3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - பேஷன் ஸ்டுடியோஸ், தி ரூட்
இயக்கம் - நித்திலன் சாமிநாதன்
இசை - அஜனீஸ் லோக்நாத்
நடிப்பு - விஜய் சேதுபதி, நட்டி, அனுராக் காஷ்யப்
வெளியான தேதி - 14 ஜுன் 2024
நேரம் - 2 மணி நேரம் 22 நிமிடம்
ரேட்டிங் - 3/5

தமிழ் சினிமாவில் நாயகன் பழிவாங்கும் எத்தனையோ கதைகளைப் பார்த்திருக்கிறோம். அந்த விதத்தில் இதுவும் ஒரு பழிவாங்கும் கதைதான். ஆனால், திரைக்கதையை அமைத்த விதத்தில்தான் இந்தப் படம் நம்மைப் பெரிதும் கவர்கிறது. அதற்காக இயக்குனரைத் தனியாகப் பாராட்டியாக வேண்டும்.

சென்னை, கேகே நகர் பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் விஜய் சேதுபதி. மனைவியை இழந்தவருக்கு ஒரே மகள். விபத்தில் மனைவியை இழந்த போது மகளைக் காப்பாற்றிய ஒரு குப்பைத் தொட்டியை வீட்டின் பூஜை அறையில் வைத்து கும்பிடுபவர்கள். அந்த குப்பைத் தொட்டியை சிலர் திருடிச் சென்றுவிட்டனர். அதைக் கண்டுபிடித்துத் தருமாறு விஜய்சேதுபதி காவல் நிலையத்தில் சென்று புகார் தருகிறார். இதெல்லாம் ஒரு புகாரா என இன்ஸ்பெக்டர் நட்டி அவரை விரட்டுகிறார். ஆனால், ஐந்து லட்சம் லஞ்சமாகத் தருகிறேன். அதைக் கண்டுபிடியுங்கள் என்கிறார். நட்டி தலைமையில் ஒரு குழு அந்த குப்பைத் தொட்டியைக் கண்டுபிடிக்கும் வேலையில் இறங்குகிறார்கள். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.

ஒரு குப்பைத் தொட்டிக்காக ஐந்து லட்சம் லஞ்சம், அதைக் கண்டுபிடிக்க ஒரு குழு என ஆச்சரியப்படலாம். ஆனால், அதில்தான் படத்தின் கதை அடங்கியிருக்கிறது. அந்த குப்பைத் தொட்டியின் பின்னால் ஒரு முக்கிய சம்பவம் ஒளிந்திருக்கிறது. அதை சொல்லிவிட்டால் படத்தின் சுவாரசியம் முழுவதும் குறைந்துவிடும். அந்த சம்பவம் என்னவென்பதை படத்தின் கிளைமாக்சில் பரபரப்பாகச் சொல்லியிருக்கிறார்கள்.

தொடர்ந்து தோல்விகளைக் கொடுத்து வந்த விஜய் சேதுபதிக்கு இந்தப் படம் ஒரு வெற்றியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். மகாராஜா என்று அவர் கதாபாத்திரத்திற்குப் பெயர் வைத்துவிட்டு அவரை ஒரு 'மாக்கான்' போல காட்டியிருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. பிளாஷ்பேக்கில் மிகவும் இயல்பாக இருக்கிறார். ஆனால், நடுத்தர வயது வந்தவுடன் அப்படியான தோற்றம் ஏன் ?. சாதாரண கதாபாத்திரங்களிலேயே தெறிக்கவிடும் விஜய் சேதுபதி ஒரு மார்க்கமான ஆள் என்ற கதாபாத்திரத்தில் எப்படி நடிப்பார் என்பது அனைவருக்கும் தெரியும்.

படத்தில் கதாநாயகி என்று யாரும் கிடையாது. விஜய் சேதுபதி மகள் படிக்கும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக மம்தா மோகன்தாஸ். இவரது கதாபாத்திரம் ஏதோ செய்யப் போகிறது என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே. விஜய் சேதுபதியின் மனைவியாக ஒரே ஒரு காட்சியில் திவ்யபாரதி.

இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நட்டி, சப் இன்ஸ்பெக்டராக அருள்தாஸ், காவலராக முனிஷ்காந்த் ஆகியோர் அந்த 'குப்பைத் தொட்டியை'த் தேடும் விசாரணைக் குழுவினர். அவர்களுக்கு உதவும் இன்பார்மர் ஆக சிங்கம்புலி. 'பாய்ஸ்' படத்தில் ஐந்து கதாநாயகர்களில் ஒருவராக நடித்த மணிகண்டன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கிறார்.

பகலில் எலக்ட்ரிக்கல் கடை நடத்திக் கொண்டு இரவில் திருட்டு வேலைகளைச் செய்பவராக அனுராக் காஷ்யப். அவரது மனைவியாக அபிராமி. விஜய் சேதுபதி கடையில் வேலை பார்ப்பவராக பாரதிராஜா, ஓரிரு காட்சிகளில் வந்து போகிறார்.

படத்தில் நிறைய கதாபாத்திரங்கள், ஒவ்வொருவரையும் திரைக்கதையில் கொஞ்சம் கொஞ்சமாகப் பயன்படுத்தியிருந்தாலும் முக்கியமாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை, தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு ஆகியவை கச்சிதமாக உள்ளன. படத்தின் திரைக்கதையைப் புரிந்து தெளிவாக படத்தொகுப்பு செய்திருக்கிறார் எடிட்டர் பிலோமின்ராஜ்.

நிகழ்காலத்தையும், கடந்த காலத்தையும் ஒரு சேர அமைத்த திரைக்கதை. பி அண்ட் சி சென்டர்களில் இந்த திரைக்கதை யுத்தி ரசிகர்களுக்குப் புரியுமா என்பது சந்தேகம்தான். படத்தில் சில பல கேள்விகள் ஆங்காங்கே எழுகின்றன. இருப்பினும் படத்தின் விறுவிறுப்பில் அவை கடந்து போகிறது. ஆரம்ப அரை மணி நேரக் காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன. சில நேரங்களில் இது சீரியஸான படமா அல்லது சிரிக்க வைக்கும் படமா என்ற சந்தேகமும் வந்து போகிறது. வன்முறைக் காட்சிகளும், படத்தின் திருடர்கள் செய்யும் அந்தத் துன்புறுத்தல் காட்சிகளும் குடும்பத்துடன் பார்க்க முடியாதவை.

மகாராஜா - ராஜா

 

பட குழுவினர்

மகாராஜா(2024)

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓