ஆடு ஜீவிதம்,Aadujeevitham
Advertisement
3.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - விஷுவல் ரொமான்ஸ்
இயக்கம் - பிளஸ்சி
இசை - ஏஆர் ரஹ்மான்
நடிப்பு - பிருத்விராஜ், அமலா பால்
வெளியான தேதி - 28 மார்ச் 2024
நேரம் - 2 மணி நேரம் 53 நிமிடம்
ரேட்டிங் - 3.5/5

உண்மைக் கதைகளைப் படமாக்குவது, நாவலை அடிப்படையாக வைத்து படமாக்குவது மலையாள சினிமாக்களில் அதிகம் உண்டு. அந்த வாழ்வியல் அனுபவங்களை அப்படியே திரை வழியே கடத்துவதில் மலையாளப் படைப்பாளிகள் சிறந்தவர்கள். அதை காலம் காலமாய் அவர்கள் நிரூபித்தும் வருகிறார்கள்.

இந்த வருடம் இந்தியத் திரையுலகத்தில் குறிப்பிடத்தக்க திரைப்படங்களைக் கொடுத்த ஒரே திரையுலகமான மலையாளத் திரையுலகத்திலிருந்து மற்றுமொரு சிறந்த படைப்பு இந்த 'ஆடு ஜீவிதம்'.

2008ல் வெளிவந்த பென்யாமின் எழுதிய 'ஆடு ஜீவிதம்' நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ஒரு படம். கதையின் நாயகன் உணரும் வலி நாவலைப் படிக்காதவர்களுக்கும் படத்தைப் பார்க்கும் போது கண்டிப்பாக வரும். அந்த அளவிற்கு இந்தப் படத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பிருத்விராஜ். இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருது என்பதை இப்போதே அவரது பெயரில் எழுதி வைத்துவிடலாம்.

ஏழை இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர் பிருத்விராஜ். அவரது மனைவி அமலா பால். சில மாதங்களில் குழந்தையைப் பெற்றெடுக்கப் போகிறார். நன்றாக சம்பாதித்து மனைவி, பிறக்கும் குழந்தையை வாழ வைக்க வேண்டும் என அரபு நாட்டிற்கு வேலைக்குச் செல்கிறார். அங்கு வேறொரு ஏஜன்ட் மூலம் கடத்தப்படுகிறார். பாலைவனத்தில் ஆடுகளை மேய்க்கும் வேலைக்கு பிருத்விராஜ் துப்பாக்கி முனையில் அமர்த்தப்படுகிறார். எதிர்க்க முடியாமல் அடிபணிந்து அந்த வேலையைச் செய்ய ஆரம்பித்துவிடுகிறார். சரியான குடிநீர், உணவு, ஏன் குளிக்கக் கூட முடியாமல் சில வருடங்கள் கடந்து போகிறது. தன்னுடன் வந்து அதே போல சிக்கிக் கொண்ட ஊர்க்காரன் ஒருவரை சந்திக்கிறார். அவர்களைப் போல வேலைக்கு வந்த ஆப்பிரிக்கர் ஒருவர் மூலம் தப்பிக்க நினைக்கிறார்கள். அவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்திற்கான உருவாக்கம், அதற்கான உழைப்பு, ஆரம்பக் காட்சி முதல் கடைசி காட்சி வரையிலும் தெரிகிறது. அப்படிப்பட்ட பாலைவனத்தில் முழு படத்தையும் படமாக்குவது சாதாரண விஷயமல்ல. இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்ற குழுவினர் என படத்திற்காக உழைத்த ஒவ்வொருவரையும் படம் முடிந்த பின்பு நினைக்காமல், பாராட்டாமல் தியேட்டரை விட்டு வெளியேற முடியவில்லை என்பது உண்மை.

நஜீப் முகம்மது என்ற கதாபாத்திரத்தில் பிருத்விராஜ். ஆரம்பக் காட்சியில் விமான நிலையத்தில் தன்னுடன் வந்த இளைஞனுடன் எப்படி போவது, எங்கே போவது, யார் வந்த அழைத்துச் செல்வார்கள் எனத் தவிக்கும் போதே, என்னமோ நடக்கப் போகிறது என்ற உணர்வை ஏற்படுத்திவிட்டார். ஆடு மேய்க்க அடிமையாக கொண்டு செல்லப்பட்ட பின் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் ஒவ்வொன்றும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. கதாபாத்திரத்திற்காக தன்னை எந்த அளவு மாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதைப் பார்க்கும் போது சினிமாவின் மீதான அவரது காதல் புரிகிறது.

பிளாஷ்பேக் காட்சிகளில் மட்டும் பிருத்விராஜ், அமலா பால் சம்பந்தப்பட்ட காட்சிகள் வந்து போகிறது. அதையும் இடைவேளை வரை மட்டுமே காட்டுகிறார்கள். இடைவேளைக்குப் பின்பு கடுமையான வலியைத் தரக் கூடய காட்சிகள் வரும் என்பதால் முன்பாகவே இப்படி காட்டிவிட்டார்கள் போல. ரயிலில் ஏறிச் செல்லும் கணவன் பிருத்வியைப் பார்த்து ரயில்நிலையத்தில் கலங்கி நிற்கும் அமலா பால் அப்படியே கண்ணுக்குள் நிற்கிறார்.

பிருத்விராஜை கடத்திச் சென்று அடிமையாக்கும் கபில் கதாபாத்திரத்தில் தலிப் அல் பலுஷி, பிருத்விராஜ் தப்பிக்க உதவும் ஆப்பிரிக்கராக ஜிம்மி ஜீன் லூயிஸ், பிருத்வியுடன் வேலைக்குச் செல்லும் ஊர்க்காரனாக கேஆர் கோகுல் அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பாய் நடித்திருக்கிறார்கள்.

ஏஆர் ரஹ்மானின் பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரிய தாக்கம். உணர்வுபூர்வமான பல காட்சிகளில் அந்த வலியை இசையின் மூலம் நமக்குள் கடத்துகிறார். சமீப சில வருடங்களில் ரஹ்மானின் பின்னணி இசையில் இந்தப் படத்தை 'த பெஸ்ட்' எனக் குறிப்பிடலாம். ஒளிப்பதிவாளர் கேஎஸ் சுனில் அவருடன் பணியாற்றிய உதவியாளர்கள் என அவரது குழுவினரை மொத்தமாய் பாராட்ட வேண்டும். அந்த பாலைவனத்தை பலவிதமாய் படமாக்கியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியின் உணர்வும் முழுமையாய் அறியப்பட வேண்டும் என தொகுத்திருக்கிறார் எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத்.

எத்தனையோ படங்கள் வரலாம், போகலாம், ஆனால் சில படங்கள் மட்டுமே பல காலத்திற்குப் பிறகும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும் படமாக இருக்கும். மெதுவாக நகரும் திரைக்கதை, குறைந்த கதாபாத்திரங்கள், பல இடங்களில் சப் டைட்டில் இல்லாமல் இருப்பது, என இந்தப் படத்திலும் சில குறைகள் உண்டு. அவற்றையெல்லாம் கடந்து இந்தப் படம் தனித்து நிற்கும்.

ஆடு ஜீவிதம் - ஆற்றாத வலியுடன்…

 

ஆடு ஜீவிதம் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ஆடு ஜீவிதம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

பிருத்விராஜ்

மலையாளத்தில் முன்னணி நடிகராக திகழும் பிருத்விராஜ், பின்னணி பாடகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். 2002ம் ஆண்டு வெளியான நந்தனம் படத்தில் தான் பிருத்விராஜ், டைரக்டர் ரஞ்சித்தால் அறிமுகப்படுத்தப்பட்டார். இருப்பினும், அதற்கு பின் அவர் நடித்த நட்த்திர கண்ணுல ராஜகுமாரன் அவனுந்தோரு ராஜகுமாரி படம் தான் முதலில் வெளியானது. தமிழில், கனா கண்டேன் படத்தின் மூலம் அறிமுகமான பிருத்விராஜ் தொடர்ந்து, பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளிதிரை, நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருதை இரண்டு முறை பெற்றுள்ள பிருத்விராஜ், 2011ம் ஆண்டு இந்தியன் ருபி படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். இது தவிர பல டிவி மற்றும் பத்திரிக்கை விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

மேலும் விமர்சனம் ↓