கோல்ட் கேஸ் (மலையாளம்),Cold case

கோல்ட் கேஸ் (மலையாளம்) - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

நடிகர்கள் : பிரித்விராஜ், அதிதி பாலன், ஆத்மியா, லட்சுமி பிரியா சந்திரமௌலி, அனில் நெடுமங்காடு
ஒளிப்பதிவு : கிரிஷ் கங்காதரன்
இசை : பிரகாஷ் அலெக்ஸ்
இயக்கம் : தனு பாலக்
வெளியான தேதி : 30 ஜூன் 2021
நேரம் : 2 மணி 21 நிமிடங்கள்
ரேட்டிங் : 2.5/5

கிராமத்து குளம் ஒன்றில் கிடைக்கும் மண்டை ஓட்டில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. அந்த மண்டை ஓடு யாருடையது, அவரை கொலை செய்தது யார், மற்ற பாகங்கள் எங்கே என்கிற விசாரணையை துவக்குகிறார் ஏசிபி பிரித்விராஜ். கொலையானது ஒரு பெண் என கண்டுபிடித்தாலும், காணாமல் போனவர்கள் பற்றி கொடுக்கப்பட்ட புகார் பட்டியலில் கூட, அந்தப் பெண் பற்றி எந்த புகாரும் கிடைக்காததால் தடுமாறுகிறார் பிரித்விராஜ்.

இன்னொரு பக்கம் கணவனை விவாகரத்து செய்வதற்கு விண்ணப்பித்து விட்டு, தனது மகளுடன் தனியாக வீடு பார்த்து தங்குகிறார் சேனல் ஒன்றில் வேலை பார்க்கும் அதிதி பாலன். அந்த வீட்டிற்கு சென்றதிலிருந்து அமானுஷ்யமான விஷயங்கள் நடக்கிறது. ஆவிகளுடன் பேசுவதில் வல்லவரான சுசித்ரா பிள்ளையை வரவழைத்து பரிசோதனை செய்யும்போது, அந்த வீட்டில் உள்ள பிரிட்ஜ் ஒன்றில், இறந்துபோன பெண்ணின் ஆத்மா ஒன்று இருப்பதை கண்டுபிடிக்கிறார். அந்தப்பக்கம் பிரித்விராஜும் ஒருவழியாக கொலையுண்ட பெண் யார் என கண்டுபிடிக்கிறார்

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த இருவரும் கண்டுபிடிக்கும் பெண்ணின் பெயர் ஈவா மரியா என்பது தெரிய வருகிறது. அந்த ஆத்மா அதிதி பாலன் மூலமாக, ஏதோ ஒரு உதவியை கேட்பதற்காக அங்கே இருப்பதாக சுசித்ரா பிள்ளை கூற, யாரந்த ஈவா மரியா, அவர் எப்படி கொலை செய்யப்பட்டார், எதற்காக தன்னுடைய வீட்டில் அவருடைய ஆன்மா இருக்கிறது, தன்னிடம் என்ன உதவியை எதிர்பார்க்கிறது என புலனாய்வு செய்யும் பணியில் இறங்குகிறார் அதிதி பாலன்.

இன்னொரு பக்கம் பிரிதிவிராஜும் தனது போலீஸ் விசாரணை மூலம் ஈவா மரியா பற்றிய தகவல்களை சேகரிக்க துவங்குகிறார். ஒரு கட்டத்தில் ஈவா மரியா யார் என்பதையும் அவர் எதற்காக கொல்லப்பட்டார் என்பதையும் இருவரும் ஒருசேர கண்டுபிடிக்கின்றனர். ஆனால் யார் கொலை செய்தது என்கிற அதிர்ச்சி கலந்த சஸ்பென்ஸை கிளைமாக்ஸில் உடைக்கிறார் பிரித்விராஜ்.

மலையாள சினிமாவில் சமீபகாலமாக சீரியஸான கிரைம் திரில்லர் கதைகளே வருகின்றன என்று, கொஞ்ச நாளைக்கு முன்பு குறைபட்டுக் கொண்ட நடிகர் பிரித்விராஜ், அப்படி ஒரு படத்தில் தானே நடித்து இருப்பது தான் ஆச்சரியம். ஒருவேளை இந்த படத்தில் நடித்த பின்பு தான், அவருக்கு அந்த எண்ணம் தோன்றி இருக்குமோ என்னவோ ? மலையாள சினிமாவில் சுரேஷ்கோபிக்கு அடுத்தபடியாக போலீஸ் யூனிபார்ம் கச்சிதமாக பொருந்துவது பிரித்விராஜுக்கு தான் என்பது, இந்த படத்தில் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. ஆனாலும் இந்த படத்தில் அவருக்கு அதிரடி காட்டும் வேலை எல்லாம் எதுவும் இல்லை. விசாரணையும் துப்பு துலக்குதலும் மட்டுமே படம் முழுக்க அவர் செய்யும் வேலைகள். அதற்கு ஏற்றமாதிரி, சாகசங்கள் செய்து கண்டுபிடிக்க வேண்டிய அளவுக்கு கொலைகாரன் கதாபாத்திரமும் பெரிய வேலை எல்லாம் வைக்கவில்லை. கிட்டத்தட்ட பத்து நாள் கால்ஷீட்டில் பிரித்விராஜ் மொத்த படத்திலும் நடித்துக் கொடுத்து இருப்பார் என்பது, பார்க்கும்போது தெரிகிறது.

அதிதி பாலனுக்கு இது முதல் மலையாள படமாக வெளியாகியுள்ளது. ஜர்னலிஸ்ட் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கும் அதிதி பாலன், தன் வீட்டில் நிகழும் அமானுஷ்ய நிகழ்வுகளை பார்த்து அலறியடித்து ஓடாமல், அதை ஆராய்ச்சி செய்ய முயற்சிப்பது, இதுவரை பார்த்த ஹாரர் பட கதாநாயகிகளில் சற்றே புதிது. அதேபோல பிரித்விராஜ், அதிதி பாலன் இருவரும் சேர்ந்து வெறும் இரண்டே காட்சிகளில் மட்டுமே நடித்திருக்கிறார்கள்.

நீண்ட நாளைக்கு பிறகு மனம் கொத்தி பறவை ஆத்மியாவை இதில் பார்க்க முடிகிறது. காதல் வாழ்க்கையில் வெற்றியடைய முடியாது பெண்ணொருத்தி துரோகத்தால் உயிரிழக்கும் ஈவா மரியா கதாபாத்திரத்தில் மிகச்சரியாக தனது பங்களிப்பை செய்துள்ளார்.
சற்று வித்தியாசமான, அதே சமயம் துணிச்சலான கதாபாத்திரம் இருக்கிறதா, கூப்பிடு லட்சுமி பிரியாவை என்று சொல்கிற அளவுக்கு ஆரம்பத்தில் அவர் ஒரு சாதாரண பெண்ணாக வலம் வந்தாலும், கடைசி இருபது நிமிடம் அவரை மையப்படுத்தியே கதை நகர்வதால் கவனிக்க வைக்கிறார் லட்சுமி பிரியா.

அய்யப்பனும் கோஷியும் படத்தில் போலீஸ் உயரதிகாரியாக அசத்திய, சமீபத்தில் காலமான, அனில் நெடுமங்காடு, இந்த படத்தில் பிரித்விராஜ் கூடவே பயணித்தாலும் தனித்துவமாக சொல்லிக் கொள்ளும்படியான கதாபாத்திரம் இல்லை என்பது வருத்தமே. இது தவிர அமானுஷ்ய சக்தி இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் பார்வையற்ற சுசித்ரா பிள்ளை, எந்நேரமும் குடிப்பதற்கு காசு கேட்டு பிரிதிவிராஜை நச்சரித்தாலும், கதைக்கு தேவையான திருப்பத்தை கொடுக்கும் அலான்சியர் லே, உள்ளிட்ட பலரும் தங்களது வேலைகளை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

ஹாரர் பின்னணியிலும் துப்பறியும் பாணியிலும் படம் நகர்வதால், பின்னணி இசையில் தனக்குரிய பொறுப்பை சரியாக செய்திருக்கிறார் இசையமைப்பாளர் பிரகாஷ் அலெக்ஸ். படத்தின் ஒளிப்பதிவாளரான கிரிஷ் கங்காதரன், இந்தப்படத்தில் ஹாரர் மூடுக்கு நம்மை அழைத்துச் செல்வதுடன் கேரளாவின் இயற்கை அழகையும் கண்குளிர காட்டி இருப்பதற்காக அவரை பாராட்டியே ஆக வேண்டும்.

ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறியுள்ள தனு பாலக், வெற்றிக்கு உத்தரவாதம் உள்ள ஹாரர் கலந்த இன்வெஸ்டிகேஷன் கதையை கையில் எடுத்திருப்பது சரிதான் என்றாலும், இரண்டு ஏரியாக்களுக்குமே தேவைப்படும் திகில் மற்றும் திருப்பங்களை, சரியான அளவில் கையாளாமல் விட்டது படத்தின் மிகப்பெரிய குறை. அதேபோல கிட்டத்தட்ட ஆறு ஏழு படங்களில் நடித்து வரும் பிரித்விராஜ், திடீரென இந்த கதையில் இம்ப்ரஸ் ஆகி, உடனே ஒப்புக் கொண்டு நடித்து, மற்ற படங்களுக்கு முன்னதாக ரிலீஸ் செய்யும் அளவிற்கு, இந்த படம் அப்படி ரசிகர்களை ஈர்க்கும் தனித்துவமான படமும் அல்ல. ஆனால் எந்த விதத்திலும் தொய்வில்லாமல் போரடிக்காமல் அதேசமயம் யூகிக்க கூடிய சில திருப்பங்களுடன் ஓரளவுக்கு பரபரப்பாக படம் நகர்வதால், இரண்டரை மணி நேரம் பொழுது போக்குவதற்கான உத்தரவாதம் உள்ள படம் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.

கோல்ட் கேஸ் : குளிரவும் இல்லை.. வியர்க்கவும் இல்லை..

 

பட குழுவினர்

கோல்ட் கேஸ் (மலையாளம்)

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

பிருத்விராஜ்

மலையாளத்தில் முன்னணி நடிகராக திகழும் பிருத்விராஜ், பின்னணி பாடகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். 2002ம் ஆண்டு வெளியான நந்தனம் படத்தில் தான் பிருத்விராஜ், டைரக்டர் ரஞ்சித்தால் அறிமுகப்படுத்தப்பட்டார். இருப்பினும், அதற்கு பின் அவர் நடித்த நட்த்திர கண்ணுல ராஜகுமாரன் அவனுந்தோரு ராஜகுமாரி படம் தான் முதலில் வெளியானது. தமிழில், கனா கண்டேன் படத்தின் மூலம் அறிமுகமான பிருத்விராஜ் தொடர்ந்து, பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளிதிரை, நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருதை இரண்டு முறை பெற்றுள்ள பிருத்விராஜ், 2011ம் ஆண்டு இந்தியன் ருபி படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். இது தவிர பல டிவி மற்றும் பத்திரிக்கை விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

மேலும் விமர்சனம் ↓