மெட்ராஸ் கலையரசன் -சாய்தன்ஷிகா ஜோடி நடிக்க, விக்கி ஆனந்த் இயக்கத்தில் ,வையம் மீடியா வி. பி .விஜி வழங்க , கற்பனையை நிஜம் என நம்பும் ஷி ஸோ பெர்னியா எனும் மனப்பிறழ்வு நோயை மையக்கருவாகக் கொண்டு வெளி வந்திருக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் தான் "உரு."
திகில் கதை எழுத்தாளரான கதாநாயகர் ஜீவன் எனும் கலையரசன், ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் நாவல் எழுத இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை ஏரியாவுக்கு , வருகிறார். வந்த இடத்தில் ஒரு மர்ம முகமூடி மனிதன் அவரைத் தாக்கி தூக்குகிறான். அதில், ஜீவன் - கலையரசன் நிலை சஸ்பென்ஸாக ஜீவனைத் தேடி மேகமலை வரும் அவரது மனைவி ஜென்னி - சாய் தன்ஷிகாவும் அந்த மர்ம முகமூடி மனிதனால், படு பயங்கரமாக பயமுறுத்தப்படுகிறார். மர்ம முகமூடி மனிதனிடமிருந்து ஜென்னி - சாய் தன்ஷிகா, தப்பி பிழைத்தாரா? ஜீவன் - கலையரசன் என்ன ஆனார்..? என்பது உள்ளிட்ட வினாக்களுக்கு, ஒரு அதிர்ச்சி உண்மை சம்பவம் விடையாக விரிகிறது. அந்த சம்பவம் என்ன? என்பது தான் "உரு" படத்தின் மையக்கருவும் மீதிக்கதையும்.
திகில் கதை எழுத்தாளராக, சஸ்பென்ஸ் நாவல் எழுத தனிமை வேண்டிமேகமலை போய் திகிலில் சிக்கும் இப்படக்கதையின் நாயகர் ஜீவனாக, கலையரசன் தன் கேரக்டரின் வெயிட்டையும், வீரியத்தையும் உணர்ந்து நடிக்க முயற்சித்து அதில் பாதி வெற்றியும் பெற்றிருக்கிறார்.
கதாநாயகி சாய் தன்ஷிகா, கலையரசனின் காதல் மனைவி ஜென்னியாக, கதைக்கேற்ற பல தரப்பட்ட பாவங்களாலும் அழகிய உடல் மொழியாலும், ரசிகனை சீட்டோடு கட்டிப் போட்டுவிடு கிறார். பேஷ் , பேஷ்!
காட்டிலாக்கா அதிகாரி ஜோசப்பாக வரும் மைம் கோபி உள்ளிட்ட பிற நட்சத்திரங்களும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர்.
ஷான் லோகேஷின் படத்தொகுப்பு பலே தொகுப்பு இல்லை என்றாலும் பெரிய பழுதில் லா, தொகுப்பு என்பது ஆறுதல். பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவில் பசுமை நிரம்பிய பச்சை பசேல் காடுகளும் எழில் கொஞ்சும் மலை அருவிகளும் கண்களுக்கு பெருங் குளிர்ச்சி. மலைப் பகுதியில் உள்ள ஒரு வீடும் அதன் சுற்றுப்புறங்களும் என்னும் கதைக்களத்தில் ஆர்ட் டைரக்டர் ஆண்டனியின் கலை இயக்க உதவியடன் வீட்டின் உள்புற காட்சியமைப்பிலும் கலர்புல்லாகவும் கலைநயமாகவும் லைட்டிங் செய்து மிரட்டலாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் என்பது இப்படத்திற்கு கூடுதல் ப்ளஸ்.
இளம் இசையமைப்பாளர் ஜோஹனின் இசையில் மிரட்டல் பின்னணி இசை இப்படத்திற்கும் சஸ்பென்ஸ், த்ரில்லர் கதைக்கும், கூடுதல் மெருகூட்டியிருக்கிறதென்றால் அது, மிகையல்ல!
இயக்குநர் விக்கி ஆனந்தின் எழுத்து, இயக்கத்தில், இப்படத்தின் பிராதான கதாபாத்திரம் "ஷிஸோ பெர்னியா" எனும் மனப்பிறழ் - மனப் பிரம்மையினாலும், கற்பனையை நிஜம் என நம்பும் டெலியூஷனல் டிஸார்டர்" எனும் வினோத நோயினாலும் பாத்திக்கப்பட்டிருப்பது... சொல்லப்பட்டிருக்கும் விதம், தமிழ் சினிமாவுக்கு புதுசு... என்பது இயக்குனர் விக்கி ஆனந்தை நம்பிக்கை இயக்குனர் வரிசையில் இணைத்திருக்கிறது...
அதேநேரம், ஒரு வீட்டிற்குள்ளேயே பெரும்பாலான காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதும், பிரதான கதாபாத்திரங்கள் மீண்டும் மீண்டும் அந்த வீட்டிலிருந்து தப்பித்து சிக்குவதுமான காட்சிகள் சற்றே சலிப்பு ஏற்படுத்துவதை இயக்குநர் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம். அவ்வாறு, தவிர்த்திருந்தாரென்றால் "உரு" இன்னும் பெரு வாரியான ரசிகர்களைக் கவரும் கருவாக, கதையாக, திரைப்படமாக நிச்சயம் இருந்திருக்கும்!