பேராண்மை தன்ஷிகா கதாநாயகியாக நடித்து வௌிவந்திருக்கும் திரைப்படம் தான் திறந்திடு சீசே! வீரவன் ஸ்டாலின், நாராயண் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்து வௌிவந்திருக்கும் திறந்திடு சீசே கதையும் களமும் கொஞ்சம் வித்தியாசமானது. அந்த வித்தியாசமே நிரம்ப விவகாரமாக தெரிவது தான் இப்படத்தின் பலம், பலவீனம் எனலாம்!
கதைப்படி, சென்னை, ஈசிஆர் சாலையில் ஒரு இரவுநேர டிஸ்கொத்தே பாரில், ஃபுல் மப்பில் ஒரு இளம்பெண், நள்ளிரவில் எல்லோரும் கிளம்பி போன பின் கிளாசும் கையுமாக அந்த நட்சத்திர பாரின் பேரர்கள் இருவரிடம், உங்கள் இருவரில் யாரோ ஒருவரால் சில நிமிடங்களுக்கு முன் நான் கற்பழிக்கப்பட்டிருக்கிறேன், என்னை கற்பழித்தது யார்.? என்று இருவரில் ஒருவர் உண்மையை ஒப்புக் கொண்டீர்கள் என்றால் ஒருவர் உயிர் தப்பிக்கலாம், இல்லையென்றால் என் துப்பாக்கி ரவைகளுக்கு இருவரும் பலியாக நேரிடும், ஆதலால் போதையில் இருந்த போது என்னை ரேப் செய்த பேரர் யார்... உண்மையை சொல்லுங்கள்...? என துப்பாக்கியும், கையுமாக நாயகர்கள் வீரவன் ஸ்டாலினையும், நாராயணனையும் மிரட்டுகிறார். அந்த இளம் பெண் வேறு யாருமல்ல... சாட்ச்சாத் திறந்திடு சீசே நாயகி தன்ஷிகாவே தான்!
நாயகி தன்ஷிகாவின் கேள்விக்கு பதில் கிடைத்ததா.?, இருவரில் ஒருவராவது உயிர் பிழைத்தனரா.? அல்லது இருவருமே தன்ஷிகாவின் துப்பாக்கி தோட்டாக்களுக்கு பலியானார்களா...? என்பதையும், அதனூடே சில மொடா குடிகாரர்கள் திருந்தும்படியான நல்ல மெசேஜ்ஜையும் க்ளைமாக்ஸில் வைத்து சஸ்பென்ஸ், திகில் திருப்பங்களுடன் திறந்திடு சீசே படத்தை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் தர முயற்சித்திருக்கிறார் புதுமுக இயக்குநர் நிமேஷ் வர்ஷன். அந்த வித்தியாசமும், விறுவிறுப்பும் சற்றே கொச்சையாகவும், கொடூரமாகவும் இச்சையை தூண்டும் விதத்தில் படமாக்கப்பட்டிருப்பது சற்றே முகம் சுளிக்க வைக்கிறது.
கதாநாயகி சார்மியாக தன்ஷிகா குடித்துவிட்டு இரவுநேர கலாட்டாக்கள் பண்ணும் ஹைகிளாஸ் பெண்ணாக, கையில் மது கோப்பையுடனும், துப்பாக்கியுடனும் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.
தன்ஷிகா மாதிரியே நாயகர்கள் ஜான்-ஆக வரும் வீரவன் ஸ்டாலின், உசேனாக வரும் நாராயண், வீரவனின் காதல் மனைவி திவ்யாவாக வரும் அஞ்சனா கீர்த்தி, மாமா - ஈஸ்வர் பாபு, போலீஸ் கான்ஸ்டபிள் வசனகர்த்தா ஈ.ராமதாஸ், பெண் மனநல மருத்துவராக வரும் உஜ்ஜய்னி... உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். ஆனாலும், தன்ஷிகா ரேப் செய்யப்பட்ட சம்பவம் பொய் என்பதும், அந்த சம்பவத்தை சுற்றி அவர்கள் அனைவரும் போடுவது நாடகம் என்பதும் க்ளைமாக்ஸில் தெரிந்ததும் படம் புஸ் என்று ஆகிவிடுகிறது.
கணேஷ் ராகவேந்திராவின் இசை, ஆர்.குளஞ்சி குமாரின் ஔிப்பதிவு, வி.விஜய்யின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயின்ட்டுகள், புதுமுக இயக்குநர் நிமேஷ் வர்ஷனின் இயக்கத்திற்கு என்னதான் பக்கபலமாக இருந்தாலும், அலிபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் வரும் அண்டாகா ஹசம் அபுகா ஹசம் - திறந்திடு சீசே... வசனம் மட்டும் ரசிகர்களை கவர்ந்திழுத்த அளவிற்கு கூட இல்லாதது, இழுக்காதது ஏமாற்றம்!
மொத்தத்தில், திறந்திடு சீசே - க்ளைமாக்சில், குடி குடியை கெடுக்கும் மெசேஜ்க்காகத்தான் இத்தனையும் எனும் அளவில் முடிவது, திறப்பது... தமிழ் சினிமா ரசிகனுக்கு புஸ்ஸே...!!