நடிகர்கள் : திலீப், நயன்தாரா, ஜோதிகிருஷ்ணா
இயக்குநர்: ஜீது ஜோசப்
த்ரிஷ்யம் என்கிற பிளாக் பஸ்டருக்குப்பின் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் இது.
கேரளாவில் கட்டப்பனை என்கிற ஊரில் அமைதியான இளைஞன் திலீப். பள்ளிக்காலத்தில் இருந்து தன்னுடன் பழகிய ரட்சனாவை காதலிக்கும் திலீப்பிற்கு, தனது பெண்ணை தர மறுத்து வேறு ஒருவருவருக்கு மனம் செய்துவைக்கிறார் ரட்சனாவின் தந்தை. சோகத்தில் இருந்து கொஞ்ச கொஞ்சமாக விடுபடும் திலீப்பிற்கு வெளிநாட்டில் நர்ஸ் வேலை பார்க்கும், விவாகரத்தான ஜோதி கிருஷ்ணாவை திருமணம் செய்வதற்கான வாய்ப்பு தேடி வருகிறது.
முதலில் யோசித்தாலும், இதனால் தங்கள் வீட்டுக்கடனை அடைத்து, தனது தங்கைக்கும் திருமணம் செய்யலாம் என்பதால் இதற்கு ஒப்புக்கொண்டு ஜோதி கிருஷ்ணாவை திருமணம் செய்து நியூசிலாந்து செல்கிறார் திலீப். ஆனால் ஜோதிகிருஷ்ணா, திலீப்புடன் நட்பாக பழகினாலும் இல்லற உறவை தவிர்க்கிறார். சில நாட்கள் கழித்து, அவரது முன்னாள் காதலன் தேடிவர அவருடன் இணைந்துகொள்ள இப்போது திலீப்பின் நிலை கேள்விக்குறியாகிறது..
இந்த சோகத்தை மறைக்க, ரெஸ்டாரன்ட் தொடங்கி நியூசிலாந்திலேயே தன் வாழ்க்கையை தனிமையிலே கழிக்கும் திலீப்பால் தனது பெற்றோரின் மரணத்துக்கு கூட போகமுடியாத நிலை. பத்து வருடங்கள் கழித்து ஊருக்கு திரும்பும் திலீப்பின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. அந்த இனிய திருப்பம் என்ன என்பது க்ளைமாக்ஸ்.
ஜோஸுட்டி என்கிற ஒரு படிக்காத கிராமத்து இளைஞனின் வாழ்க்கையில் நிகழும் வாழ்நாள் சம்பவங்களின் தொகுப்புதான் மொத்தப்படமும்.. ஜோஸுட்டியாக திலீப் வாழ்ந்திருக்கிறார் என்றால் கூட அது சாதராண வார்த்தையாகத்தான் இருக்கும்.. இளவயது காதல், விவாகரத்தான பெண்ணை திருமணம் செய்வது, மனைவியை அவளது முன்னாள் காதலனுடன் படுக்கையில் ஒன்றாக பார்த்து அதிர்ச்சியாவது, ஒவ்வொரு முறை பிரச்சனை வரும்போதும் தனது தந்தை சொல்லிக்கொடுத்த வாழ்க்கை பாடத்தை முன்னிறுத்தி, ஜஸ்ட் லைக் தட் அதை கடந்துபோவது என ஒரு எளிய மனிதனின் சாகசமில்லா வார்த்தையை அப்படியே நம் கண்களில் நிழலாட விட்டிருக்கிறார்.
காதலனை மணக்க முடியவில்லையே என்கிற பச்சாதாபத்தால் அழும் ரட்சனா நாராயண்குட்டி, வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டபின் அப்படியே டோட்டலாக மாறி வதவதவென குழந்தைகளை பெற்று திலீப்பை பார்த்து பார்வையாலேயே கொக்கரிக்கும் காட்சி ஒன்று போதும் அவரது நடிப்பை பறைசாற்ற.
மிக அழுத்தமான கேரக்டரில் யதார்த்தம் மீறாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஜோதிகிருஷ்ணா. அவரது கண்கள் அவருக்கு ப்ளஸ்.. திலீப்பை திருமணம் செய்துவிட்டு, தனது முன்னாள் காதலன் வந்ததும் அவரை கழட்டிவிடும்போது ரசிகர்களின் கோபத்தை சம்பாதித்து கொள்கிறார்.
வேறுவழியில்லை.. சொல்லியே ஆகவேண்டும்.. க்ளைமாக்சில் சஸ்பென்ஸ் என்ட்ரி கொடுத்து அசத்துகிறார் நயன்தாரா. திலீப்பின் தந்தையாக பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் ஹரீஷ் பெராடி பாசிடிவ் எனர்ஜியின் மறுவடிவமாக காட்சி தருகிறார். திலீப்பின் மாமனாக வரும் சுராஜ் வெஞ்சாரமூடு, திலீப்பின் நண்பர்கள் வட்டாரம், நியூசிலாந்தில் திலீப்புக்கு நண்பராகும் மலையாள நபர் என கதைக்கு பொருத்தமான நபர்களை சரியாக நடமாட விட்டிருக்கிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.
தனது முந்தைய படத்தை போல இதில் ட்விஸ்ட், சஸ்பென்ஸ், த்ரில் என எதையும் எதிர்பார்க்காமல் வாருங்கள் என இயக்குனர் ஜீத்து ஜோசப் ஏற்கனவே சொல்லிவிட்டதால் எந்தவித பதட்டமும் இன்றி ஜோஸுட்டி என்கிற ஒரு மனிதனின் வாழ்க்கையை நாமும் அருகில் இருந்து பார்த்த உணர்வு ஏற்படுகிறது.
இது கமர்ஷியல் படம் அல்ல.. கருத்து சொல்லும் படமும் அல்ல.. ஒரு எளிய மனிதனின் வாழ்க்கை பதிவு.