ஆப்ரஹாம் ஒஸ்லர் (மலையாளம்),Abraham Ozler (Malayalam)
Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு ; அவனிர்டெக் டிஜிட்டல் (பி) லிட்
இயக்கம் ; மிதுன் மானுவேல் தாமஸ்
இசை ; மிதுன் முகுந்தன்
நடிப்பு ; ஜெயராம், மம்முட்டி (சிறப்பு தோற்றம்), அனஸ்வரா ராஜன், சைஜூ குறூப், அனூப் மேனன், ஜெகதீஷ் மற்றும் பலர்
வெளியான தேதி ; 11 ஜனவரி 2024
நேரம் ; 2 மணி 24 நிமிடங்கள்
ரேட்டிங் ; 2.5 / 5


மர்ம மனிதன் ஒருவன் தனது வாகனத்தால் அவ்வப்போது யாரோ ஒருவரை மோதி விபத்து ஏற்படுத்தி பின் மருத்துவமனையில் சேர்ப்பதற்கும் ஏற்பாடு செய்கிறான். ஆனால் அன்று இரவே சம்பந்தப்பட்ட அந்த மனிதனை மருத்துவமனையில் வைத்து கொலையும் செய்கிறான். இதுபோன்ற அடுத்த அடுத்த கொலைகள் நடக்க, போலீஸ் அதிகாரியான ஜெயராம் வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. ஒவ்வொரு கொலைக்குமான ஏதாவது ஒற்றுமை கிடைக்குமா என தனது உதவியாளர்களுடன் துப்பு துலக்கும் ஜெயராமுக்கு மருத்துவம் தெரிந்த அதே சமயம் மருத்துவத்தை முறையாக கற்காத ஒரு மனிதன் இந்த கொலைகளின் பின்னால் இருப்பது தெரிய வருகிறது.


அதுகுறித்து அவர் இன்னும் விசாரணையை தீவிரப்படுத்தும்போது இறுதியில் இதன் பின்னால் மருத்துவ படிப்பை முடிக்கும் முன்பே கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட அலெக்ஸ் (மம்முட்டி) தான் இந்த கொலைகளை செய்துள்ளார் என்பதை கண்டறிந்து இறுதியாக ஒரு மருத்துவரை கொலை செய்ய முயற்சிக்கும் தருணத்தில் அவரை பிடித்து கைது செய்கின்றனர். எதற்காக இந்த கொலைகள்? இதன் பின்னணியில் இருக்கும் பிளாஷ்பேக் என்ன என்பது மீதி கதை.


இதற்கு முன்பும் பல சீரியல் கில்லர் சம்பந்தமான பல படங்கள் வந்திருக்கின்றன. ஏன், இந்த படத்தின் இயக்குனர் மிதுன் மானுவேல் தாமஸ் கூட சில வருடங்களுக்கு முன்பு ‛அஞ்சாம் பாதிரா' என்கிற மிரள வைக்கும் சைக்கோ கில்லர் படத்தை இயக்கியிருந்தாரே. ஆனால் இந்த கதை சைக்கோ கில்லர் என்பதிலிருந்து மாறுபட்டு ஒரு சீரியல் கில்லர் கதையாக சொல்லப்பட்டு இருக்கிறது. படத்தின் டைட்டில் கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ஜெயராம். ஆனாலும் அந்த டைட்டிலில் இருக்கும் கம்பீரத்திற்கு ஏற்ப அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்படவில்லை என்பதும் படத்திற்கு அவரது கதாபாத்திரம் எந்த விதமான திருப்புமுனையையும் ஏற்படுத்தவில்லை என்பதும் ஒரு சராசரி புலனாய்வு போலீஸ் அதிகாரியாக மட்டுமே அவர் கடந்து செல்கிறார் என்பதும் மிகப்பெரிய குறை. அதே சமயம் நடிப்பில் எந்தவித குறையையும் அவர் வைக்கவில்லை.


நட்புக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள மம்முட்டியின் கதாபாத்திரம் எதிர்பாராத டுவிஸ்ட். அவரது ப்ளாஷ் பேக் காட்சிகளும், எதற்காக அவர் இத்தனை கொலைகளை செய்கிறார் என்பதற்குமான காரணம் கொஞ்சம் புதிதாகவே இருக்கிறது. அதே சமயம் சில கொலைகள் லாஜிக்கை மீறி செய்யப்பட்டிருப்பதை தான் ஏற்க முடியவில்லை.

பிளாஷ்பேக்கில் இளம் வயது மம்முட்டியின் காதலியாக வரும் கல்லூரி மாணவி அனஸ்வாரா ராஜனின் நடிப்பும் அழகும் நம்மை வசீகரிக்கின்றன. அவரது முடிவு எதிர்பாராத சோகம். கதையில் அவ்வப்போது விஞ்ஞானபூர்வமாக தகவல்களை கூறி கிளைமாக்ஸில் ஒரு திருப்புமுனைக்கும் காரணமாக அமையும் டாக்டராக அனுப் மேனன் சபாஷ் பெறுகிறார். வழக்கமாக இதுபோன்ற துப்பறியும் படங்களில் ஹீரோவுக்கு உதவி செய்யும் நபர்களாக அவ்வளவு பிரபலமாகாத இரண்டு போலீஸ் அதிகாரிகள் (அதில் ஒருவர் பெண்) இருப்பார்கள்.. அதேபோன்று இந்த படத்திலும் இருவர் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்து உள்ளனர்.


தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் மிதுன் முகுந்தனின் பின்னணி இசையும் படத்தின் விறுவிறுப்புக்கு துணை நின்றுள்ளன. உயிர்காக்கும் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவன் ஒருவனின் அராஜகத்தால் சிகிச்சை பெற வந்த ஒரு இளைஞனின் எதிர்காலம் பாழாவதுடன் உடன் படிக்கும் இன்னொரு மாணவனின் எதிர்காலமும் சேர்ந்தே பாழாவது தான் இந்தத் தொடர் கொலைகளுக்கு காரணம் என்கிற காரணமும் ஏற்கும்படியாகத்தான் இருக்கிறது. ஆனால் அதை சொல்ல வந்த விதத்தில் சற்றே குழப்பி அடித்திருக்கிறார் இயக்குனர் மிதுன் மானுவேல் தாமஸ்.

இதற்கிடையே ஆரம்பத்தில் ஜெயராமின் மனைவியும் மகளும் கடத்தப்படுவதும் அது எதனால் என்பதற்கு இறுதிவரை விடை சொல்லாமல் அவர்களை கண்டுபிடிக்கவும் இல்லாமல் படத்தை முடித்து இருப்பதும், எதற்காக இந்த இடைச்செருகலான காட்சிகள் என்கிற குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் கொலையாளி தனது வாகனத்தை விட்டே சம்பந்தப்பட்ட நபரை மோதி விபத்துக்கு உள்ளாக்கும்போது அங்கேயே அவரை கொன்றுவிட வாய்ப்பு இருக்கும் நிலையில் எதற்காக மருத்துவமனையில் சேர்த்து ரிஸ்க் எடுத்து அங்கே சென்று கொலை செய்கிறார் என்பது தெரியவில்லை. இது வடிவேலுவின் மூட்டைப்பூச்சி மெஷின் காமெடியை தான் ஞாபகப்படுத்துகிறது.


அஞ்சாம் பாதிரா படத்தை இயக்கிய இயக்குனர் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளாரா என்கிற அதிர்ச்சி கலந்த ஆச்சரியமும் ஏற்படுகிறது.

ஆப்ரஹாம் ஒஸ்லர் ; பேஸ்மட்டம் ஸ்ட்ராங்.. பில்டிங் வீக்

 

பட குழுவினர்

ஆப்ரஹாம் ஒஸ்லர் (மலையாளம்)

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓