூட்டி சிரிக்க வைக்கிறார். குறிப்பாக திருமணத்தை நிறுத்துவதற்காக தன் பங்கிற்கு இவர் போடும் திட்டமும் அதை அறிந்து கொள்ள கடைசி வரை பிரித்விராஜ் படும் பாட்டையும் ரசித்து சிரிக்கலாம்.

பசில் ஜோசப்பின் நண்பனாக வருபவர், பிரித்விராஜின் தங்கையை ஒருதலையாக காதலிப்பதாக சொல்லிக்கொண்டு கல்யாணத்தை நிறுத்த முயற்சிக்கும் அந்த டாக்டர் என இந்த இருவருக்கும் படத்தின் காமெடியில் மிகப்பெரிய பங்கு உண்டு. பிரித்விராஜின் பெற்றோராக ஜெகதீஷ் மற்றும் நடிகை ரேகா குணச்சித்திர நடிப்பில் சிறப்பித்து இருக்கின்றனர். கிளைமாக்ஸ் காட்சியில் சில நிமிடங்கள் மட்டுமே வந்து கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்துகிறார் அரவிந்த் ஆகாஷ்.

படத்தின் இசை அங்கித் மேனன். ஆனால் படத்தின் பெரும்பாலான காட்சிகளில் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் அழகிய லைலா பாடலுக்கான இசையை வைத்தே ஒப்பேற்றியுள்ளார். இருந்தாலும் பாடல்களில் கவனிக்கவும் வைக்கிறார். ஒளிப்பதிவாளர் நீரஜ் ரவி கிளைமாக்ஸில் இடம்பெறும் குருவாயூர் கோவில் காட்சிகளில் பிரம்மாண்டம் காட்டி நம்மை ஆச்சரியப்படுத்தி விடுகிறார்.

இதற்கு முன்னதாக ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தின் மூலம் கணவன், மனைவி பிரச்சினையை கையில் எடுத்து படம் முழுவதும் நம்மை சிரிக்க வைத்த இயக்குநர் விபின் தாஸ், இந்த படத்தில் மாமன், மச்சான் அன்னியோன்யத்தையும் அதன்பிறகு ஏற்படும் பிரச்சினையையும் வைத்து முழு கதையையும் நகைச்சுவையுடன் நகர்த்தியுள்ளார். நிகிலா விமல் பற்றிய ட்விஸ்ட் மற்றும் அடுத்தடுத்து வரும் காட்சிகள் பெரும்பாலும் யூகிக்கும் விதமாகவே இருந்தாலும் அலுப்புத்தட்டாமல் செல்கின்றன.

பிரித்விராஜ் கதாநாயகனாக அறிமுகமான நந்தனம் படத்தில் இடம்பெற்ற அரவிந்த் ஆகாஷ் கதாபாத்திரத்தை 22 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த படத்தில் பயன்படுத்தி இருக்கும் இயக்குனரின் யுக்தி ஆச்சரியப்படுத்துகிறது. ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்டிருப்பதால் சில லாஜிக் குறைபாடுகளை கண்டு கொள்ளாமல் ஒதுக்கி விட்டு தாராளமாக இந்த படத்தை பார்த்து ரசிக்கலாம்.

குருவாயூர் அம்பல நடையில் : ராஜ நடை

 

பட குழுவினர்

குருவாயூர் அம்பல நடையில் (மலையாளம்)

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

பிருத்விராஜ்

மலையாளத்தில் முன்னணி நடிகராக திகழும் பிருத்விராஜ், பின்னணி பாடகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். 2002ம் ஆண்டு வெளியான நந்தனம் படத்தில் தான் பிருத்விராஜ், டைரக்டர் ரஞ்சித்தால் அறிமுகப்படுத்தப்பட்டார். இருப்பினும், அதற்கு பின் அவர் நடித்த நட்த்திர கண்ணுல ராஜகுமாரன் அவனுந்தோரு ராஜகுமாரி படம் தான் முதலில் வெளியானது. தமிழில், கனா கண்டேன் படத்தின் மூலம் அறிமுகமான பிருத்விராஜ் தொடர்ந்து, பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளிதிரை, நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருதை இரண்டு முறை பெற்றுள்ள பிருத்விராஜ், 2011ம் ஆண்டு இந்தியன் ருபி படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். இது தவிர பல டிவி மற்றும் பத்திரிக்கை விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

மேலும் விமர்சனம் ↓