நுனக்குழி (மலையாளம்),Nunakuzhi (Malayalam)
Advertisement
3.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு ; பெட் டைம் ஸ்டோரீஸ் & சரிகம
இயக்கம் ; ஜீத்து ஜோசப்
இசை ; ஜெய் உன்னித்தன் & விஷ்ணு ஷியாம்
நடிப்பு ; பசில் ஜோசப், நிக்கிலா விமல், கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், மனோஜ் கே ஜெயன், ஷைஜு குறூப், சித்திக், சுவாசிகா விஜய், பைஜூ சந்தோஷ், அல்தாப் சலீம்
வெளியான தேதி ; 15 ஆகஸ்ட் 2024
நேரம் ; 2 மணி 5 நிமிடம்
ரேட்டிங் ; 3.75 / 5

இருக்கை நுனியில் அமர வைக்கும் எமோஷனல் திரில்லர் படங்களை கொடுப்பதில் வித்தகரான இயக்குனர் ஜீத்து ஜோசப் இந்தப்படத்தின் மூலம் முதன் முறையாக காமெடி ஏரியாவில் கால் பதித்துள்ளார். இதிலும் அவருக்கு ஜெயம் கிடைத்ததா ? பார்க்கலாம்.

தனது தந்தையின் மறைவுக்குப்பின் தங்களுக்கு சொந்தமான பல நிறுவனங்களுக்கு எம்டியாக பொறுப்பேற்கிறார் விளையாட்டு பிள்ளையான பசில் ஜோசப். திருமணமாகி மூன்றே மாதங்களே ஆனதால் மனைவி நிகிலா விமலுடன் அதிகம் ரொமான்ஸ் காட்டும் பசில் ஜோசப் அவருடன் இரவு நேரத்தில் சந்தோசமாக இருக்கும் தருணங்களையும் தனது லேப்டாப்பில் வீடியோவாக பதிவு செய்கிறார். அலுவலகத்தில் அவ்வப்போது அதை போட்டுப் பார்த்தும் ரசிக்கிறார். ஒருநாள் திடீரென அலுவலகத்தில் நுழைந்து சோதனை நடத்தும் வருமானவரி துறையினர் அவரிடம் உள்ள லேப்டாப்பையும் சேர்த்து பறிமுதல் செய்து செல்கின்றனர். இந்த விஷயம் தெரியவந்ததும் அதில் இருக்கும் தங்களது வீடியோ வெளியாகி விடுமோ என நிக்கிலா விமல் பதற, அவரை சமாதானப்படுத்துவதற்காக அந்த அதிகாரியிடம் இருந்து லேப்டாப்பை எப்படியாவது பெற்று வர கிளம்புகிறார் பசில் ஜோசப்.

இன்னொரு பக்கம் அஜு வர்கீஸ் தனது மனைவி கிரேஸ் ஆண்டனியை விவாகரத்து செய்வதற்காக நீதிமன்றத்தில் தனது நண்பரான பல் டாக்டர் ஷைஜு குறூப்பை விட்டு அவரை குடிகாரி என்பது போல சாட்சி சொல்ல வைக்கிறார். இதனால் ஆத்திரமான கிரேஸ் ஆண்டனி நேராக டாக்டரின் கிளினிக்கிற்கு சென்று அவரை தாக்கி அவர் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றுகிறார். இதனால் நிலை தடுமாறி கீழே விழும் டாக்டர் உயிரிழக்கிறார். இந்த பதட்டத்தில் தனது அபார்ட்மென்டிற்கு திரும்பும் கிரேஸ் ஆண்டனி இந்த அடுத்தடுத்த நிகழ்வுகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கிளாஸில் மதுவை ஊற்றி அதனுடன் பூச்சி மருந்தை கலந்து குடிக்க முடிவு செய்கிறார்.

சரியாக அந்த சமயத்தில் தான் அதே அபார்ட்மென்டில் குடியிருக்கும் அந்த வருமான வரி அதிகாரியின் வீட்டிற்கு திருட்டுத்தனமாக சென்று லேப்டாப்பை கைப்பற்றும் எண்ணத்தில் பின்பக்கமாக குதித்து உள்ளே நுழைகிறார் பசில் ஜோசப். அப்போது திருடன் நுழைந்து விட்டதாக அபார்ட்மென்ட்டில் பரபரப்பு ஏற்பட்டு அதனைப் பார்க்க பக்கத்து வீட்டு பெண்களுடன் செல்கிறார் கிரேஸ் ஆண்டனி. அந்த நேரத்தில் திறந்திருந்த அவரது வீட்டிற்குள் தப்பிப்பதற்காக நுழையும் பசில் ஜோசப் அங்கே அவர் வைத்திருந்த விஷம் கலந்த மதுவை தெரியாமல் எடுத்து குடிக்கிறார். திரும்பி வரும் கிரேஸ் ஆண்டனி தனது வீட்டிற்குள் ஒரு புதிய நபர் இருப்பதையும், தான் கலந்து வைத்திருந்த விஷத்தை வேறு குடித்து விட்டதையும் அறிந்து இது என்னடா பிரச்சனைக்கு மேல் பிரச்சனை என பதறுகிறார். என்னை எப்படியாவது மருத்துவமனையில் சேர்த்து விடுங்கள் அது போதும் என கெஞ்சுகிறார் பசில் ஜோசப். அப்படி மருத்துவமனையில் அவரை சேர்க்கும்போது போலீசாரிடம் சிக்குகிறார் கிரேஸ் ஆண்டனி.

அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக விசாரணையில் மாற்றி மாற்றி பொய் பேச துவங்குகிறார்கள் கிரேஸ் ஆண்டனியும் பசில் ஜோசப்பும். இதற்கிடையே வருமான வரி அதிகாரியான சித்திக், சினிமா நடிகர் மனோஜ் கே ஜெயன் ஆகியோரும் அன்றைய இரவில் எதேச்சையாக இந்த டாக்டர் மரணத்தில் தாங்களாகவே சிக்கிக்கொள்ள இந்த வழக்கு சிக்கலுக்கு மேல் சிக்கலாகிறது. இறுதியில் என்ன நடந்தது ? யார் குற்றவாளியாக போலீசில் சிக்கினார்கள் ? பசில் ஜோசப்பின் லேப்டாப் பிரச்சனை சுமூகமாக தீர்ந்ததா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு மீதி படம் விடை சொல்கிறது. (இரண்டாம் பாகமும் இருக்கிறதாம்)

இயக்குனர் ஜீத்து ஜோசப் தனது வழக்கமான நகம் கடிக்க வைக்கும் ஒரு திரில்லர் கதையை எடுத்துக்கொண்டு, அதே சமயம் அதை முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து கொடுக்க முயற்சித்து காமெடி ஏரியாவிலும் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்திருக்கிறார். ஜீத்து ஜோசப் படம் பார்க்கிறோமா, இல்லை சுந்தர்.சி படம் பார்க்கிறோமா என்கிற சந்தேகம் நமக்கே வரும் அளவிற்கு படம் முழுக்க வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார் ஜீத்து ஜோசப்.

அவரது இந்த முயற்சிக்கு நூறு சதவீதம் கை கொடுத்திருக்கிறார்கள் இந்த படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களும். குறிப்பாக கதையின் நாயகனாக நடித்திருக்கும் பசில் ஜோசப், அமெச்சூர்தனமாக தான் பண்ணும் விஷயங்களால் சிக்கலில் மாட்டிக்கொண்டு அதிலிருந்து விடுபடுவதாக நினைத்து மேலும் மேலும் சிக்கலை இழுத்து கொள்ளும்போது அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டார்.

இவருக்கு அடுத்தபடியாக கிரேஸ் ஆண்டனி. ஆத்திரத்தில் சில விஷயங்களை செய்துவிட்டு அதன்பிறகு அதிலிருந்து தப்பிப்பதற்காக பொய் மேல் பொய் பேசுவது அனைத்துமே அக்மார்க் காமெடி. பாவம் நிக்கிலா விமல்.. ஆரம்பத்திலும் இறுதியிலும் என மொத்தமே பத்து நிமிடங்கள் மட்டுமே வந்து ஏமாற்றம் தருகிறார்.

போலீஸ் அதிகாரியாக பைஜூ சந்தோஷ் விசாரணை என்கிற பெயரில் அடிக்கும் கூத்துக்கள், வருமானவரி அதிகாரியான சித்திக், நடிகரான மனோஜ் கே ஜெயன் கூட்டணி மது அருந்திவிட்டு பண்ணும் அலப்பறைகள், அவர்களிடம் கதை சொல்லுகிறேன் என மாட்டிக்கொண்டு தன் பங்கிற்கு உதவி இயக்குனரான அல்தாப் சலீம் பண்ணும் அட்ராசிட்டி என காட்சிக்கு காட்சி அனைவரும் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி விறுவிறுப்பாக இந்த கதையை எழுதி இருக்கிறார் கதாசிரியர் கே.கிருஷ்ணகுமார். இதில் இடைவேளைக்கு முன்பு வரை என்ன ஆகுமோ என்கிற ஒரு பதைபதைப்பை தனது வழக்கமான பாணியில் ஏற்படுத்திவிடும் ஜீத்து ஜோசப், அதன் பிறகு முற்றிலும் நகைச்சுவை பாணிக்கு மாறி இவர்களது பிரச்சனைகள் எப்படி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்க வைத்து முடிவில் மனதை ரிலாக்ஸ் செய்து விடுகிறார்

ஒரு படத்தில் ஆரம்பம் முதல் இறுதிக்காட்சி வரை சிரிக்க வைக்க முடியுமா ? முடியும் என காட்டி இருக்கிறார் ஜீத்து ஜோசப்.

நுனக்குழி ; காமெடி கன்னிவெடி

 

பட குழுவினர்

நுனக்குழி (மலையாளம்)

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓