3.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : ஆசீர்வாத் சினிமாஸ்
இயக்கம் : ஜீத்து ஜோசப்
இசை : அனில் ஜான்சன்
நடிகர்கள் : மோகன்லால், ஷிவதா, அணு சித்தாரா, அனுஸ்ரீ, பிரியங்கா, ஷைஜு குறூப், லியோனா லிஷாய், ராகுல் மாதவ் மற்றும் பலர்
வெளியான தேதி : மே 20.2022
நேரம் : 2 மணி 53 நிமிடம்
ரேட்டிங் : 3.5/5

இயக்குனர் ஜீத்து ஜோசப் - மோகன்லால் கூட்டணியில் வெளியாகி இருக்கும் மூன்றாவது படம் இது. திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் ரசிகர்களிடம் உருவாக்கி வைத்திருந்த எதிர்பார்ப்பை இந்த படத்தில் இருவரும் ஈடு கட்டி உள்ளார்களா..? பார்க்கலாம்.

நான்கு கணவன் மனைவி ஜோடி, விவாகரத்தான ஒரு பெண், இன்னும் 4 நாட்களில் புதிதாக திருமணம் செய்து கொள்ள போகிற ஒரு ஜோடி என ஐந்து ஆண்களும் ஆறு பெண்களுமாக மொத்தம் நண்பர்கள் பதினோரு பேர் ஒருநாள் விடுமுறை கொண்டாட்டமாக மலைப்பாங்கான ஒரு இடத்திற்கு செல்கிறார்கள். மது அருந்திவிட்டு உற்சாகமாக ஆட்டம் பாட்டம் என ஆரம்பிக்கும் அவர்களது கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு சுவாரஸ்யமான விளையாட்டை ஆட துவங்குகிறார்கள்.. அதாவது அனைவரும் தங்களது மொபைல் போனை டேபிளில் வைத்து விடவேண்டும். அதில் யாருக்கு அழைப்பு வந்தாலும் அதை ஸ்பீக்கரில் போட்டு பேச வேண்டும். அதேபோல வாட்ஸ்அப் மெசேஜ்கள் வந்தால் அதை அனைவருக்கும் படித்துக்காட்ட வேண்டும் ஒரு மணி நேரத்திற்கு இது போல செய்ய வேண்டும் என இந்த விளையாட்டு ஆரம்பிக்கிறது.

ஆரம்பத்தில் ஒவ்வொருவருக்கும் வரும் அழைப்புகள் மூலமாக மற்றவர்கள் அவர்களை கேலியும் கிண்டலும் செய்ய, ஜாலியாக போகும் இந்த விளையாட்டு, புதிதாக திருமணம் ஆகப்போகும் சித்தார்த்துக்கு அவனது நண்பன் மூலமாக வரும் போன் அழைப்பு ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடுகிறது. அந்த போன் அழைப்பில் பேசும் நண்பன், போன் ஸ்பீக்கரில் போடப்பட்டு இருப்பது தெரியாமல் சித்தார்த்துக்கு அவர்கள் குழுவிலேயே உள்ள ஒரு பெண்ணிடம் இருக்கும் தொடர்பு பற்றியும், அவளுக்காக கர்ப்பத்தடை மாத்திரை வாங்கியது பற்றியும் ஜாலியாக பேசுகிறார்.

இது அங்கிருந்த திருமணமான தம்பதிகளிடம் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. மருத்துவராக இருக்கும் நயனா, நானே டாக்டராக இருக்கும்போது இதுபோன்று ஒரு விஷயத்திற்காக இன்னொருவரின் உதவியை நாட வேண்டிய அவசியம் இல்லை என அந்த லிஸ்டில் தான் இல்லை என ஒதுங்கிக் கொள்கிறார். அதேபோல விவாகரத்தான பெண்ணும் தான் இது போன்ற விஷயங்களை செய்வதென்றால் துணிச்சலாக செய்வேன் என்று கூற, மீதி இருக்கும் மூன்று பெண்களில் யாருடன் சித்தார்த்திற்கு தொடர்பு இருக்கிறது என்பது போன்று சர்ச்சை வெடிக்கிறது.

சித்தார்த்தை திருமணம் செய்யப்போகும் அவனது காதலி இதனால் அதிர்ச்சியாகி அவனுடனான திருமணத்தையே நிறுத்தும் அளவிற்கு செல்கிறார்,. இந்த நிலையில் சித்தார்த்தின் இந்த மோசமான செயல் குறித்து ஆவேசமாக பேசும் மேத்யூவின் மனைவியான ஷைனி, அடுத்த ஓரிரு மணி நேரங்களில் அங்கு இருக்கும் பள்ளத்தில் மர்மமான முறையில் விழுந்து இறந்து கிடக்கிறார்.

இவர்கள் இப்படி பார்ட்டி ஆரம்பிப்பதற்கு முன்பே அங்கே விடுதி ஓனரின் நண்பர் என்கிற முறையில் 12வது ஆளாக தங்கியிருக்கும் போலீஸ் அதிகாரியான மோகன்லால், சம்பவம் நடந்த அன்றிரவே இவர்கள் அனைவரையும் ஒரு ஹாலில் அமர வைத்து விசாரணை செய்கிறார். விசாரணையில் ஒரு புதுமையாக நண்பர்கள் குழு ஏற்கனவே மொபைல்போனை வைத்து விளையாடிய அதே பாணியில் தனது விசாரணையை துவக்குகிறார் மோகன்லால். இந்த விசாரணையில் அந்தக் குழுவில் உள்ள நண்பர்கள் பலரின் இன்னொரு முகம் வெளிப்பட்டு அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது இறுதியில் ஷைனியின் மரணம் கொலையா தற்கொலையா, காரணம் என்ன என்கிற முடிச்சை அவிழ்த்து படத்தை முடிக்கிறார் மோகன்லால்..

விளையாட்டு வினையாகும் என்கிற விஷயத்தை மையமாக வைத்து ஆங்கில நாவலாசிரியை அகதா கிறிஸ்டியின் பாணியில் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் ஜீது ஜோசப்.

திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களில் ஒரு குற்றத்தை மறைக்க, போலீசார் எப்படி எல்லாம் விசாரணை செய்வார்கள் என கணித்து அதிலிருந்து தப்பிப்பதற்காக திட்டம் தீட்டிய மோகன்லால், இதில் குற்றம் செய்தவரை கண்டுபிடிப்பதற்காக வியூகம் வகுக்கும் போலீஸ் அதிகாரியாக ஆச்சரியப்படுத்துகிறார். ஷைனியின் மரணத்திற்கு முன்பாக நண்பர்கள் குழுவிடம் மது கேட்டு அலம்பல் செய்யும் ஒரு சாதாரண நபராக அறிமுகமாகி பின்னர் அவர் ஒரு போலீஸ் அதிகாரி என தெரியவரும் இடம் சூப்பர் டுவிஸ்ட். அதேபோல ஷைனியின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து மோகன்லால் விசாரிக்கும் விசாரணையும் இதுவரை வெளிவந்த படங்களில் நாம் பார்த்திராத ஒன்று

படத்தில் ஆனியாக நடித்துள்ள வெயில் பிரியங்கா, மெரின் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனு சித்தாரா இருவரும் மோகன்லாலின் விசாரணையில் சிக்கித் தவிக்க, ஷைனியாக நடித்துள்ள அனுஸ்ரீ அடிக்கடி சிகரெட் பிடிக்கும் லியோனா லிசா, டாக்டர் நயனாவாக ஷிவதா ஆகிய மூவரும் நடிப்பில் கெத்து காட்டியுள்ளனர். ஆண்களில் சைஜு குருப், ராகுல் மாதவ் உள்ளிட்ட நால்வரும் தங்களது கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி உள்ளனர்

படத்தின் மொத்த கதையும் இந்த 12 கதாபாத்திரங்களை மட்டுமே சுற்றி வந்தாலும் ஒரே ஒரு ரிசார்ட் மட்டுமே படத்தின் மொத்த லொக்கேஷன் என்றாலும் கொஞ்சம் கூட போரடிக்காமல் அடுத்தது என்ன என ஒவ்வொரு நிமிடத்தையும் எதிர் பார்க்கும் விதமாக விறுவிறுப்பாக படத்தைக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப். குறிப்பாக ஷைனி மரணம் தொடர்பாக ஒவ்வொருவர் மீதும் சந்தேகம் வரும் அளவிற்கு திரைக்கதையை அமைத்துள்ள ஜீத்து ஜோசப். பத்து நிமிடத்திற்கு ஒரு டுவிஸ்ட் என ஆச்சரியம் நிகழ்த்திக் கொண்டே போகிறார்

அதேசமயம் த்ரிஷயம் போன்று ரசிகர்களை உணர்வுப்பூர்வமாக ஜீத்து ஜோசப் கட்டிப்போடவில்லை என்பதையும் சொல்லியே ஆகவேண்டும்.. துப்பறியும் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு அவர்களை ஏமாற்றாத வகையில் மீண்டும் ஒரு அருமையான விருந்து படைத்திருக்கிறார் ஜீத்து ஜோசப்.

டுவல்த் மேன் ; ஆல்ரவுண்டர்

 

பட குழுவினர்

டுவல்த் மேன் (மலையாளம்)

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மோகன்லால்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன் லால். கேரள மாநிலத்தில் பிறந்த மோகன்லால், 1978ம் ஆண்டு திறனோட்டம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தார். மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். 4 முறை தேசிய விருது, பிலிம்பேர், மாநில விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

மேலும் விமர்சனம் ↓