நேர் (மலையாளம்),Neru
Advertisement
3.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : ஆசீர்வாத் சினிமாஸ்
இயக்கம் : ஜீத்து ஜோசப்
இசை : விஷ்ணு ஷ்யாம்
நடிப்பு : மோகன்லால், பிரியாமணி, அனஸ்வரா ராஜன், சித்திக், ஜெகதீஷ், சாந்தி மாயாதேவி
வெளியான தேதி : 21 டிசம்பர் 2023
நேரம் : 2 மணி 32 நிமிடங்கள்
ரேட்டிங் : 3.5/5

திரிஷ்யம், திரிஷ்யம்-2, டுவல்த் மேன் படங்களின் மூலம் தொடர் வெற்றியை பெற்று மோகன்லால், இயக்குநர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் நான்காவதாக வெளியாகி இருக்கும் படம் இது.

இஸ்லாமியரான ஜெகதீஷின் இரண்டாவது மனைவியின் மகள் அனஸ்வரா ராஜன். பள்ளி பருவத்திலேயே எதிர்பாராத விதமாக பார்வை இழந்த இளம் பெண். ஒரு நாள் வீட்டில் பெற்றோர்கள் இல்லாதபோது ஒரு இளைஞன் அவரை பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறான். பார்வையற்றவர் என்றாலும் தந்தையைப் போலவே முகத்தை தொட்டு பார்த்தே சிலை வடிக்கும் திறமை கொண்ட அனஸ்வரா, அந்த கயவனின் முகத்தை சிலையாக வடித்துக்காட்ட, அது அந்த ஊரிலேயே உள்ள ஒரு கோடீஸ்வரன் வீட்டு பையன் என்பது பெரிய வருகிறது. நேர்மையான போலீஸ் அதிகாரி அவனை கைது செய்து சிறையில் அடைக்கிறார். ஆனால் கோடீஸ்வரரோ உச்சநீதிமன்ற வக்கீலான சித்திக்கை வரவழைத்து இந்த வழக்கை நடத்த செய்து தன் மகன் மீது தவறு இல்லை என வாதாடி மகனை ஜாமினில் வெளியே எடுக்கிறார்.

ஒரு பக்கம் அனஸ்வராவின் வீட்டிற்கு பணம் கொடுத்து செட்டில் செய்தோ அல்லது மிரட்டியோ வழக்கை வாபஸ் பெற வைக்க முயற்சி நடக்கிறது. சித்திக்கிற்கு பயந்து வேறு எந்த வக்கீலும் இந்த வழக்கை எடுத்து நடத்த மறுக்கின்றனர். இந்த நிலையில் 5 வருடங்களாக நீதிமன்றத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு நீதிமன்ற பயிற்சியே செய்யாமல் இருக்கும் மோகன்லாலின் உதவியை தெரிந்த ஒருவர் மூலமாக நாடுகிறார் ஜெகதீஷ். முதலில் அவர் மறுத்தாலும் பின்னர் அனஸ்வராவின் நிலை கண்டு அந்த வழக்கை ஏற்று நடத்த துவங்குகிறார்.

ஆரம்பத்தில் அவர் சில தோல்விகளை சந்தித்தாலும் ஒரு கட்டத்தில் சித்திக்கிற்கு எதிராக வழக்காடி அந்த பையன் தான் குற்றவாளி என மீண்டும் நிரூபிக்கிறார். ஆனால் விஷயம் இத்தோடு முடியவில்லை. சித்திக்கின் மகள் உச்ச நீதிமன்ற பயிற்சி வழக்கறிஞரான பிரியாமணி தனது தந்தைக்கு பதிலாக மோகன்லாலுக்கு எதிராக இந்த வழக்கை எடுத்து நடத்த களம் இறங்குகிறார். ஒரு காலத்தில் சித்திக்கிடம் வழக்கறிஞர்களாக பயிற்சி எடுத்தபோது பிரியாமணியும் மோகன்லாலும் காதலர்கள். இப்போது ஒரே வழக்கில் எதிரிலே துருவங்களாக நிற்க வேண்டிய சூழல். மோகன்லால் மூலமாக அனஸ்வராவுக்கு நியாயம் கிடைத்ததா ? அல்லது தந்தையின் கவுரவத்தை காக்க களம் இறங்கிய பிரியாமணிக்கு வெற்றி கிடைத்ததா என்பது மீதி கதை.

மோகன்லாலின் என்ட்ரியை பார்க்கும்போது நேர்கொண்ட பார்வை அஜித் கதாபாத்திரம் தான் ஞாபகத்திற்கு வருகிறது. அதே சமயம் ஆக்ஷனில் கால் வைக்காமல் இந்த வழக்கின் ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைப்பதாகட்டும் எங்காவது ஒரு பிடி கிடைத்து விடாதா என ஆதங்கத்துடன் தேடுவதாகட்டும் அந்த விஜய மோகன் கதாபாத்திரத்திற்கு மோகன்லால் உயிர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

நாயகி பிரியாமணி இடைவேளைக்கு முன் வெறும் இரண்டு மூன்று நிமிட காட்சிகளிலேயே மட்டுமே வந்து போகிறார். ஆனால் தன் தந்தை நீதிமன்றத்தில் தோற்றுப்போய் அவமானப்பட்டதும் தங்கள் தரப்பின் மீது தான் தவறு இருப்பது தெரிந்தும் தன் தந்தைக்காக வாதாட இறங்கும் இடத்தில் இடைவேளைக்கு பிறகு முழு திரையையும் மோகன்லாலுடன் சேர்ந்து ஆக்கிரமித்து கொள்கிறார். அவரும் தனது தரப்பு வாதங்கள் மூலம் சளைக்காமல் மோகன்லாலுக்கு டப் கொடுக்கிறார்.

இவர்கள் இருவருக்கு சமமாக வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சித்திக். நீதிமன்றத்தில் சித்திக் விசாரணை செய்யும் முறைகளை பார்க்கும்போது பல வருடங்களுக்கு முன்பு விதி படத்தில் நடித்த டைகர் தயாநிதி கதாபாத்திரத்தில் நடித்த ஜெய்சங்கரின் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு படம் முழுவதும் டெரர் காட்டுகிறார் சித்திக்.

பாதிக்கப்பட்ட பெண்ணாக அனஸ்வரா ராஜன். கடந்த சில படங்களுக்கு முன்பு இருந்ததை விட இந்த படத்தில் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. பார்வை இழந்த பெண்ணாக இருந்தாலும் தனது உணர்வுகளை முகபாவங்களால் அற்புதமாக வெளிப்படுத்தி உள்ளார். கிளைமாக்ஸில் சித்திக்கின் மிரட்டலால் அவர் நியாயத்தை தொட முடியாமல் போய்விடுவாரோ என பதைபதைக்க வைத்து விடுகிறார்.

இதில் படம் முழுக்க தனது அற்புதமான பக்குவப்பட்ட நடிப்பால் நீதிபதி கதாபாத்திரத்திற்கு பெருமையும் வலுவும் சேர்த்து இருக்கிறார் நடிகர் மேத்யூ வர்கீஸ். அனஸ்வராவின் தந்தையாக ஜெகதீஷ், மோகன்லாலுக்கு படம் நெடுகிலும் வழக்கில் உதவிகரமாக பயணிக்கும் சாந்தி மாயாதேவி, இந்த வழக்கை நேர்மையாக நடத்த முயற்சிக்கும் அதிகாரியாக கணேஷ்குமார் மற்றும் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு வந்து திருப்புமுனைகளை ஏற்படுத்தும் பல கதாபாத்திரங்களும் செவ்வனே தங்களது வேலையை செய்துள்ளனர்.

இரண்டரை மணி நேர படத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நீதிமன்றத்திற்குள்ளேயே காட்சிகள் நடந்தாலும் ஒரு நொடி கூட அலுப்பு தட்டவில்லை என்றால் அதற்கு ஒளிப்பதிவாளர் சதீஷ் குரூப் காட்சிகளை படமாக்கிய விதமும் முக்கிய காரணம். அதேபோல ஒரு நீதிமன்ற விசாரணையில் ஏற்படும் திருப்பங்களுக்கு ஏற்ப பின்னணி இசையை அழகாக கையாண்டுள்ளார் இசையமைப்பாளர் விஷ்ணு சியாம்

மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவாகும் படம் என்றாலே இரண்டு மணி நேரம் இருக்கையை விட்டு நகர முடியாது என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளனர். இந்த படத்திலும் அந்த மாயாஜாலத்தை மீண்டும் நிகழ்த்தியுள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப். வழக்கம் போலவே காட்சிக்கு காட்சி திருப்பங்களை கொடுத்து நம்மை ஆச்சரியப்படுத்தும் பணியை இதிலும் தவறாமல் செய்துள்ளார். அதே சமயம் இந்த படத்தின் கிளைமாக்ஸில் குற்றவாளி இவன் தான் என உறுதிப்படுத்தும் கடைசி அஸ்திரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் மோகன்லால் இதை துவக்கத்திலேயே செய்திருக்கலாமே என்கிற எண்ணமும் ஏற்படுவது. எப்போதும் கிளைமாக்ஸ் என்னவென்று யூகிக்க முடியாத வகையில் கதையை நகர்த்தும் ஜீத்து ஜோசப் இந்த படத்தில் அதை யூகிக்க வைத்திருப்பதில் மட்டும் கொஞ்சம் கோட்டை விட்டு இருக்கிறார்.

நேர் : வாய்மையே வெல்லும்

 

பட குழுவினர்

நேர் (மலையாளம்)

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மோகன்லால்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன் லால். கேரள மாநிலத்தில் பிறந்த மோகன்லால், 1978ம் ஆண்டு திறனோட்டம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தார். மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். 4 முறை தேசிய விருது, பிலிம்பேர், மாநில விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

மேலும் விமர்சனம் ↓