3.5

விமர்சனம்

Advertisement

பாரதிராஜா - விதார்த் அப்பா மகனாக நடிக்க, ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் தயாரிப்பில் நித்திலன் இயக்கத்தில், வெளிவந்திருக்கும் படம் தான் "குரங்கு பொம்மை".

தஞ்சாவூரில் நன்றி கடனுக்காகவும், நட்புக்காகவும், சேராத இடம் சேர்ந்து குறைந்த சம்பாத்தியம் செய்து வரும் அப்பா பாரதிராஜா மீது வருத்தம் கொண்டு சென்னைக்கு கிளம்பி, அங்கு ஆக்டிங் டிரைவராக பிழைப்பு நடத்துகிறார் விதார்த். இந்நிலையில் செஞ்சோற்று கடன் தீர்க்க சேரத இடம் சேர்ந்து சிலை கடத்த துணை போகும் பாரதிராஜாவுக்கு நேர்ந்த கதியால் பொங்கி எழும் விதார்த், பழிக்கு பழியாக செய்யும் வீரியமான காரியம் தான் "குரங்கு பொம்மை" படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம். இது கூடவே நாயகரின், நாயகியுடனான காதலையும் கலந்து கட்டி "குரங்கு பொம்மை"-யை ஜனரஞ்சக பொம்மையாக்கி சபாஷ் வாங்கி விடுகின்றனர் ஒட்டு மொத்த படக்குழுவினரும்.

வித்தியாசமான அதே நேரம் மிகவும் யதார்த்தமான வேடத்தில் விதார்த், வெளுத்துகட்டியிருக்கிறார்.

தஞ்சை பக்கத்து நடுத்தர வர்க்கத்து அழகிய இளம் பெண்ணாக டெல்னா டேவிஸ், அப்பாவிற்கும் அடங்கிப்போய், அதே நேரம் ஆம்படையான் ஆகப் போகிறவரையும் அனுசரித்து ரசிகனை பெரிதும் ஈர்க்கிறார்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா, தான் நடிப்பிலும் இமயம் என்பதை நிரூபிக்க முயற்சித்து, அதில் ஒரு மாதிரி வெற்றியும் பெற்றிருக்கிறார். அது மட்டுமின்றி தான் "என் உயிர்த் தோழன்" படத்தில் அன்று அறிமுகம் செய்த ரமாவுடன் இன்று ஜோடி போட்டு மிரட்டியிருக்கிறார். ரமாவும் இரண்டொரு சீன்களே வந்தாலும் இயக்குனர் இமயத்திற்கு ஈடு கொடுத்திருக்கிறார்.

இவர்கள் எல்லோரையும் காட்டிலும் செய்திகள் வாசித்தப்படி, சிலை கடத்தும் கருப்பைய மகன் மரக்கடை ஏகாம்பரமாக, தஞ்சை தாதாவாக பிரபல தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், நெஞ்சை அள்ளுகிறார்.

பாரதிராஜாவையே அறுத்துப் போட்டு பின் விதார்த்தால் அறுபடும் வில்லன் குமரவேல், நாயகியின் அப்பாவாக பாலா சிங், இரண்டொரு சீன்களே வந்து போகும் சேட்டின் டிரைவராக வரும் இயக்குனர் நாராயணமூர்த்தி, கஞ்சா கருப்பு, மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி, ராஜா, கல்கி... உள்ளிட்ட அனைவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

மடோன் அஸ்வினின் நக்கல், நையாண்டி வசனங்கள், வீரமணியின் கலை இயக்கத்தில் யதார்த்தமான காட்சி அரங்குகள், அபினவ் சுந்தர் நாயக்கின் படத்தொகுப்பில் லேக் இல்லாத காட்சி ஓட்டங்கள், என்.எஸ். உதயகுமாரின் ஒளிப்பதிவில் ஒவியப்பதிவான காட்சி பதிவுகள் உள்ளிட்ட ப்ளல் பாயின்ட்டுகள் படத்திற்கு மேலும் பலம் சேர்த்திருக்கின்றது.

பி.அஜனிஷ் லோக்நாத்தின் இசையில், "ஆசைப்பட்ட பெண்ணே..." உள்ளிட்ட பாடல்கள் சுப ராகம்.

"கையில் கட்டு போட்டுட்டு ஏமாத்துறான்... காசு போடுற நீ...." எனும் கஸ்டமரிடம், "இருக்கட்டுமே..., இது போல ஆளுங்க இதுக்கு மேலேயே உழைச்சா சாப்பிட முடியும்? இது மாதிரி ஆளுங்க கிட்ட ஏமாறுவதே ஒரு சுகம் சார்..." என விதார்த் கூறும் காட்சி ஒன்று போதும் இயக்குனர் நித்திலனின் திறமையான திரைக்கதை, இயக்கத்திற்கு கட்டியம் கூற! எத்தனை அழகாக, "தீயோர் சேர்க்கை தீமையில் முடியும்..." எனும் கருத்தை கலர்புல்லாக காட்சிபடுத்தி கவனம் ஈர்த்திருக்கிறார் மனிதர்.

ஆக மொத்தத்தில், "குரங்கு பொம்மை - குட், வெரி குட் திரைப்படமே!"

 

பட குழுவினர்

குரங்கு பொம்மை

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓