குட்டி ஸ்டோரி,Kutty Story

குட்டி ஸ்டோரி - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

நடிப்பு - கவுதம் மேனன், விஜய் சேதுபதி, அமிதாஷ், வருண், அமலா பால், மேகா ஆகாஷ்
தயாரிப்பு - வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் - கவுதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி
இசை - கார்த்திக், மது, பிரேம்ஜி அமரன், எட்வின் லூயிஸ் விஸ்வநாத்
வெளியான தேதி - 12 பிப்ரவரி 2021
நேரம் - 2 மணி நேரம் 12 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் நான்கைந்து கதைகளைச் சொல்லும் ஆந்தாலஜி வகைப் படங்களைக் கொடுப்பது தற்போது ஒரு டிரெண்டாகவே மாறிவிட்டது.

குறும்படங்கள் மூலம் புகழ் பெற்ற சில இயக்குனர்கள் இரண்டரை மணி நேரப் படங்களைக் கொடுக்கத் திண்டாடுவார்கள். அது போலவே, இரண்டரை மணி நேரப் படங்களைக் கொடுத்த இயக்குனர்கள் இப்படிப்பட்ட குறும் படங்களைக் கொடுக்கவும் திணறுகிறார்கள் என்பது நாம் தொடர்ந்து பார்க்கும் இப்படியான ஆந்தாலஜி படங்களைப் பார்க்கும் போது தெரிகிறது.

இந்த ஆந்தாலஜி படத்தில் கவுதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் காதலை மையமாக வைத்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

எதிர்பாரா முத்தம்

இயக்கம் - கவுதம் மேனன்
இசை - கார்த்திக்
நடிப்பு - கவுதம் மேனன், அமலா பால், வினோத் கிஷன், ரோபோ சங்கர்
ரேட்டிங் - 3/5

நட்புக்கும், காதலுக்கும் ஒரு மெல்லிய கோடு தான் உள்ளது. ஒரு ஆணும், பெண்ணும் நட்பாகப் பழக முடியாதா எனக் கேட்டு அதுவும் காதல்தான் என்றே முடித்திருக்கிறார்கள்.

கவுதம் மேனன் தன் நண்பர்களுடன் பார்ட்டி பண்ணி கொண்டிருக்கிறார். அப்போது அவருடைய கல்லூரி காலத்து காதலைப் பற்றி பேச்சு வருகிறது. அமலா பால் உடனான தன்னுடைய நட்பு பற்றி பெருமிதமாகச் சொல்கிறார். பல வருட இடைவெளிக்குப் பிறகு அமலா பால் கவுதம் மேனனை சந்திக்க ஆசைப்பட்டு சந்திக்கிறார். அந்த சந்திப்பில் தன் மனதில் இருப்பதை கடிதமாக எழுதிக் கொடுக்கிறார். அந்தக் கடிதத்தில் இருந்தது என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.

வழக்கம் போலவே ஆங்கிலம் கலந்து பேசும் நாயகன் கதாபாத்திரத்தை கவுதம் மேனன் விடவே மாட்டார் போலிருக்கிறது. அவரேதான் இக்கதையின் நாயகன். அவரது இளமைப் பருவத் தோற்றத்தில் வினோத் கிஷன் நடித்திருக்கிறார். கதையின் நாயகியாக அமலா பால், கல்லூரி மாணவியாக அவ்வளவு யதார்த்தமாக நடித்திருக்கிறார். கதையின் கிளைமாக்ஸ் எதிர்பாராதது. அப்படியான முடிவும் யதார்த்தமாகவே உள்ளது.

திரைப்படமோ, குறும்படமோ தன்னுடைய காதல் முத்திரையை பதிக்கத் தவறவில்லை கவுதம் மேனன்.

அவனும் நானும்

இயக்கம் - விஜய்
இசை - மது
நடிப்பு - அமிதாஷ் பிரதான், மேகா ஆகாஷ்
ரேட்டிங் - 2.5/5

காதலாக ஆரம்பித்து காமத்தில் நகர்ந்து தாய்மையைக் கடந்து தத்தெடுப்பில் முடியும் கதை.

அமிதாஷ், மேகா இருவரும் காதலர்கள். தனது மாதவிடாய் வராமல் போனதால் தோழியின் ஆலோசனைப்படி பரிசோதனை செய்கிறார் மேகா. கர்ப்பமடைந்திருப்பதாக பரிசோதனை முடிவுகள் வருகிறது. கருவைக் கலைக்க முயற்சிக்கும் போது காதலன் அமிதாஷ் விபத்தில் மரணமடைந்தது தெரிய வருகிறது. கருவைக் கலைக்காமல், வீட்டிற்கும் தெரியாமல் குழந்தையைப் பெற்றெடுக்கிறார் மேகா. ஆனால், அவரைக் கேட்காமலேயே குழந்தையை அனாதை ஆசிரமத்தில் விடுகிறார் தோழி. அதன்பின் என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.

மேகா ஆகாஷ்தான் கதையின் நாயகி. அமிதாஷுக்கு அவ்வளவாக வேலையில்லை. காதலன் நினைவாக அவனால் உருவான கருவைக் காப்பாற்ற நினைக்கும் காதலியாக அனுதாபத்தை அள்ளுகிறார் மேகா. கிளைமாக்ஸ் சினிமாத்தனமாக முடிவதுதான் கதையின் மைனஸ் பாயின்ட்.

லோகம்

இயக்கம் - வெங்கட் பிரபு
இசை - பிரேம்ஜி அமரன்
நடிப்பு - வருண், சங்கீதா, சாக்ஷி அகர்வால், லுத்புதீன்
ரேட்டிங் - 2.25/5

வீடியோ கேமை வைத்தே ஒரு காதல் கதையைச் சொல்லியிருக்கிறார்கள். அது வித்தியாசமாகவே உள்ளது.

லோகம் என்ற வீடியோ கேமில் புதிதாக விளையாட ஆரம்பிக்கிறார் வருண். அந்த விளையாட்டில் உடன் பெண் ஒருவர் வந்து விளையாடுகிறார். இருவருக்கும் இடையே அப்படியே பழக்கம் வருகிறது. கேமின் முடிவில் தோற்றுப் போய் வெளியேறுகிறார் அந்தப் பெண். அதன்பின் தனியாக விளையாடி கேமில் வெற்றி பெறுகிறார் வருண். அந்த அனுபவத்தை ஒரு யு டியூப் சேனலில் பகிர்கிறார். முகம் தெரியாத அந்த பெண்ணுடனான அன்பை விவரிக்கிறார். காதல் கோட்டை ஒன்றை அந்தப் பெண்ணிற்காகக் கட்டுகிறார். இருவரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ்.

இக்கதையில் அதிக நேரம் வீடியோ கேம் கதாபாத்திரங்களே இடம் பெறுகிறது. அதை நல்ல தரத்துடன் உருவாக்கியிருக்கிறார்கள். காதல் கதைதான் என்றாலும் கேமில் அனிமேஷன் உருவங்களின் காதல் நம்மைக் கவர மறுக்கிறது. கிளைமாக்சில் அந்தக் காதலி யார் என்பதைக் காட்டும் போது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் உள்ளது.

ஆடல் பாடல்

இயக்கம் - நலன் குமாரசாமி
இசை - எட்வின் லூயிஸ் விஸ்வநாத்
நடிப்பு - விஜய் சேதுபதி, அதிதி பாலன்
ரேட்டிங் - 3.25/5

இந்த குட்டி ஸ்டோரியில் மூன்று யதார்த்தமான காதல் கதைகளைக் காட்டியவர்கள் ஒரு கள்ளக் காதலையும் காட்ட முடிவெடுத்தது கொஞ்சம் அதிர்ச்சிதான் என்றாலும் கள்ளக் காதல் பிரியவர்களுக்கு இந்தக் கதை சரியான பாடம் என்றே சொல்ல வேண்டும்.

விஜய் சேதுபதி, அதிதி இருவரும் கணவன், மனைவி. ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. தன்னுடைய முன்னாள் காதலி ஒருவருடன் விஜய் சேதுபதி அடிக்கடி மொபைலில் பேசுகிறார். ஒரு நாள் காதலி எண்ணில் மனைவியே தொடர்பு கொண்டு விஜய் சேதுபதிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். அதோடு திருமணத்திற்குப் பின் தானும் தன்னுடைய முன்னாள் காதலனுடன் தவறு செய்துவிட்டதாக மேலும் ஒரு அதிர்ச்சி கொடுக்கிறார். இருவருக்குள்ளும் ஊடல் வர பின்னர் என்ன ஆனது என்பதுதான் கிளைமாக்ஸ்.

விஜய் சேதுபதி, அதிதி இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள். அதிலும், தன்னுடைய காதலி போல பேசியது மனைவிதான் எனத் தெரிந்து விஜய் சேதுபதி அதிர்ச்சியடையும் காட்சிகளில் அவருடைய நடிப்பைப் பாராட்ட வார்தைகள் போதாது. கை, கால், உடல், முகம் என அனைத்துமே தவிக்கும் நடிப்பு இப்படித்தான் இருக்குமோ. கணவனைப் பற்றிய உண்மை தெரிந்ததும் அவர் மீது காட்டும் வெறுப்பு, பின் அவருக்குப் புகட்டும் பாடம் என அதிதி, ஆஹா சொல்ல வைக்கிறார்.

நான்கு குட்டிக் கதைகளில் இந்த ஆடல் பாடல் தான் டாப்.

குட்டி ஸ்டோரி - கொஞ்சம் குட், கொஞ்சம் பேட்

 

குட்டி ஸ்டோரி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

குட்டி ஸ்டோரி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓