கருமேகங்கள் கலைகின்றன
விமர்சனம்
தயாரிப்பு - ரியாடா மீடியா
இயக்கம் - தங்கர்பச்சான்
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு - பாரதிராஜா, யோகிபாபு, அதிதிபாலன், கவுதம் மேனன்
வெளியான தேதி - 1 செப்டம்பர் 2023
நேரம் - 2 மணி நேரம் 18 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
தங்கர்பச்சான் இயக்கத்தில் 2002ல் வெளிவந்த 'அழகி' படத்தின் சாயலுடன் வந்திருக்கும் படம் இது. பழைய காதல் ஒன்றால் கதையின் நாயகனுக்கு வரும் பிரச்னை என 'அழகி' படத்திற்கும், இந்த 'கருமேகங்கள் கலைகின்றன' படத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இந்தப் படத்தில் கூடவே இன்னொரு கிளைக் கதையையும் சேர்த்து கொஞ்சம் வித்தியாசப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
ஓய்வு பெற்ற நேர்மையான நீதிபதி பாரதிராஜா. ஒரு மகன், ஒரு மகள் வெளிநாடுகளில் வசிக்க இன்னொரு மகன் வக்கீலான கவுதம் மேனனுடன் வசிக்கிறார். தனது 75வது பிறந்தநாளை பாரதிராஜா கொண்டாடி முடித்திருக்கும் சூழ்நிலையில் 12 வருடங்கள் பழமையான கடிதம் ஒன்று அவரைத் தேடி வருகிறது. அந்தக் கடிதத்தை அவருடைய முன்னாள் காதலி எழுதியிருக்கிறார். அவர்களுக்கு ஒரு மகள் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மகளைத் தேடி வீட்டில் சொல்லாமல் கிளம்புகிறார் பாரதிராஜா. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இந்தக் கதையை மட்டும் மையக் கதையாக வைக்காமல், அதே போன்றதொரு உறவுச் சிக்கலில் மற்றுமொரு கிளைக் கதையையும் படத்தில் இணைத்திருக்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு ஆதரவு கொடுத்து தன் வீட்டில் தங்க வைக்கிறார் யோகிபாபு. அந்தப் பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்க, அந்தக் குழந்தை யோகிபாபுவை அப்பா என அழைத்து பாசமாக இருக்கிறது. அந்தக் குழந்தை ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் விடப்பட, யோகிபாபுவுக்கும், அந்தப் பெண் குழந்தைக்கும் இடையிலான பாசம் மற்றொரு கதையாக படத்தில் இடம் பெறுகிறது. பாரதிராஜா கதைக்கும், யோகிபாபு கதைக்கும் படத்தில் ஒரு முடிச்சையும் போட்டிருக்கிறார் இயக்குனர்.
வழக்கமான கதாநாயகர்களை வைத்து படத்தை இயக்காமல் கதைக்குப் பொருத்தமாக கதையின் நாயகர்களாக பாரதிராஜா, யோகிபாபு ஆகியோரைத் தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் தங்கர்பச்சான். 75 வயதுக்குரிய பொறுமை, இயலாமை என அந்தக் கதாபாத்திரத்தில் தவிப்புடன் நடித்திருக்கிறார் பாரதிராஜா. பழைய காதலி மற்றும் மகளைத் தேடிப் போவதில் அந்தத் தவிப்பான நடிப்பு நம்மை தடுமாற வைக்கிறது.
நகைச்சுவை இல்லாத கதையின் நாயகனாக பரோட்டா மாஸ்டராக குணச்சித்திர நடிப்பில் அசத்தியுள்ளார் யோகிபாபு. தனக்கு நகைச்சுவை மட்டுமல்லாது மற்ற உணர்வுகளும் இயல்பாக வரும் என இந்தப் படத்தில் மீண்டும் நிரூபித்திருக்கிறார். அவருக்கும், அந்தப் பெண் குழந்தைக்கும் இடையிலான பாசப் பிணைப்பு நம்மை கண் கலங்க வைக்கிறது.
பாரதிராஜாவின் மகனாக கவுதம் மேனன். அப்பா நேர்மையான நீதிபதியாக இருந்தாலும் பணத்திற்காக எந்த வழக்கிலும் ஆஜராகும் ஒரு வக்கீலாக கவுதம் மேனன், பாரதிராஜா காதலியின் மகளாக 'அருவி' அதிதி பாலன், யோகிபாபு ஆதரவு தரும் பெண்ணாக மஹானா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ராமேஸ்வரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை கதைக்குள் ஒரு கதாபாத்திரமாக காட்டியிருக்கிறது ஏகாம்பரம் ஒளிப்பதிவு. ஜிவி பிரகாஷ்குமார் பின்னணி இசை உணர்வுபூர்வமான காட்சிகளை இன்னும் உயிரோட்டமாக்குகிறது.
இன்றைய 2023ல் தமிழ் சினிமா எப்படியெப்படியோ மாறிவிட்டது. இருந்தாலும் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளாமல் இப்படித்தான் படமெடுப்பேன் என தனது பாணியில் படமெடுத்திருக்கிறார் இயக்குனர் தங்கர் பச்சான்.
கருமேகங்கள் கலைகின்றன - கண்ணீராய்…
கருமேகங்கள் கலைகின்றன தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
கருமேகங்கள் கலைகின்றன
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்