நடிகர்கள் : டொவினோ தாமஸ், மம்தா மோகன்தாஸ், ரெபா மோனிகா ஜான், சைஜு குறூப், ரஞ்சித் பணிக்கர், பிரதாப் போத்தன் மற்றும் பலர்
இசை : ஜேக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு : அகில் ஜார்ஜ்
கதை, டைரக்சன் : அகில் பால் - அனாஸ் கான்
கடந்த மாதம் தான் மலையாளத்தில் சீரியல் கில்லர் படம் ஒன்று வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் மீண்டுமொரு சீரியல் கில்லர் படமாக வெளியாகியுள்ளது இந்த பாரன்சிக்.. அதேசமயம் முற்றிலும் புதிய களத்தில்.. புதிய கோணத்தில்..
நகரில் அவ்வப்போது ஏழெட்டு வயதுக்குட்பட்ட சிறுமிகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இதை கண்டுபிடிக்கும் பொறுப்பு போலீஸ் அதிகாரியான மம்தா மோகன்தாஸ் வசம் ஒப்படைக்கப்படுகிறது. அவருக்கு உதவி செய்யும் பாரன்சிக் குழுவில் டொவினோ தாமஸ் மற்றும் ரெபா மோனிகா ஜான் இருவரும் இடம் பெறுகின்றனர். ஒவ்வொரு கொலையிலும் கிடைக்கும் க்ளூவை வைத்து கொலையாளி ஒரு இளம் வயது சிறுவன் தான் என கண்டுபிடிக்கிறார் டொவினோ தாமஸ். ஆரம்பத்தில் தனது ஈகோ காரணமாக மம்தா மோகன்தாஸ் அதை நம்ப மறுத்தாலும், அடுத்தடுத்து நடக்கும் கொலைகள் மூலம் அதை உறுதி செய்கிறார்.
ஒருகட்டத்தில் அப்படி கொலை செய்யும் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை கைது செய்து சிறையில் அடைக்க, அவனோ மறுநாளே தற்கொலை செய்துகொண்டு இறந்து போகிறான். இத்தோடு பிரச்சினை முடிந்தது என்று நினைக்கும் வேளையில் மீண்டும் ஒரு குழந்தை கடத்தல் சம்பவம் அரங்கேறுகிறது.. இதனால் போலீசார் அதிர்ச்சியாக, இந்த வழக்கில் தனக்கு கிடைத்த ஒவ்வொரு தடயங்களையும் மிக நுணுக்கமாக பாரன்சிக் லேபில் ஆய்வு செய்கிறார் டொவினோ தாமஸ்.
எதிர்பாராதவிதமாக அதில் கிடைக்கும் ஒரு சிறிய க்ளூவை வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக இந்த வழக்கில் நூல் பிடித்த மாதிரி முன்னேறும் டொவினோ தாமஸுக்கு பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரியவருகின்றன.. உண்மையில் இந்த கொலைகளை செய்தது யார்..? ஈவிரக்கம் இல்லாமல் குழந்தைகளை மட்டும் கொலை செய்வதற்கான காரணம் என்ன..? என்பதற்கு நாம் யாருமே யூகிக்க முடியாத வகையில் விடை சொல்கிறது மீதிக்கதை.
இதுபோன்ற சீரியல் கில்லர் கதைகளை படமாக்கும்போது தொடர் கொலைகளுக்கான காரணம் வித்தியாசமாக இருக்க வேண்டும். நாம் யூகிக்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும். அதேசமயம் கொலைகாரன் இவன்தான் என கணிக்க முடியாமல் இருக்க வேண்டும். கடைசிவரை அவனை கண்டுபிடிக்க முடியாமல் அனைவரும் தடுமாற வேண்டும்.. இத்தனை அம்சங்களும் இருந்தால் நிச்சயமாக அந்த சைக்கோ கில்லர் படம் வெற்றிப்படமாக அமையும்.. இந்த அனைத்து அம்சங்களும் இந்த பாரன்சிக் படத்தில் கச்சிதமாக பொருந்தி இந்த படத்தை ஒரு வெற்றிப் படமாகி உள்ளது என்றால் அது மிகையல்ல.
பாரன்சிக் அதிகாரியாக முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் அதேசமயம் கதாநாயகிக்கு ஒருபடி கீழாக தனது கேரக்டர் இருந்தாலும் படம் முழுதும் அழகாக அண்டர்ப்ளே செய்து ஜொலிக்கிறார் ஹீரோ டொவினோ தாமஸ்.. ஒரு கொலையை கண்டுபிடிக்க பாரன்சிக் அதிகாரிகளின் உதவி எவ்வளவு அவசியம் என்பதையும், அவர்கள் கூறும் கருத்துக்களை ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது என்பதையும் டொவினோ தாமஸ் கதாபாத்திரம் மூலமாக அழுத்தந்திருத்தமாக இயக்குனர் பதிய வைத்திருக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் மம்தா மோகன்தாஸ் பொருத்தமான கதாபாத்திரம்தான். டொவினோ தாமஸ் குடும்ப பின்னணியில் நிகழ்ந்த பிரச்சினை காரணமாக அவரிடம் ஈகோவுடனேயே நடந்து கொள்வது, பின்னர் ஒரு கட்டத்தில் அவரது பாதைதான் சரியானது என உணர்ந்து கொண்டு அமைதியாவது என ஒரு சராசரி போலீஸ் அதிகாரியை பிரதிபலித்திருக்கிறார்.
படத்திற்கு பக்கபலமாக ரஞ்சி பணிக்கர், சைஜு குறூப், டொவினோ தாமஸின் உதவியாளராக வரும் ரெபா மோனிகா ஜான் என அனைவருமே படத்தின் விறுவிறுப்புக்கேற்ற கதை மாந்தர்களாக அழகாக நகர்கிறார்கள் த்ரில்லர் படங்களில் ஸ்பீடு பிரேக்கர்களாக இருக்கும் காதல் காட்சிகள், பாடல்கள் என எதையுமே திணிக்காமல் விறுவிறுப்பு ஒன்றை மட்டுமே கணக்கில் கொண்டு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் இயக்குனர்கள் அகில் பால் மற்றும் அனாஸ் கான் இருவரும்.
சிறுவர்கள் சைக்கோ கொலைகாரர்களாக மாறுவார்களா என்ன என்கிற கேள்விக்கு அதிர்ச்சி கலந்த, அதேசமயம் நிஜத்தில் நடந்த விஷயங்களையே நமக்கு பதிலாக கொடுத்திருக்கிறார்கள். சிறுவயதில் குழந்தைகளை அணுகும் முறையில் பெற்றோர்கள் காட்டும் கடினத்தன்மை எந்த அளவிற்கு அவர்களை மாற்றி விடுகிறது என்பதன் பின்னணியில் தான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல என்னதான் மனநலம் பாதிக்கப்பட்டு சைக்கோவாக இருந்து ஒருவர் திருந்தினாலும் மீண்டும் அவரை அதே பழைய நிலைக்கு திரும்புவதற்கு ஒரு சின்ன நிகழ்வு ஒன்று போதும் என்று இன்னொரு அதிர்ச்சிகரமான தகவலையும் இந்த படத்தில் கூறியுள்ளார்கள் இந்த இரட்டை இயக்குனர்கள்.
திரில்லர் படம் என்பதாலேயே பின்னணி இசையில் தடதடக்க வைத்திருக்கும் இயக்குனர் ஜேக்ஸ் பிஜாய் பல நேரங்களில் நிசப்தமும் மிகச்சிறந்த பின்னணி இசைதான் என்பதை உணராமல் இருக்கிறார் என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவில் படம் முழுக்க ஒரு புதிய கலர் டோனில் காட்சிகளை படமாக்கி அதன்மூலம் ஒரு புதிய அனுபவத்தை நமக்கு தருகிறார்.
படத்தின் மைனஸ் பாயிண்ட் எனப் பார்த்தால் இந்த படத்திலும் தங்கள் வசதிக்கு ஏற்ப சிசிடிவி பதிவு காட்சிகளை அவ்வப்போது மறந்து விடுகிறார்கள்.. அதேபோல கிளைமாக்ஸில் கொலைகாரனை கண்டுபிடித்து விட்ட டொவினோ தாமஸ், அவனுடன் கார் ஒட்டியபடியே உண்மைகளை வெளிப்படுத்துவது அலட்சியமாகவே யோசிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். மற்றபடி படம் ஆரம்பித்ததிலிருந்து இறுதிவரை படம் பார்க்கும் ரசிகனை வேறு எந்த யோசனைக்கும் போகவிடாமல் நகம் கடிக்க வைத்து இருக்கையிலேயே கட்டிப்போட்டு விடுகிறது..
மொத்தத்தில் இந்த பாரன்சிக் படம் திரில்லர் பிரியர்களுக்கு அருமையான விருந்து.